விடுதலைக்களத்தின் சிம்ம சொப்பனம் – ஆங்சான்சூச்சி ( 8 )
கண்ணெதிரே போதிமரங்கள்! ( 8 ) (அறியவேண்டிய ஆளுமைகள்)
மரணப்படுக்கையில் இருக்;கிற தம் கணவரைப் பார்க்கப் போனால், தம் சொந்த மண்ணுக்குத் திரும்ப இயலாது. எனக்கும் என் போராட்டத்துக்கும் அத்துனை துணையாய் இருந்தவரை யாருமற்ற அநாதையாக மரணிக்கவிடுவது சரி இல்லை என்றாலும், தாய்நாட்டை இழந்துவிட்டு அவரைப் பார்ப்பதற்காக நான் வருவதை அவரே விரும்பமாட்டார். தேசமேதான் பெரிது. தேசத்துக்காகத்தானே அப்பாவை இழந்தோம். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றொம். அம்மாவைத் தவிக்க விட்டு விட்டு ஏதிலியாய் நாடு கடந்தோம். ஆகவே நான் அவரைப் பார்க்கப் போவதில்லை என்கிற உறுதியான மனதுடன் முடிவைச் சொல்லி விடுகிறார் ஆங்சான் சூச்சி.
ஆங்சான் சூச்சி என்றவுடனே ஒரு பரபரப்பு சூழ்ந்து கொள்ளும். ஒரு ஈர்ப்பு ஒட்டிக் கொள்ளும். இங்கிலாந்து அரசில் பர்மாவின் (இன்றைய மியான்மர்) பிரதமராக இருந்தவரும், பின்னாளில் மியான்மரில் மக்களாட்சி ஏற்படப் வேண்டுமெனப் போராடிய போராளியுமான ஆங்சானின் மகள்தான் இந்த ஆங்சான் சூச்சி.

ஆங்சான் சூச்சி 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். இவருக்கு இரண்டு வயது மட்டுமே நிரம்பியிருந்தது. தம் வாயைத் திறந்து அப்பா என்று கூட அரையும் குறையுமாகச் சொல்லிக் கொண்டிருந்த நேரம். மக்களாட்சிக்காகப் போராடிக் கொண்டிருந்த அவர் தந்தை சுட்டுக்கொல்லப்படுகிறார். தந்தையின் மறைவுக்குப் பிறகு மியான்மரிலே தாய் இருந்துவிட, பிழைப்புக்காகவும், கல்விக்காகவும் சிதறி விடுகிறது ஆங்சானின் குடும்பம்.
1948 ஜனவரி 04 அன்று பிரிட்டனிடமிருந்து பர்மா (மியான்மர்) விடுதலையாகிறது. இலட்சியப்பிடிப்பெல்லாம் பெரிய அளவில் முகிழ்க்காத அந்த வயதில் கல்வி கற்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார் சூச்சி. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் அதற்குப் பிறகு அமெரிக்காவிலும் தம் படிப்பை நிறைவு செய்தார்.

திபெத்திய பூட்டான் பண்பாட்டு ஆய்வாளரும் அறிஞருமானான பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் (என்பவரைக் காதலித்து 1972 ஜனவரி 01 அன்று திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இலண்டனில் அமைதியான ஒரு குடும்ப வாழ்க்iகையைத் தொடங்கினார்.
தொடர்ந்து உடல் நலமில்லாமல் இருக்கும் தன் தாயைக் காண்பதற்காக மியான்மருக்கு வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய் மண்ணில் காலடி வைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடு முழுவதும் வறுமையும், ஏழ்மையும் நிரம்பி வழிந்தன. ஏழை நாடுகளின் பட்டியலில் முதலிடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. மியான்மர் உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைக் கண்ட அவர் மனவேதனை அடைந்தார்.
தேசத்திற்காக குடும்பத்தை சிதறவிட்டுவிட்டு தானும் செத்துப் போன ஆங்சானின் மகளாகிய நான் எந்தப் பொறுப்பும், சலனமும் இன்றி இலண்டனில் கணவர், குழந்தைகள் என வாழ்ந்து கொண்டிருக்கிறேனே எனத் தமக்குள்ளே கேட்டுக் கொண்டார்.

தேச விடுதலைக்காகப் போராடிய ஐந்தாயிரம் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதே ஒரு செய்தி அவருக்கு வந்தது. அப்படியே நொறுங்கிப் போய்விடுகிறார். இறுக்கமாய் அமர்ந்தவர் தெளிவாய் ஒரு முடிவை எடுக்கிறார். இனி எனது வாழ்நாள் எனது நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதற்கே கொடுக்கப்படுகிறது அச்சுறுத்தல்கள் அவரை நெருங்குகின்றன.
இலக்கில் உறுதியாக நின்ற சூச்சி, 1988 செப்டம்பர் 27 இல் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்னும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பொதுச்செயலாளராகப் பதவியேற்கிறார். மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அக்கட்சிக்கு அதிகரிக்கிறது.
1988 டிசம்பர் இறுதியில் அவருடைய தாய் மரணமடைய, 1989 ஜனவரி 02 இல் தன்னுடைய தாயாரின் இறுதிக்கிரியைகளைத் தானே முன் நின்று நடத்தி முடிக்கிறார். இராணுவ ஆட்சியாளர்கள் சூச்சியை நாட்டை விட்டு வெளியேற்ற பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் சூச்சி மிக தைரியமாக அடித்து நொறுக்குகிறார்.
இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள், நான் இல்லாவிட்டால் இன்னொருவர் என்றைக்காவது இந்த மியான்மர் மண்ணில் ஜனநாயகக் கொடி பறந்தே தீரும் சூளுரைக்கிறார்.
கோபமடைந்த இராணுவ ஆட்சியாளர்கள், சூச்சியை சிறையில் வைப்பது என்கிற ஒரு முடிவை எடுக்கிறார்கள். கைதாவதற்கும், அதன் பிறகான விடுதலைக்கான போராட்டங்களுக்கும் சூச்சி வியூகம் வகுக்கிறார்.

