சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)
தாயின் கருப்பையில் இருந்து விலங்காக விழக்கூடிய உயிரை மனிதராக மாற்றித்தருவது கல்வி என்பார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள். ஆம் கல்வி மட்டுமே மனிதனை முழுமையாக்கும் ஆற்றல் மிக்கது.
வெள்ளத்தால்அழியாது வெந்தழலால்
வேகாது, வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது, கொடுத்தாலும்
நிறைவன்றிக்குறைவுறாது,
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிக எளிது கல்வியென்னும்
உள்ள பொருள் உள்ளிருக்கப் புறத்தேயார்
பொருள் தேடி உழல்கின்றீரே!
என்கிற தனிப்பாடல் கல்வியின் மேன்மையைக்குன்றென நின்று விளக்குகிறது. பிழைக்கச் சொல்லித்தரும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் வாழச் சொல்லித் தரும் மகத்துவமிக்க மாமனிதராக தன்னை மகரந்தப்படுத்தி, ஆழமாய் வேரூன்றி, அடர்த்தியாய் பரவி, நீள அகல உயரமாய் விரிந்து காட்சி தரும் போதி மரத்தின் நிகழ்கால பெயர் கவிஞர் தங்கம் மூர்த்தி .
- அமுத சுரபி, அட்சய பாத்திரம் என்கிற சொற்களுக்கு தமது செய்கையால் தினம் தினம் புத்துயிர் தருகிற பெருமகன்.
- கிடைக்கிற நேரத்தை சமூகத்தை படைக்கும் மாணவச் சமூகத்திற்கு அர்ப்பணித்து வளர்வதன் பாதியில் நீர் ஊற்றும் மகிழ்வைத் தமது செயல்களால் பலப்படுத்துபவர்.
- அறிவுடைய ஆன்றோரை திகைப்பூட்டும் விவேகம் இவர்பட்டறையில்வளந்தஇ வளரும்மாணவர்களின் தனித்துவம்.
- செங்கரும்பு சாறும்இ உச்சிமலைத் தேனும்இ கற்கண்டுப் பாகும்இ தமிழனோடு தமிழச்சி ஆக்கி தின்னும் கூட்டாஞ்சோறும் நாவிலே படுகிறபோது ஏற்படுகிற சுவை உணர்ச்சியைத்தம் சிம்ம குரலின் வழியாகப் பந்திப் பரிமாற்றம் செய்கிற வாய்மையும் வலிமையும் நிறைந்த எங்கள் தலைமகன்.
கல்வி வழி மனிதம் வளர்க்கும் பெருந்தகையோருக்கு நல்லாசிரியர் விருதளித்து வாழ்த்துவது நம்மரபு. தேசிய நல்லாசிரியர் விருது போலவே மாநில நல்லாசிரியர் விருது தமிழ்நாடு அரசாலும், அன்பாசிரியர், பண்பாசிரியர், ஆசிரியர் செம்மல் என பல அமைப்புகளாலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. சில கல்வியாளர்கள் மாநில மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஒதுங்கே பெற்று விருதுக்கேப் பெருமை சேர்க்கின்றனர். அத்தகைய பெருமைக்கு உரியவர்தான் புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர். அவர் நல்லாசிரியர் என்பது அனைவரும் அறிந்ததே.
குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்
அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே(நன்னூல் 26)
என நன்னூலார் கூறும் நல்லாசிரியருக்கான இலக்கணம் இவருக்குள் நூறு சதவீதம் பொருந்திப்போவது வியப்பின் குறியீடாகவே அமைகிறது.
