கடைசி வரை கல்லாப்பெட்டியைத் திறக்காத சீனியர்! கையைப் பிசையும் உடன்பிறப்புகள்!
கருப்பு சிகப்பு கரை வேட்டிக் காரர்களுக்கு 2026 கருப்பு தீபாவளியாகவே அமைந்துவிட்டது. எப்படியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில், கைக்காசை தண்ணீராய் செலவு செய்தவர்களெல்லாம் வருமானத்துக்கு வழியில்லாமல் போச்சேனு கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம். ஆனால், மலைக்கோட்டை மாவட்டத்திலிருந்து பயணப்பட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பலமுறை அமைச்சராக வலம் வந்த; அப்பா காலத்திலும் மகன் காலத்திலும் செல்வாக்காக இருந்த; பேரன் காலத்திலும் வழித்துணையாகவே பயணிக்கும் அந்த முதன்மையான சீனியர், காசு விசயத்தில் ரொம்பவே கறாராக இருக்கிறாராம்.
ஏதோ கட்சியை வைத்து சொந்த தொழில் செய்து நாலு காசு பார்க்கும் நிர்வாகிகள், குறிப்பாக மலைக்கோட்டை மாவட்டத்தில் தனக்கு கீழாக பணியாற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் கைச்செலவுக்கு காசு கொடுத்து கவனிப்பது வழக்கமாகவே இருந்து வருகிறதாம்.
ஆட்சியில் இருந்தவரை பண்டிகை தவறாமல் கொடுத்து வந்தவர், இந்த முறை மட்டும் நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லையாம். பிரசித்திபெற்ற கோயிலின் பெயரில் அமைந்த தொகுதியை சேர்ந்த எக்ஸ் ஒருவர்தான் தனது தொகுதியில் தொடங்கி வைத்தாராம். மீண்டும் போட்டியிட சீட் கேட்டு தலைமையால் மறுக்கப்பட்டவரே நிர்வாகிகளை கவனிக்கும்போது, நாம கவனிக்காமல் போனால் எப்படினு யோசிச்சவரு, ஏரியாவுக்கு ஒருத்தரையா பொறுப்பாக்கிட்டாராம்.
மணி-யான ஒன்றியத்துக்கு திராவிட வண்ணத்தை பெயரிலேயே கொண்ட பவர்ஃபுல் ஒன்றியத்தையும்; காவரி ஆறு பிரியும் பகுதிக்கு கருணையானவரையும்; கோயில் நகரத்துக்கு துரை-யானவரையும்; மலைப்பாங்கான தாலுகா தலைநகருக்கு தருமமானவரையும்; உப்பில் தொடங்கும் ஒன்றியத்துக்கு முத்தானவரையும்; சீனியரின் சொந்த ஊருக்கு வள்ளலானவரையும்; மாவட்டத்தின் இதயப்பகுதிக்கு அன்பானவரையும் என ஒன்றியத்துக்கு ஒரு ஆளாக ஆளுக்கு ஒரு ஏரியாவை பிரிச்சிக் கொடுத்திட்டாராம். அந்தந்த ஏரியாவுல நம்ம ஆளுகள கவனிச்சி விட்ருங்கப்பானு சொல்லிட்டாராம். இதெல்லாம் சொன்னவரு, கடைசி வரைக்கும் கல்லாப்பெட்டியில மட்டும் கையை வைக்கவே இல்லையாம். கோர்ட்டு கேசுனு போயிட்டிருக்கு. இந்த நேரத்தில விவகாரம் ஆகிடும். அப்புறம் கல்யாண செலவு வேற கைய கடிக்கிது. கொஞ்சம் பார்த்து பண்ணுங்கப்பானு அவரோட பாணியிலேயே சொல்லி காரியத்தை முடித்துக் கொண்டாராம்.
இதில் கொடுமையே, சீனியர் கை காட்டிய நபர்களில் மூன்று பேர் கடந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள். தேர்தல் செலவே கணிசமாக செய்து, ஆட்சியையும் பிடிக்காமல், செலவு செய்த பணத்தை திரும்ப எடுப்பதற்கான வழியும் இல்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருப்பவர்களை மேலும் கசக்கிப் பிழிந்தால் எப்படி? என்றே முனுமுனுக்கிறார்கள்.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்க்கையில் இருந்தவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறை அமைச்சராக வலம் வந்தவர். இன்றும் தலைமைக்கு மிக நெருக்கமாக, முக்கியமான விவகாரங்களை கையாளும் இடத்தில் இருப்பவர். அவரிடம் கரண்சிகளுக்கா, பஞ்சம்? என்றே கேள்வி எழுப்புகிறார்கள் உடன்பிறப்புகள்.
மாவட்டத்தில் அவருக்கு போட்டியாக வலம் வந்த அன்பான அமைச்சரும் வழக்கில் சிக்கி செல்வாக்கை இழந்து சிறையில் உள்ள நிலையில், இவர் சொல்வதை கேட்டுத்தானே ஆகனும்னு அவர் கைகாட்டியவர்களும் கழக நிர்வாகிகளுக்கான தீபாவளி செலவை சமாளித்திருக்கிறார்களாம்.
ஒருவேளை, இதுவும் ஒரு அரசியல் பாடம்தான் என தனக்கு அடுத்த தலைமுறைக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்திருப்பாரோ? என்னதான் அரசியல் பாடம் என்றாலும், கைக்காசை அவிழ்த்த மலைக்கோட்டை உடன்பிறப்புகளுக்கு இது காஸ்ட்லியான ஃபீஸ்தான்!
— டெல்டாக்காரன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.