அங்குசம் பார்வையில் ‘ஆல் பாஸ்’
வடசென்னை சத்யா நகர் தான் கதைக் களம்.ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்னா பாலச்சந்திரன் ஆகிய மூவரும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் –தம்பிகள். இவர்களது மனைவி செந்திகுமாரி, வினோதினி வைத்தியநாதன், ஆர்.மோகனா [தயாரிப்பாளர்]. இதில் சுப்பிரமணிய சிவாவின் மகள் ஹீரோயின் ஜனனியும் ஒரு மகனும். பிரசன்னா-மோகனா தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூன்று பேரும் கிரிக்கெட் விளையாடும் போது, எம்.எல்.ஏ.சரத் லோகித்ஷாவின் குடோனுக்குள் பதுக்கி வைத்திருக்கும் 5 கோடி ரூபாயை லவட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என மூன்று குடும்பப் பெண்களும் ப்ளான் போடுகிறார்கள். தனது பணம் சத்யா நகரில் இருக்கும் ஏதோ ஒரு பிளாட்டில் தான் இருக்கு என கணக்குப் போட்டு, லோக்கல் கவுன்சிலர் துணையுடன் பணத்தைத் தேடுகிறார் சரத். அந்த 5 கோடி ரூபாயை எம்.எல்.ஏ.மீட்டாரா? மூன்று குடும்பமும் செலவழித்ததா? இதான் ‘ஆல் பாஸ்’ கதை.
இடைவேளை விடும் சில நிமிடங்களுக்கு முன்பு தான் இந்தக் கதை நமக்குப் புரிகிறது. அதுவரை நடுத்தரக் குடும்பத்தினரில் அன்றாட வாழ்க்கை, ஆட்டோ டிரைவரான ஹீரோ துஷ்யந்த், ஜனனியைக் காதலிப்பது, இடையிடையே லோக்கல் கவுன்சிலரின் சீன்கள் என படம் போய்க் கொண்டே இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு பணத்தை மீட்க எம்.எல்.ஏவும் அதை செலவழிக்க செந்திகுமாரி, வினோதினி வைத்தியநாதன், மோகனா போகும் ப்ளான்களும் ஓரளவு சுவாரஸ்யத்துடன் படத்தை நகர்த்துகிறார் டைரக்டர் மைதீன். திடீர்னு கோடிக்கணக்கில் பணம் வந்ததும் பெண்களின் ஆசை, உழைக்காத பணம் ஒட்டாது என வெறுக்கும் ஜெயப்பிரகாஷ் சொல்லும் காரணங்கள், நடுத்தர வர்க்கத்திடம் திடீர்னு அளவுக்கதிகமாக பணம் வந்தா எப்படியெல்லாம் செலவழிப்பார்கள் என சரத்லோகித்ஷவா சொல்லும் காரணங்கள் எல்லாம் கொஞ்சம் ரசிக்க வைக்குது.
இடைவேளைக்குப் பிறகு துஷ்யந்த்-ஜனனி ஜோடியையும் அவர்களின் காதலையும் மறந்துட்டார் போல டைரக்டர். அதனால் க்ளைமாக்ஸுக்கு பத்து நிமிடம் முன்னாடி அவர்களைக் கொண்டு வந்து படத்தை முடித்திருக்கிறார்கள்.
‘ஆல் பாஸ்’ஜஸ்ட் பாஸ்.
அங்குசம் பார்வையில் ‘ஆல் பாஸ்’ 40/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.