தேசியக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு
17.9.2026 அன்று நண்பகல் 11.30 மணியளவில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியும் பிரம்ம குமாரிகள் தியான மையமும் இணைந்து நடத்திய மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் து . பிரசன்ன பாலாஜி அவர்கள் தலைமை ஏற்று போதைப் பொருள்களின் தீய விளைவுகள் குறித்தும் அவற்றால் சமூகம் சந்திக்கும் அவலங்கள் குறிக்கும் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரியின் கலைப்புல முதன்மையர் முனைவர் சா. நீலகண்டன் அவர்கள் போதைப் பொருட்கள் மனிதர்களின் ரத்தத்தில் கலப்பதால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் சந்ததியையும் சேர்த்து பாதிப்பதை தகுந்த ஆதாரங்களோடு எடுத்துரைத்து முன்னிலை உரை வழங்கினார். பிரம்ம குமாரிகள் ஆன்மீக மையத்தின் சகோதரி தேவகி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதைப் பொருள்களின் தாக்கங்களை எடுத்துரைத்ததோடு மத்திய மாநில அரசுகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
பின்னர் போதைப் பொருள் உறுதி மொழியை அவர் வாசிக்க கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவரோடு இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக பிரம்ம குமாரிகள் ஆன்மீக மையத்தின் சகோதரர் திரு எழில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் இளைய சமூகம் சந்திக்கும் இன்னல்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கதைகளையும் நடைமுறை சம்பவங்களையும் எடுத்துரைத்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ச.கருத்தான் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் இவ்வுறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.