ஆதவ் அர்ஜுனா என்ற சுனாமி…
நான் சென்ற மாதம் சொன்னதுதான் நடந்துள்ளது. ஆனால் விஜயின் 107 தொகுதி வெற்றிதான் பெரும் ஆச்சர்யம்.
விஜயின் வெற்றியில் அதிமுக ஓட்டுக்கள் தான் அதிக பங்கு. திமுக ஓட்டு வங்கியில் கொஞ்சம் சென்றாலும் பெண்களின் ஓட்டு திமுகவிற்கு என்பதால்தான் இரண்டாம் இடம் பிடித்தது.
நான் பலமுறை சொன்னது போல் எடப்பாடியார், கொஞ்சம் கலைஞர் கருணாதிநியின் கொள்கையை கடைப்பிடித்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக வந்திருக்கும்.

எடப்பாடியார் யார் யாரை எல்லாம் வெளியே அனுப்பினாரோ, அவர்கள் எல்லாம் சட்டசபைக்கு வேறு கட்சிகள் மூலம் வந்து விட்டார்கள். டிடிவி தினகரனுக்கும் எடப்பாடியாருக்கும் இல்லாத விரோதமா, குரோதமா.. ஆனால் அவர்கள் இருவரும் மறப்போம் மன்னிப்போம் என ஒன்று சேர்ந்தார்கள். டிடிவி தினகரனுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை விட ஓபிஎஸ்க்கு தேவர் சமூக மக்களிடம் செல்வாக்கு அதிகம். செங்கோட்டையனுக்கு பெரிய செல்வாக்கு கிடையாது. அதே நேரம் அவர் எல்லாம் ஒரு பலம். எடப்பாடியாரால் வெளியேற்றப்பட்டவர்கள் இன்று அதிமுகவில் இருந்திருந்தால் இன்று சிவி சண்முகம், வேலுமணி தனி அணியாகப் பிரிந்து இருக்க மாட்டார்கள்.
தேர்தல் முடிவு திமுக ஆட்சி பறி கொடுத்தும், காங்கிரசில் இருந்து ஒருவர் திமுகவில் இணைகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்சியை வளர்க்கும் எண்ணமே இல்லாது இருந்ததுதான் மிகப் பெரிய தவறு.
அண்ணா தனக்குப் பின் அடுத்த வாரிசாக பல பேரை வைத்துச் சென்றார். கலைஞர், ஸ்டாலினுடன் பல இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்துச் சென்றார். ஜெயலலிதா தனக்கு அரசியல் வாரிசுகளை வளர்க்கவில்லை என்றாலும் தன் மரணம் வரை சிங்கமாகவே இருந்தார். எடப்பாடியார் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டே இரண்டு பேரைத்தான் அதிமுகவில் சேர்த்தார்- ஒருவர் கவுதமி, மற்றொருவர் லீமா ரோஸ்.
லீமா ரோசை புரட்சித் தலைவி தட்டி வைத்திருந்தார். அதே லீமா ரோஸ் தனது பணபலத்தைக் காட்டி அதிமுகவில் சேர்ந்து சட்டமன்றத்திற்கும் வந்து விட்டதோடு, சிவி சண்முகம் அணிக்கு தலைவி லீமா ரோஸ் என்று ஊர் பேசுகிறது.
ஸ்டாலின் கடந்த பத்து ஆண்டுகளில் ஏகப்பட்ட இளம் இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கி ஆட்சியில் அவர்களை அமைச்சர்களாக்கி அவர்களின் ஏகோபித்த இளம் தலைவராக உதயநிதியை உருவாக்கி விட்டார்.