குடிப்பிறப்பு
குடிப்பிறப்பு என்பது பண்டைய இலக்கியங்கள் பல குறிப்பிடும் மதிப்பீடுகளுள் முதன்மையானது. நீதி நூலாசிரியர்களின் அறச்சிந்தனைப்படி நற்சிந்தனை, நல்லொழுக்கம், நற்சொல் இவை ஒருங்கே அமையப்பெற்ற பெற்றோருக்கு பிள்ளையாய் பிறப்பதே குடிப்பிறப்பின் பெருமை. ஒரு மனிதர் அன்பாய் இருக்கிறார் அது அவரது பெற்றோரின் மாண்பு. மாண்புமிக்க பெற்றோர் டாக்டர்கே.கே.தங்கம், ஜெயலெட்சுமி இணையருக்கு மகனாய் பிறந்தது தான் கவிஞர் தங்கம் மூர்த்தியின் தவம். அன்பால் அனைவரையும் அரவணைத்துக் கொள்கிற பெற்றோரின் மாண்பு இவருக்கும் வாய்த்த்து இவருக்குக் கிடைத்த வரம். எதிர்ப்படும் மனிதர்களின் இதயத்தில் எத்தனை அறைகள் இருக்கிறதோ அத்தனை அறைகளையும் அன்பால் நிரப்பிக்கொள்ளும் ஆற்றலால் உயர்ந்து நிற்கிறார்.
அருளுடைமை – இறைப்பற்று
கண்கள் பணிக்கிறபோது துடைத்து விடுவதற்கான கரங்களாய் கவிதைகளைப் பிரசவித்த இந்தக் கவிஞன் இறையருளை மனிதத்தில் தேடுகிறார் என்பதற்கு இவர் கவிதைகளே சாட்சி. எந்திரச்சந்தையில் முகவரி தொலைத்து, முதல் தொலைத்து இறுதியில் முகமும் தொலைத்து, தொலைத்தல் மட்டும் தொலையாதிருக்கிற புரையோடிப்போன சமூகப்புண்களைக் கீறிக் குணப்படுத்த ஆயுதங்களாகவும் தம் கவிதைகளை அள்ளி எறிந்தவா் என்பது கவிதைத்தமிழ் வரலாற்றுப்பக்கங்களின் கல்வெட்டு வரிகள்.
தேவாலயத்து கற்கண்டோ
பள்ளிவாசல் சர்க்கரையோ
பெருமாள் கோவில் பொங்கலோ
எதுவென்றாலும் இனிப்பாய் இருக்கிறது அதில்
அன்பை கலந்தால் அமுதமாகிறது
மதத்தை கலந்தால் விஷமாகிறது
மதத்திற்கு மதம் பிடித்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிற இந்தக் கவிதையை வாசிக்கிறபோது “அவரவா் மதக்கொடிகள் அசையட்டும் அழகாய்… வெறி என்னும் நெருப்புக்கு விசிறியாக அல்ல… களைத்தவா் வாழ்வில் கலங்கரை விளக்கமாய். எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கின்றன… அந்த அன்பை அடகு வைத்தா ஆயுதம் வாங்குவது?”என்று எப்போதோ வாசித்த ஒரு கவிதையின் அறச்சினம் இதயக்கூட்டில் எட்டிப்பாா்க்கிறது.
தேர்ந்த அறிவு – கற்பிக்கும் சொல்வன்மை
ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அா்ப்பணி என்னும் சொற்றொடருக்கு ஏற்ப தம் வாழ்க்கையைத் தகவமைத்துக் கொண்டவா் தங்கம் மூா்த்தி. அன்னைத் தமிழ்மொழிக்குத்தம் விரல் வழி, குரல் வழி அணி செய்கிறாா் என்பதற்கு அவா் பெற்றுள்ள தமிழ்ச்செம்மல் விருதும் சாட்சி சொல்லுகின்றன. பொய்கையில் குளிா்ந்து, பூக்களின் மணம்வீசி, புல்லாங்குழலில் இசையாகும் காற்றுபோல தம்தேர்ந்த அறிவால், கற்பிக்கும் சொல்வன்மையால் உயர்ந்து அணிசேர்ப்பவர் கவிஞர் தங்கம் மூர்த்தி.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்
என்ற வள்ளுவனின் எழுத்தாணியின் கீறலுக்கு இலக்கணமாக வாழும் நேர்த்தியின் நிகழ்காலப் பெயாரல்லவா இவர். கற்பிக்கும் சொல் வன்மையை குரல்வழி செவிகளுக்கும் விரல்வழி கண்களுக்கும் தந்து பாரமான மனதையும் நேர்த்தியாய், கீர்த்தியாய், பூர்த்தியாய் ஈரமான இதயமாக்கும்தேர்ந்தஅறிவுஇவரின்தனித்துவம். மேடைகளில் உரையாற்றும்போது இளம் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோளிடும் இவர் மாண்பு போற்றுதலுக்குரியது.