ஆனால் இரானுவ ஆட்சியாளர்கள் அவரை அவர் வீட்டிலேயே தனிமைச்சிறையில் வைப்பது என்கிற புதிய முடிவைச் சொல்லி, 1989 சூலை 20 இல் அவரை வீட்டுக்காவலில் வைக்கிறார்கள்.
யாரையும் சந்திக்க அனுமதி இல்லை என்று ஒற்றைக் கட்டுப்பாட்டை மட்டும் கூறிவிட்டு, சொல்லப்படாத பல நெருக்கடிகளைத் திணிக்கிறார்கள். அவரைத் தனிமைச் சிறையில் மன நோகப்படுத்தி நாட்டை விட்டு வெளியேற்ற சொல்லொன்னாக் கொடுமைகளைச் செய்கிறார்கள். தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது. சேதமடைந்த, பழமையான அந்த வீட்டிற்கு மட்டும் பல நேர மின்சாரத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரண்டு வயதான பெண்கள் மட்டும் உதவிக்கு என்ற நிலையில் தனிமைச் சிறை வாழ்க்கை நகர்ந்தது.
ஆனால் நம்பிக்கையை ஒரு துளி கூட இழக்காத சூச்சி, ஜனநாயக முறையில் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். போராடிப் பெற்ற கடிதம் எழுதும் உரிமையை போராட்டத்திற்கான வழியாக்குகிறார். நிச்சயம் ஒருநாள் வெல்வோம் என்ற நம்பிக்கையையும், போராட்ட உறுதியையும் கடிதங்கள் வழியாக மக்களிடம் வளர்க்கிறார்.
புற்றுநோயினால் துன்பப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த தனது கணவரைக் காண விரும்பிய சூச்சிக்கு மியான்மர் அரசு அனுமதி மறுத்தது. அதன் பிறகு, இலண்டனில் இருக்கும் உங்களது கணவரைப் பார்க்கச் செல்ல அனுமதி தருகிறோம். ஆனால் எக்காரணத்திற்காகவும் மியான்மருக்குத் திரும்பி வரக் கூடாது எனக் கடுமையான நிபந்தனை போட்டது. கணவரா, தேசமா என்ற கேள்விக்கு முன் தேசமே பெரிதென முடிவெடுத்த சூச்சி, கணவர் இறக்கும் வரை அவரைப் பார்க்காமலே இருந்தும்விட்டார். அதே போல அவர் குழந்தைகளையும் பல ஆண்டுகளாக பார்க்க முடியாத நிலையே நீடித்தது.
1990 ஆம் ஆண்டு மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்த இவர் 485 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்தார். தேர்தல் முடிவு இராணுவத்தினரைத் திடுக்கிட வைத்தது.
485 இடங்களில் போட்டியிட்ட மக்களாட்சிக்கான தேசிய அமைப்புக் கட்சி 59 சதவீத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் இடங்களில் 81 சதவீத இடங்களை அதாவது 392 இடங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.
இராணுவ ஆட்சியாளர்;கள் அதிர்ச்ரி அடைந்தனர். அவரை ஆட்சி பீடத்தில் ஏறவிடக் கூடாது என்பதற்காக, வெளிநாட்டுக்காரரை மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்று சொல்லி, நடந்து முடிந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்ததுடன் ஜனநாயக லீக் கட்சியையும் தடை செய்தனர். மேலும் போட்டிக்காக 32 புதிய கட்சிகளைப் பல்வேறு பெயர்களில் வளர்த்துவிடும் சூழ்ச்சியிலும் ஈடுபட்டது. ஆனால் மக்களின் ஆதரவு முன்பை விட அதிகமாக கிடைக்கத் தொடங்கியது.

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தனிமைச்சிறை வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட ஆங்சான் சூச்சிக்கு
- 1990 இல் ராஃப்டோ பரிசு வழங்கப்பட்டது.
- 1991 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1992 ஆம் ஆண்டு இந்தியா ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசை வழங்கி கொரவித்தது.
- 2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைக் குடிமகளாக அறிவித்தது.
நோபல் பரிசு பெற்ற சூச்சிக்கு உலக நாடுகளின் பார்வையில் விழ ஆரம்பித்தார். சூச்சியை விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடிக்கும், கட்டாயத்திற்கும் உள்ளானது மியான்மர் இராணுவ அரசு. மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை கையிலெடுத்தமையால், 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பெரும்பான்மையான ஆண்டுகள் வீட்டுக்காவலிலே இருந்த இவரை வேறு வழியின்றி 2010 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று இராணுவம் இவரை விடுதலை செய்தது.
ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்;பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது கடந்த 1990 ஆம் ஆண்டு ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்ததால் அதைப் பெற இயலவில்லை. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விருதினை 2013 இல் ஆங்சான் சூச்சி நேரில் பெற்றுக் கொண்டார்.
ஆங்சான் சூச்சி விடுதலையான போது அவருக்கு வயது 65. நாடி, நரம்புகள் தளர்ந்து வாடி வதங்கிப் போன இவர் இனி என்ன செய்யப் போகிறார் என்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விடுதலைக் களத்தில் இன்னுமதிகமாக சுழலத் தொடங்கினார்.
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்