எடப்பாடியார் இந்த முறை வென்று சட்டமன்ற உறுப்பினராக வந்ததால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. ஒருவேளை தேர்தலில் தோற்றிருந்தால் எடப்பாடியாரின் நிலைமை ஓபிஎஸ்க்கு ஏற்பட்ட நிலையாக ஆகியிருக்கும்.
தேர்தல் கூட்டணி தவறுகள், தேர்தலில் இந்த முறை அதிமுகவும் திமுகவும் பாஜகவும் கூட்டணியில் கோட்டை விட்டு விட்டது. இந்த முறை தேர்தல் கூட்டணிப் பேச்சின் போது காங்கிரஸ் அடம் பிடித்தபோதே.. விட்டிருந்தால் திமுகவிற்கு இன்னும் சில உறுப்பினர்கள் கிடைத்திருப்பார்கள்.
அதிமுகவும் பாஜகவுடன் கூட்டு வைக்காமல் இருந்திருந்தால் கூட்டணியே மாறி மேலும் சில உறுப்பினர்கள் கிடைத்திருப்பார்கள்.
பாஜகவும் அண்ணாமலையை மாற்றியது இமாலயத் தவறு. ஒருவேளை அண்ணாமலையே தொடர்ந்திருந்தால் விஜய்க்கு வெற்றி எட்டாக்கனியாக போய் இருக்கும். பாஜகவிற்கும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கலாம். இனி அதே அண்ணாமலையையே மீண்டும் பாஜக தலைவராக கொண்டு வந்தாலும் முன்னர் இருந்த அந்த வேகம் இருக்கவே இருக்காது.
விஜயின் வெற்றியைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. ஜெயித்து விட்டார். அது அவரது திறமை. முதல்வராக அமர்ந்து விட்டார். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இனிதான் விஜய் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம்.

விஜய்யின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா முக்கியக் காரணம் என்பது இமாலய உண்மை. முன்பு ஒரு கதை சொல்வார்கள்.. குட்டிச் சாத்தான் கிடைத்தால் உலகத்தை வாங்கி விடலாம். நாம் எது கேட்டாலும் உடனே தந்துவிடும்- கேட்டுக் கொண்டே இருக்கணும், அப்படிக் கேட்காமல் சும்மா இருக்க விட்டால் அது நம்மையே சாப்பிட்டு விடும்.
அதனால் ஒரு குதிரில் இருக்கும் நெல்மணிகளை எண்ண சொல்லுவார்கள். அதுபோல ஆதவ் அர்ஜுனா ஒரு சுனாமி. அது வந்த வேகத்தில் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடும். ஆதவ் அர்ஜுனாவை விஜய் மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும். விஜய்க்கு எதிர்க்கட்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். ஆதவ் அர்ஜுனா போதும்.
ஊசிக் குறிப்பு : அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த போராட்டங்களில் சிலவற்றில் ஸ்டாலின் பங்கு கொண்டு தான் ஆட்சிக்கு வந்தால் செய்து தருவதாக கூறியவைகள், திமுக ஆட்சியில் பூமராங்காக வந்தது. அதேபோல் விஜய்.. பாட்டிலுக்கு பத்து ரூபாய், பரணூர் விமான நிலையம், தூய்மைப் பணியாளர்கள், போதை, பெண்கள் பாதுகாப்பு, 200 யூனிட், 2500 ரூபாய், 6 சிலிண்டர், தாய்மாமன் சீர் எனப் பல வரிசைகட்டி நிற்கின்றன. எனக்கு தெரிந்தவரை விஜய் கட்சி தொடங்கிய காலகட்டத்தில் திமுகவை எதிர்ப்பது என்ற ஒரே நோக்கில் இருந்தார். விஜய் ரசிகர்கள் அவர் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைமையில்தான் இருந்தார்கள். விஜய்யும் நல்ல ஆட்சி வேண்டும், இலவசங்கள் வேண்டாம் என முன்பு கூறினார். அதே பாதையில் போய் இருந்தால் அவரின் வெற்றிக்கு தேர்தல் வாக்குறுதி பிரச்னை வந்திருக்காது . யார் சொன்ன யோசனையோ (இந்தக் கட்டுரையை மீண்டும் படித்தால் யார் சொன்ன யோசனை என்று தெரியும்) அதைக் கேட்டு எல்லாமே இலவசம் என்று கூறி, வேலியில் போன ஓணானை மடியில் விட்டுக் கொண்டார். அது குத்தும், அது குடையும்.
— பாக்கெட் நாவல் அசோகன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.