இசையால் வென்ற ஆகாஷ், செம்பருத்தி – யார் இவர்கள்?
இணையத்தில் வைரலான குரலாக மட்டுமின்றி, வைரலான பெயர்களாகவும் மாறிப்போன ஆகாஷ், செம்பருத்தி. யார் இவர்கள்?
சோனி விழா – தமிழ் ஐடல் நிகழ்ச்சியில் ஒப்பாரி பாடலோடு தனது இசைப் பயணத்தை தொடங்கிய ஆகாஷ், ஒவ்வொரு எபிசோடிலும் ஆடியன்சை அழ வைக்கிறார். அடி என்னடி ராக்கம்மா … என்ற துள்ளலான பாடலை பாடி அசத்தும் அதே ஆகாஷ், பாட்டும் நானே பாவமும் நானே … என்ற கர்நாடக சங்கீதத்தில் அமைந்த பாடலையும் ஸ்ருதி விலகாமல் பாடி முடிக்கிறார். ஆடியன்சாகவே மாறி உங்கள் பாடலை ரசித்துக் கொண்டிருந்தோம் என்பதாக ஜட்ஜ்கள் மெய் சிலிர்க்கிறார்கள். பணிவும் எளிமையும் உனது அடையாளம். எப்போதும் இப்படி இரு என்கிறார் ஜட்ஜ்களில் ஒருவரான பாடகி ஆண்ட்ரியா.
மற்றொரு நிகழ்வான, ஜீ தமிழ் சரிகமப சீசன்-06 இல் நீ எங்கே என் அன்பே … பாடலோடு பயணத்தை தொடங்கிய செம்பருத்தி, மச்சானைப் பாத்தீங்களா? பாடல் உள்ளிட்டு தனது தனித்துவமான குரலால் அரங்கை கட்டி ஆள்கிறார்.

ஒவ்வொரு எபிசோடிலும் தத்தமது திறமைகளால் பார்வையாளர்களை பரவசப்படுத்திவரும் ஆகாஷ், செம்பருத்தி இருவருமே திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் வாய்ப்பாட்டுத் துறை மாணவர்கள். கர்நாடக சங்கீதம் கற்க அந்தஸ்தும் குறிப்பிட்ட சாதிய பின்னணியும் அவசியம் இல்லை என்பதில் உடைப்பை ஏற்படுத்தி; இசையின் மீதான ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் இசையில் எவரும் சாதிக்கலாம் என்றொரு நிலையை உருவாக்கியதுதான் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தனித்துவமான அடையாளம்.

அத்தகையதொரு பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள்தான் ஆகாஷூம் செம்பருத்தியும். இன்னும் சொல்லப்போனால், இந்த மேடையை முதல்முறை முத்தமிடும் முன்பாக, இவர்கள் இருவருமே ஏறத்தாழ ஆயிரம் மேடைகளை கண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் மக்கள் மேடைகள். தெருவோர பிளாட்பாரங்களையே, தங்களது அரங்கேற்றத்திற்கான மேடையாக பாவித்தவர்கள். அரசின் பல்வேறு நிகழ்வுகளிலும், அரசுப்பள்ளி நிகழ்வுகளிலும், போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்வுகளிலும், நீதித்துறையின் நிகழ்வுகளிலும், தண்ணீர் அமைப்பு உள்ளிட்ட பல தனியார் அமைப்புகள் முன்னெடுக்கும் நிகழ்வுகளிலும் மேடையேறி விழிப்புணர்வு பாடல்களை பாடியிருக்கிறார்கள். கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ஆநிரைச்செல்வன் (எ) சதீஷ்குமாரன் உருவாக்கித்தந்த மேடைகள் அத்தனையும்.
கடந்த 2025 ஆம் ஆண்டு அங்குசம் சேனல் போதைக்கு எதிராக முன்னெடுத்த, அங்குசம் சினிமா கார்னர்-2025 குறும்பட விழாவில், தனது விழிப்புணர்வு பாடல்களால் அரங்கை அதிர வைத்த ஆகாஷ் இன்று வெள்ளித்திரையில் மிளிர்ந்து நிற்கிறார்.
அரியலூர் மாவட்டம் விழுதுடையான் எனும் குக்கிராமத்தை சேர்ந்த ஆகாஷின் தந்தை பிணம் எரிக்கும் வெட்டியான். உருப்படியான வீடு கூட கிடையாது.

செம்பருத்தி, திருச்சி துறையூர் – பச்சைமலையில் அமைந்த போந்தை எனும் மலைக்கிராமத்தை சேர்ந்தவர். பழங்குடியினப் பெண். இசையின் மீதான காதலால், கலைக்காவிரியே கதியாய் கிடந்து வாய்ப்பாட்டில் பட்டம் பெற்றவர். அந்த மலைக்கிராமத்துக்கே அவள்தான் முதல் தலைமுறை இசை பட்டதாரி. திருமணம் கைகூடும் வரையிலும்கூட, அவரது இசைக் கனவு கைகூடவில்லை.
ஏமாற்றங்களோடு திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தார். திருமணத்தின்போது அவர் எதிர்கால கணவரிடம் முன்வைத்த ஒரே நிபந்தணை, “கல்யாணத்துக்குப்பிறகு என்னை பாட விடுவீர்களா?” அவர் ஆம் என்று தலையசைத்திருந்தாலும், அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள். இசைப்பயணத்தில் நீண்டதொரு இடைவெளி. ஆனாலும், இசைக்கனவை மட்டும் அவர் மனதிலிருந்து ஒருபோதும் இறக்கி வைக்கவே இல்லை.
ஆயிரம் மேடைகளை கண்டிருந்தாலும், பல்லாயிரம் கைத்தட்டல்களை பெற்றிருந்தாலும் அவ்வளவு எளிதாய் இவர்களுக்கான அங்கீகாரம் வந்து சேர்ந்துவிடவில்லை. மிக மிக தாமதமாகத்தான் ஆகாஷுக்கு வந்து சேர்ந்தது அரியலூர் மாவட்ட கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட ”கலைவளர்மணி” அங்கீகாரம்.
ஆகாஷ், செம்பருத்தி இருவருமே வாழ்நாள் ஏக்கமாய் ஏங்கித்தவித்த அந்த பொன்னான வாய்ப்பை இருகப்பற்றிக் கொண்டார்கள். தனித்துவமான திறமைகளால் இன்று நம் எல்லோரையும் இசையால் கட்டி ஆள்கிறார்கள்.
விரும்பிய பாடலை, விரும்பிய நேரத்தில் கேட்பதற்கு மின்சாரமே இல்லாத மலைக்கிராமத்தில் ரேடியோவில் ஒலித்த பாட்டைக் கேட்டு இசை ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட பழங்குடியினப் பெண்மணி செம்பருத்தியின் அடையாளமும் இசையால் இன்று மாறியிருக்கிறது.
இதுவரையில், பிணம் எரிக்கும் வெட்டியான் மகன் என்ற அடையாளத்தோடு வலம் வந்த ஆகாஷ், இனி பின்னணி பாடகர் ஆகாஷ். எந்த சாதி பிணமானாலும் எரிந்த பின்னர் அது வெறும் அஸ்தி – சாம்பல் அவ்வளவுதான். ஆனாலும், வெட்டியான் மகன் என்ற அடையாளத்தை அவ்வளவு எளிதில் எரித்துவிட முடியுமா என்ன?
இதோ, இசைக்கு அப்படி ஒரு பின்புலம் தேவையில்லை என்பதைத்தான் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், மக்களிசைக் கலைஞர்கள் ஆகாஷூம் செம்பருத்தியும்!
– இளங்கதிர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.