வரம்பு மீறும் தமிழ்நாடு ஆளுநர் ! கொதிநிலை அரசியல் !
வரம்பு மீறும் தமிழ்நாடு ஆளுநர் ! கொதிநிலை அரசியல் !
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி பேசிவரும் ஒவ்வொரு செய்தியும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றது. சர்ச்சை மிகுந்த பேச்சுகளைப் பேசித் தமிழ்நாட்டை எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்கிறார் என்றும், ஆளுநர் RSS இயக்கத்தின் நோக்கங்களைத் தமிழ்நாட்டில் திணிக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக தவிர ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் முன்வைக்கின்றன. ஆளுநர் பதவி என்பதும் ஓர் உயரிய பதவி. அதன் பெருமையைக் காப்பாற்ற ஆளுநர் ஆர்.என்.இரவி முன்வரவேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும்
முன்வைக்கப்படுகின்றன.
“ஆளுநருக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. அவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. அவரை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது” என்று வலதுசாரிகள் கூறி வருகின்றனர். ஒரு மாநில ஆளுநருக்கு உள்ள உரிமைகள் என்று இந்திய அரசியல் சாசனம் பின்வருவனவற்றை வரையறுத்துள்ளது. அவை:
-
ஆளுநர் மாநிலத்தின் ஆட்சித் தலைவர். அவருக்கு ஆலோசனைகள் வழங்க முதல் அமைச்சர் தலைமையில் அமைச்சரவை இருக்கும்.
-
மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவரை முதல் அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைப்பார். மாநில அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து, முதல் அமைச்சரின் ஆலோசனையின்படி அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கி அறிவிப்பு வெளியிடுவார்.
-
மாநிலச் சட்டமன்றம் இயற்றும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தரவேண்டும். சட்ட முன்வடிவில் தேவையான திருத்தங்களைக் கூற ஆளுநருக்கு உரிமை உண்டு. சட்ட முன்வடிவுகளை அமைச்சரவைக்கு ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்பும் உரிமையும் உண்டு. மறுமுறை திருப்பி அனுப்பும் உரிமை கிடையாது. ஒப்புதல் தந்ததாக வேண்டும்.
-
ஆளுநர் சட்டமுன்வடிவுகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காகக் காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
-
ஆளுநர் மாநிலப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகச் செயல்படுவார். ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை (3 பேர் அடங்கிய பட்டியலில் ஒருவரை) தேர்வு செய்வார்.
-
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது நடைபெறும் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்கு மட்டும் ஆளுநர் தலைமை தாங்கி, பட்டம் பெறும் மாணவர்களுக்கான ஒப்புதலை வழங்குவார்.
-
துணைவேந்தர்களைப் பொறுப்பிலிருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். “இப்படிக் கூட்டங்களைக் கூட்ட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேவையெனில் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராய் உள்ள உயர்கல்வித் துறை அமைச்சரின் ஆலோசனையின்படி வேண்டுமானால் கூட்டத்தை ஆளுநர் கூட்டலாம்” என்று பத்திரிக்கையாளர் ஜென்ராம் குறிப்பிடுகின்றார்.
ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசும்போது,“தமிழ்நாட்டில் கல்வித் தரம் குறைந்துவிட்டது. பாடத் திட்டங்களில் நவீன பாடங்கள் இடம் பெறவேண்டும். மாணவர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் பாடங்கள் கற்பிக்கப்படவேண்டும். மேலும், மாணவர்களுக்குத் திறன் சார் கல்வி தரப்படவேண்டும். மாணவர்களுக்குப் பட்டமேற்படிப்பு தாய்மொழியில் வழங்க வகை செய்யப்படவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவில் உள்ள 100 உயர்கல்வி நிறுவனங்களில் 35 உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை சிறப்பாகச் செயல்படுகின்றன என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அண்மையில் அறிவித்துள்ளது. மாணவர்களுக்குச் சிறப்பான கல்வி வழங்கவேண்டும் என்றால் ஆளுநர் ஆலோசனைப்படி ஆளுநரால் வழங்கமுடியுமா? மாநில அரசுதானே வழங்கமுடியும். ஆளுநர் தன் கருத்தை அரசுக்குத் தெரிவிக்கலாம். அதைவிடுத்துத் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை வழங்குவது என்பது ஆளுநர் தன் அதிகார வரம்பை மீறிச் செயல்பட நினைக்கிறார் என்றே கருதவேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் தொடர்ந்து பேசும்போது,“வெளிநாடுகளுக்குச் சென்று மாநிலத்தின் தொழில்வளத்தைப் பெருக்கமுடியாது. எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் என்றால் எல்லோரும் வந்துவிட மாட்டார்கள். அதற்கான சூழ்நிலையை முதலில் உருவாக்கவேண்டும். தொழில்திறன் சார்ந்த மாணவர்களை அரசு உருவாக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் வெளிநாடு சென்று வந்தால் தொழில் வளம் பெருகாது” என்று கூறி, அண்மையில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்கப் பயணம் செய்து, ஆயிரக்கணக்காகக் கோடிகளை ஈர்த்து வந்த நிலையில் ஆளுநரின் இந்தப் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளக்கப்பட்டுள்ளது. “ஒரு மாநில முதல்வரை விமர்சிக்க ஆளுநருக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. ஆளுநர் தன் வரம்பை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் தமிழ்நாட்டைவிட்டு விரட்டப்படவேண்டும்” என்று கோபம் கொப்பளிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆற்றிய உரை தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தொல்.திருமா. இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹருல்லா, ஆதித்தமிழர் பேரவையின் அதியமான் போன்ற பல்வேறு அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள் ஆளுநரின் உரை வரம்புமீறியது என்று கருத்து தெரிவித்துள்னர். ஆளுநர் மாநில நலன் சார்ந்தே செயல்படவேண்டும். தன் வரம்பை மீறிச் செயல்படக்கூடாது என்ற பொதுமக்களின் கருத்துகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆளுநர் சர்ச்சை மிகுந்த பேச்சுகளை நிறுத்திக்கொள்வாரா? தொடர்ந்தால் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரின் நடவடிக்கைகளை மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் முடிவு செய்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
– ஆதவன்