’பிரேக் ஃபாஸ்ட்’ தலைப்பு ! கவிப்பேரரசு அதிருப்தி !
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், அமிதா,சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பிரேக் ஃபாஸ்ட்’. வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் பேசியவர்கள்..
எடிட்டர் பாஸ்கர்
“படத்தின் தலைப்பு ‘பிரேக்ஃபாஸ்ட்’ என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏன்னா நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுது தான் இப்படம் வெளியில் வந்தது”.
“திருமணம் ஆன தம்பதிகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்”.டிஸ்ட்ரிபியூட்டர் குகன்*, “இந்தப் படத்தில் உழைத்துள்ளவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார்”.
இயக்குநர் வசந்த பாலன்
“எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது.
இயக்குநர் காந்தி கிருஷ்ணா என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” .
ரோஸ்மின்
“என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாருக்கு மிக்க நன்றி. இந்தப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி”.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்
“எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் இந்தப் படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்”.
கதாநாயகன் ராணவ்
“எந்தப் பின்புலமும் இல்லாத எனக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணா சார் அவர்களுக்கு மிக்க நன்றி. மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும்”.
கவிப்பேரரசு வைரமுத்து
“நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது.
இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவர். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவர், கலை உலகைப் புரிந்து கொண்டவர் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன்.
காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டுவிட்டுப் போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.
காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் உலகம் முழுக்க தமிழ்ப் படங்கள் ஓடிவிடுமா என்ன? தமிழில் பெயர் வைத்தால் ஒரு கோடி பேர் அதை உச்சரிப்பார்கள், எழுதுவார்கள்.இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.
திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது. காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்”.
நடிகர் பரத்
“என்னோட வாழ்க்கையில் ‘செல்லமே’ படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அதில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி கிருஷ்ணா சாருக்கு நன்றி.இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி”.
நடிகர் மைம் கோபி,
‘ப்ரேக்ஃபாஸ்ட்’ எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக் கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்”.
இயக்குநர் காந்தி கிருஷ்ணா,
“இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவரும் மிகச் சிறந்த முறையில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் தர வேண்டும்”.
தயாரிப்பாளர் வரதராஜன்,
“இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்தப்படத்தை தயாரித்துள்ளோம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி”.
— ஆண்டவர்









Comments are closed, but trackbacks and pingbacks are open.