மாட்சிமைமிக்க குணங்கள் – உலகியலறிவு
மாட்சிமை மிக்க குணமுடையவர்கள் கவிஞர்கள், மனித நேயத்தின் தூதுவா்கள் கவிஞா்கள் என்பதை இவரின் கவிதைகள் வரிசை கட்டி முரசறிவிக்கின்றன. கவிஞா்களை பாராட்டாலும், விமா்சனத்தாலும் அரவணைத்து, அவா்களுக்கு உத்வேகம் தரும் இதயக்கிழக்குக்குச் சொந்தக்காரரான இவா், மனிதர்களை உருவாக்குவதிலும், மாமனிதர்களை பரவலாக்குவதிலும் இவர் சிகரங்களின் சிகரம் என்பதற்கு புதுக்கோட்டையில் இவர் நடத்திக்காட்டிய ‘கவி ஊர்வலம்’ நிகழ்வும், புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் விருதுகளும், மாமனிதரட சீனு சின்னப்பா அவர்களுக்கு விழா எடுத்தமையும் தோரணங்களாக நின்று சாட்சி தருகின்றன.
இதயத்தின் எல்லைகளுக்குள் சுவர் எழுப்பி உள்ளுக்குள்ளேயே புதைந்து போகிற இளையோரின் விரலைப்பிடித்து, தோளைப்பற்றி அவா்களுக்கான வாய்ப்புகளைத் தந்து வெற்றியின் சிகரங்களுக்கு அழைத்துச் செல்லும் மனிதநேயமிக்க படைப்பாளி இவா். அதனால்தான் அவருடைய இந்தப் படைப்பு சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கையை இவர் கவிதைகள் பதியம் போட வைத்திருக்கின்றன. சொற்களைத் தூரிகைகளில் நடனமாட வைத்த தங்கம் மூா்த்தியின் ஒவ்வொரு கவிதைகளும் சாட்டையைக் கையில் எடுக்கிற வேட்கையில் தொடங்கும். சுழட்டுகிற வேகத்தில் வீரியமாகி, விழுகிற அடியில் வேங்கையாக மாறி நிற்கின்றன.
இன்னும் பல கோடி மக்களை நீங்கள் கொண்டாடி மகிழ நல்லஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். என்றும் மகிழ்ந்திருங்கள் அண்ணா என இவர் பிறந்தநாளுக்கு எழுத்தாளர் நயினார் வாழ்த்துகிறார். இவர் நலமாக இருந்தால் எண்ணற்றோர் நலமாக இருப்பார்கள் என்பதுதானே இதற்குப்பொருள். அதியன் இன்றிருந்தால் நெல்லிக்கனி ஔவையாருக்கு கொடுக்கப்படாமல் கவிஞர் தங்கம் மூர்த்தி கரங்களுக்கே சென்றிருக்கும்.
பார்த்தல் என்பது உற்றுப்பார்த்தலாக, கேட்டல் என்பது செவிகொடுத்தலாக, பேசுதல் என்பது உள்மனதோடு பேசுதலாக நம்முடைய மனம் பரந்த மனமாக மாற வேண்டும். அப்படி பரந்த மனத்தை எல்லோரிலும் உருவாக்க வாசித்தலையும்இ யோசித்தலையும் ஏணியாகவும் தோணியாகவும் முன்மொழிபவா் கவிஞா் தங்கம் மூா்த்தி. சிலர் சொல்லால் உயர்ந்திருப்பா். சிலா் செயலால் சிறந்திருப்பா். சொல்லாலும் செயலாலும் சிறந்தும் உயர்ந்துமிருக்கிற தங்கம் மூர்த்தி நல்லாசிரியருக்கான விழுமியங்களாகத் தம்மையே மாற்றி எண்ணற்றோருக்குத் திசைகாட்டியாக வாழ்கிறார் எனச் சத்தியமடித்துச் சொல்லலாம்.
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்