இந்த வார அங்குசம் பிளாஸ்ட்

மீண்டு(ம்) வந்த ஐ.பி.எஸ். !

தென் தமிழகத்தின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரை டார்கெட் செய்து, புரோக்கர் யூடியூபர் வீடியோ வெளியான பின்னணியில் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர், பொருளாதார குற்றம் தொடர்புடைய துறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், ஏற்கெனவே பணியிலிருந்த மாவட்டத்தின் பக்கத்து மாவட்டத்து அதிகாரியாக மீண்டு(ம்) வந்திருக்கிறார். முற்றிலும் தனிப்பட்ட விவகாரங்களையெல்லாம் பொதுவெளியில் பேசுவதோடு; கண்டவர்களிடம் காசு வாங்கிக்கொண்டும்; காழ்ப்புணர்வும் அவதூறும் கலந்துகட்டி அடிப்பது என்பதையே தனி பாணியாக வைத்திருக்கும் யூடியூபரின் பேச்சுக்கெல்லாம் அடிபணிந்து அதிகாரிகளை பந்தாடலாமா? என ஆளும்கட்சியின் மீது அதிருப்தியிலிருக்கிறார்களாம் மிடுக்கான அதிகாரிகள்.

வேத மந்திரத்தால் வந்த (எதிர்) விணை !

ஒரு கல்யாணம் இந்த அளவுக்கு அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். சொந்தக் கட்சிக்காரன்கூட, இணையத்தில் கழுவி ஊற்றுவதுதான் இதில் வேடிக்கை. மூன்றெழுத்துக் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டே, அதுவும் தலைவரையும் மேடையில் ஏற்றி இப்படி மந்திரங்களை ஒலிக்க விடலாமா? கழக வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்னர் நடைபெற்றதே இல்லை. இனியும் அந்த பொறுப்பில் நீடிக்கக்கூடாது என்ற அளவுக்கு எதிர்ப்புகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. கட்சிக்கு இப்படி பெயரை வாங்கித்தருவதற்குத்தான், கடைசி தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம்பெறாமல் போனால் எப்படி என்று கட்சித்தலைமையிடம் அடம்பிடித்தாரா? என கேள்வி எழுப்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

கேரள கஜானாவை நிரப்பும் தமிழகம் !

தமிழகத்தில் லாட்டரிக்கான தடை நீடிப்பதால், பக்கத்து மாநிலமான கேரள லாட்டரி விற்பணை சக்கைப் போடு போடுகிறதாம். தொடக்கத்தில் கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே நடந்து வந்த பிசினஸ் இப்போது குறுக்கும் நெடுக்குமாக தமிழகம் முழுவதுமே கோலோச்சுகிறதாம். பக்காவாக, வாட்சப்பில் லாட்டரி சீட்டை படம் பிடித்து அனுப்பி வைக்கிறார்களாம். கூகுள் பே வழியாக பணம் கை மாறுகிறதாம். கேரள அரசே நடத்தும் லாட்டரியால், கேரள அரசு கஜானாவை நிரப்பும் லாட்டரி பணத்தில் 30% தமிழக கஸ்டமர்களால் நிரம்புகிறதாம்.

40 நாளாச்சு … அவருக்கு என்னதான் ஆச்சு ?

40 நாட்களுக்கும் மேலாக, அந்த எம்.எல்.ஏ.வுக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிக்கிறார்கள் தொகுதிவாசிகள். தொடக்கத்தில் மருத்துமனையிலிருந்து அறிக்கையாச்சும் வந்துட்டு இருந்துச்சு. இப்போ அதுகூட இல்லை. வாட்ட சாட்டமானவருதான் மொத்த மருத்துவ செலவையும் பார்த்துக்கிறாராம். இப்படியே எத்தனை நாளைக்குத்தான் வச்சிக்கிறது? வேற இடம் பார்த்துக்கோங்கனு மருத்துவமனை தரப்பில் சொல்லிட்டாங்களாம். இக்கட்டான சூழலில் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை தவிர்க்க வேண்டுமென்றுதான் ஆளும் தரப்பு  நினைக்கிறதாம். இந்தப் படம் இன்னும் எத்தனை நாளைக்கு ஓடுமோ?

என்னத்த சொல்ல ?

சினிமா பாணியில் பஞ்ச் பேசுனது போல, எதிர்க்கட்சியை ஊழல் கட்சினு காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம். வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைச்ச கதையாக ஸ்கூல் மேட்டர் விவகாரம் சிக்க, மாஜியை வளைச்சுப் போட்டாச்சு. அடுத்து வீட்டுல கல்யாணம் வச்சிருக்க நேரத்துல கட்சியின் முதன்மையான மாஜி வீட்டுக்கும் ரெய்டு அடிச்சாச்சு. கோர்ட் – கேசு எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. சோசியல் மீடியாவுல சகட்டு மேனிக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாம நடிகைங்களோட எல்லாம் கணெக்ட் செஞ்சு ரீல்ஸ் போடுறதுதான் பெரிய தலைவலியா இருக்குனு தலையில் அடித்துக் கொள்ளாத குறைதானாம். சம்பந்தபட்ட நடிகைங்க விளக்கம் கொடுக்குற அளவுக்கு போயிருக்கு விவகாரம்.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.