“காலை உணவில் பல்லி”, “உணவு தீர்ந்ததால் அருகிலுள்ள கடையில் வாங்கி வந்து மாணவர்களுக்கு வழங்கியது” போன்ற செய்திகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிதைக்கப்படுகிறதோ என்ற கவலையை அளிக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களிலேயே, முறையான திட்டமிடல், செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட திட்டம் என்றால், அது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்தான்.
இந்தியாவிலேயே முன்னோடியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில், உணவு தயாரிப்பு முதல் மாணவர்களுக்கு வழங்குவது வரை பல்வேறு நிலைகளில் கண்காணிப்பு நடைமுறைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
இத்திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட முதல் நாளிலேயே, கிருஷ்ணகிரியில் சில பள்ளிகளில் உணவு தீர்ந்ததால் மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலையும், அருகிலுள்ள கடையில் இருந்து இட்லி வாங்கி வந்து வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது, மாணவர்களின் எண்ணிக்கையை சரியாக அளவிட்டு உணவை உறுதிப்படுத்துதல், மேலும் தரத்தை உறுதிப்படுத்த குறிப்பிட சமையல் கூடங்களில் மட்டுமே உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படை செயல்முறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
அதேபோல், திருவள்ளூரில் காலை உணவில் பல்லி இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகவும் கவலைக்குரியது. ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் விரிவாக்கம் என்பது அதன் கட்டமைப்பையும் கண்காணிப்பையும் பலவீனப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
இது வெறுமனே ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஊட்டச்சத்துடன் நேரடியாகத் தொடர்புடைய விவகாரம். இத்தகைய முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஏற்படும் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள், அரசின் முன்னுரிமைகள் மாறுவதை குறிப்பதோடு, நிர்வகிக்கக் கட்டமைப்பு அழுகிக்கொண்டிருப்பதின் வெளிப்பாடாகும்.
— குண சந்திரசேகர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.