அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பேரனுக்காக எழுதத் தொடங்கினேன் …

சிறார் இலக்கியம் - ஆசிரியா் அறிமுகம்-3

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

”சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம் ஏற்பட தந்தையே காரணம்” என்று குறிப்பிடும், சிறார் எழுத்தாளர் ஞா.கலையரசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சீனியர் கிளார்க்காகப் பணி செய்து ஓய்வுபெற்றவர்.

’பணி ஓய்வு பெற்ற பின் பேரப்பிள்ளைக்குக் கதை சொல்லத் துவங்கினேன். அவனுக்குத் தினமும் புதுக்கதை சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் சொல்லி முடித்த பிறகு, நானே கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தேன். அப்படி பேரனுக்கு நான் சொல்லிய கதைதான் மந்திரக்குடை.  அதுதான் அச்சில் வெளிவந்த என் முதல் சிறார் நூல்” என்கிறார், ஞா.கலையரசி.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஞா.கலையரசி
ஞா.கலையரசி

பெயர்:   ஞா.கலையரசி

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பெற்றோர் பெயர்: சொ.ஞானசம்பந்தன் – ஞா.ராஜேஸ்வரி

தந்தை பணி: – அரசுப் பள்ளி ஆசிரியர். காரைக்கால்.

பிறந்த ஆண்டு: ஊர்: 1958  நாகப்பட்டினம்

சொந்த ஊர்:  காரைக்கால் – புதுச்சேரி யூனியன் பிரதேசம் – தற்சமயம் வசிக்கும் ஊர்:- சென்னை.

கல்வி: பி.ஏ (வரலாறு)

பணி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சீனியர் கிளார்க்காகப் பணி செய்து ஓய்வு.

என் குடும்பம்: கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்றார். 2021ஆம் ஆண்டு மறைந்தார்.

பிள்ளைகள்:- மகன் 1 மகள் 1  பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

மகன் ஆஸ்திரேலியாவில் கணினி இஞ்சீனியராக வேலை செய்கிறார். மகள் சென்னையில் மருத்துவராகப் பணி செய்கிறார்.

சிறார் இலக்கியத்தைத் தேர்வு செய்யக் காரணம்:-

சிறு வயது முதலே வாசிப்பில் எனக்கு நாட்டம் ஏற்படத் தந்தையார் காரணம். அவர் தீவிர வாசகர். அடிக்கடி நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து வந்து கொடுத்து வாசிக்கச் செய்தார். புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பெரியவர்களுக்கான சிறுகதைத் தொகுப்பு தான் என் முதல் நூல். 2018இல் புதிய வேர்கள் என்ற தலைப்பில் வெளிவந்தது.

பணி ஓய்வு பெற்ற பின் பேரப்பிள்ளைக்குக் கதை சொல்லத் துவங்கினேன். அவனுக்குத் தினமும் புதுக்கதை சொல்ல வேண்டும்.

எனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் சொல்லி முடித்த பிறகு, நானே கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தேன். அப்படி பேரனுக்கு நான் சொல்லிய கதை தான் மந்திரக்குடை. அது தான் அச்சில் வெளிவந்த என் முதல் சிறார் நூல். அதைப் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. அப்படித்தான் நான் சிறார் இலக்கியத்துக்குள் வந்தேன்.

பங்களிப்பு:-

பேரனுக்கு மேலும் கதை சொல்வதற்காகத் தற்காலத்தில் சிறார் இலக்கியத்தில் என்னென்ன மாதிரியான நூல்கள் வெளிவருகின்றன? தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் யார் யார்? என் பேரக்குழந்தையின்  வயதுக்கேற்ற சிறார் நூல்கள் எவை? என்று இணையத்தில் தேடத் துவங்கினேன்.

எனக்குத் தேவையான விபரங்கள் கிடைக்கவில்லை. எனவே என்னைப் போல் தேடுபவர்க்கு உதவியாக நாமே ஏன் ஒன்று துவங்கக்கூடாது என்ற எண்ணத்தில் ‘சுட்டி உலகம்’ https://chuttiulagam.com/ என்ற வலைத்தளத்தை 2021ஆம் ஆண்டு ஆரம்பித்தேன். இதில் 150க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் அறிமுகத்தைக் குழந்தைகளின் வயதுவாரியாக வெளியிட்டுள்ளேன். பதிப்பக விபரம், விலை விபரம் ஆகியவை உள்ளதால் பெற்றோர் ஆன்லைன் மூலமாகப் புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்க முடியும். இது முழுக்க முழுக்க இலாப நோக்கம் இல்லாத வாசிப்பு வழிகாட்டிக்கான தளம்.

இதுவரை நான் எழுதிய சிறுவர்க்கான படைப்புகள்: – 27 + தொகுப்பு நூல்- 2

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புக்ஸ் ஃபார் சில்ரன், வானம், நிவேதிதா ஆகிய பதிப்பகங்கள் என் சிறார் நூல்களை வெளியிட்டுள்ளன. ‘மந்திரக்குடை’ குறுநாவலும் ‘நீலமலைப்பயணம்’ என்ற இளையோர் நாவலும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளன. மந்திரக்குடை, பூதம் காக்கும் புதையல், பேய்த்தோட்டம், டைனோசர் சொன்ன கதை, நீலமலைப் பயணம் ஆகியவை குழந்தைகளிடையே நல்ல வரவேற்பு பெற்றவை.

பிற நூல்களின் எண்ணிக்கை: சிறுகதைத் தொகுப்பு–1 வரலாற்று நாவல்:-1       

முனைவர் வசந்திதேவி அவர்கள் துவங்கிய பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் வாசிப்பு இயக்கத்தில் இணைந்து செயல்படுகின்றேன். கல்வியாளரும் பேராசிரியருமான ச.மாடசாமி அவர்களின் நேரடி வழிகாட்டுதலுடன் எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்காகவும் ஏழை எளிய குழந்தைகளுக்காகவும் மொழியை மிகவும் எளிமைப்படுத்திப் புத்தகம் தயாரிக்கும் பணியைச் செய்கிறேன். பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து இந்தச் சிறார் வாசிப்பு நூல்களை வெளியிடுகின்றன. இதுவரை 30 சிறார் வாசிப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொன்றும் 16 பக்கமே கொண்ட குறு நூல். விலை ரூ 20/-.

‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருக்கின்றேன்.

கடந்த கால சிறார் இலக்கியத்துக்கும் தற்காலச் சிறார் இலக்கியத்துக்கும் உள்ள வேறுபாடு?

நீதிக்கதைகள்:-

கடந்த காலத்தில் சிறார் கதை என்றால் அதன் முடிவில் கண்டிப்பாக நீதி இருக்கும். கதைகளில் நீதி சொல்வது அவசியம் என்றிருந்தது. ஆனால் தற்காலத்தில் கதையின் முடிவில் நீதி சொல்வது தேவையில்லை என்ற கருத்து நிலவுகிறது.

குழந்தைகளின் வயது, வாசிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப கதையிலிருந்து வெவ்வேறு கருத்துகளை அவர்கள் பெறுவார்கள். இந்தக் கதையின் நீதி இது தான் என்று சொல்லும் போது அவர்களைச் சிந்திக்கவிடாமல் தடை செய்கிறோம்.

அவர்கள் மாற்றி யோசிக்க வழியின்றிப் போகிறது.

தற்காலக் கதைகளில் மூடநம்பிக்கைகளை ஒழித்து, அறிவியலுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்து அதிகம் வலியுறுத்தப்படுகிறது.

பாலினச் சமத்துவம்:-

கடந்த காலச் சிறார் இலக்கியத்தில் அப்பாவுக்கு வந்தார் என்று ஆர் விகுதியும் அம்மாவுக்கு வந்தாள் என்று ள் விகுதியும் போட்டுக் கதை எழுதினார்கள். ராணியாக இருந்தாலும் அவள் தான். ஆனால் தற்காலத்தில் பெண்ணுக்கும் ஆணைப் போலவே ஆர் விகுதி போட்டு எழுதும் வழக்கம் அதிகமாயுள்ளது.

சுற்றுச்சூழல், இயற்கை குறித்த புத்தகங்கள் கடந்த காலத்தை விடத் தற்காலத்தில் அதிகம் வெளிவருகின்றன.

தற்காலத்தில் சிறார் வாசிப்பு நோக்கி நகர பெற்றோர், கல்விக்கூடங்கள் செய்ய வேண்டியவை?

குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே பெற்றோர் புத்தகம் வாங்கிக் கொடுத்து வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அவர்களும் புத்தகம் வாசிக்க வேண்டும்.

குழந்தைகளுக்குப் பெற்றோர் தாம் முதல் ரோல் மாடல். எனவே பெற்றோர் புத்தகம் வாசித்தால் நாளடைவில் குழந்தைகளும் வாசிக்கத் துவங்குவார்கள்.

குழந்தைகளின் பிறந்த நாளுக்கு உடை, கேக், ஐஸ்கிரீம் என்று ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் பெற்றோர் புத்தகம் வாங்குவதை அநாவசிய செலவு என்று நினைக்கிறார்கள்.

புத்தகம் வாங்குவது அறிவுக்கான முதலீடு! அது செலவு இல்லை என்று பெற்றோர் உணர வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்ன அலமாரியிலாவது நூலகம் அமைக்க வேண்டும். அருகில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்குப் பெற்றோர் தவறாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் வகுப்பில் மாணவர்க்குச் சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்யவேண்டும். அதற்கு அவர்கள் வாசிப்பாளராக இருக்க வேண்டும். எனவே பெற்றோர், ஆசிரியர், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து தான் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த முடியும்.

தற்காலச் சிறார் வளர்ச்சிக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய முன்னெடுப்பு?

எந்நேரமும் மின்னணு சாதனங்களில் மூழ்கிக் கிடப்பதால் குழந்தைகளின் கண்களும் மனமும் பாதிக்கப்படுகின்றன. இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய வன்முறைக் காட்சிகளையும் அவர்கள் பார்க்கக்கூடாத பாலியல் காட்சிகளையும் பார்ப்பதால் அவர்கள் மனநலம் பாதிக்கப்படுகிறது. மின்னணு சாதனங்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி வாசிப்பின் சுவையை அவர்களுக்கு அறிமுகம் செய்வது தான்.  வாசிப்பின் ருசி கண்டுவிட்டால் அதற்குப் பிறகு அவர்களாகவே தேடி தேடி வாசிக்க ஆரம்பிப்பார்கள். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே குழந்தைகளின் படைப்புத் திறனை வெளிக்கொண்டுவரும். வருங்காலத்தில் குழந்தைகள் பன்முகத் திறமையாளர்களாக விளங்க வேண்டுமானால் சிறு வயதிலேயே அவர்களுக்குப் புத்தக வாசிப்பு துவங்க வேண்டும்.

நூலகம் போன்று குழந்தைகள் கூடும் மையங்களில் கதை சொல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்க வேண்டும். புதிய புதிய புத்தக அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளைக் கதை எழுத ஊக்குவிக்க வேண்டும். அதற்கான பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டும். அரசை மட்டும் நம்பியிராமல் சமூக நலனில் அக்கறை உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். அப்போது தான் எதிர்காலச் சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக அமையும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.