“பிரஸ் ஷோவில் பிரஸ் சொல்வதை நம்பாதீர்கள்” -’ஹபீபி’ சக்சஸ்மீட்டில் சுரேஷ்காமாட்சி!
கடந்த 12-ஆம் தேதி ரிலீசான மீரா கதிரவனின் ‘ஹபீபி’ படம் பத்திரிகைகளின் நேர்மறை விமர்சனத்தால் பார்வையாளர்களிடையே அமோக வரவேற்றைப் பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கூடுதலான தியேட்டர்களில் காட்சிகளையும் அதிகரித்திருப்பதால், படத்தின் வெற்றிக்குக் காரணமான மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.22-ஆம் தேதி இரவு நடந்தது.
இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் கோவை இப்ராஹிம், கஸாலி, கருப்பசாமி, படத்தில் நடித்த கஸ்தூரி ராