அதிகாலை 4 மணிக்கு த.வெ.க. விஜய் செய்த யாகம் !
தடைகளை நீக்கவும், எதிர்ப்புகளை முறியடிக்கவும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் ‘சத்ரு சம்ஹார பூஜை’ யை திருச்செந்தூரில் நடத்தியிருக்கிறார், த.வெ.க. தலைவரும் நடிகருமான ச.ஜோசப் விஜய். ஏப்-28 அன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஆளாக வந்து இந்த பூஜையில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார், அவர். வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்த விஜய்க்கு கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் பிரசாத்துடன் ‘வேல்’ ஒன்றையும் வழங்கி வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.
தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், த.வெ.க. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையை பிடிக்கும் என்பதாக, சமூக வலைதளத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாகம் கவனத்தை பெற்றிருக்கிறது.
ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ ராதன் பண்டிட் என்பவர் விஜய் எப்படியும் 150+ சீட்டுகளை பிடித்துவிடுவார் என்று அவர் கொடுத்து வாக்கையடுத்தும், அவரது ஆலோசனைப்படியும், அவரது முன்னிலையிலும்தான் இந்த யாகத்தை விஜய் நடத்தியிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ ராதன் பண்டிட் இதற்கு முன்னர், 2019-ல் பிரியங்கா காந்தி பிரதமர் ஆவார் என்றும்; 2021-ல் கமலஹாசன் முதல்வர் ஆவார் என்றும் ’மிகத்துல்லியமாக’ கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதே யாகத்தை இதே திருச்செந்தூரில் இதற்கு முன்னர் செல்வி ஜெயலலிதா, சசிகலா, மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச, டி.டி.வி. தினகரன், திவாகரன், சுதாகரன் வரிசையில், இறுதியாக கடந்த 2023 இல் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ‘சத்ரு சம்ஹார பூஜை’யை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உலகம் இன்னுமா நம்மை நம்புதுன்னு வடிவேலுவின் அல்டிமேட் டயலாக் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல!








Comments are closed, but trackbacks and pingbacks are open.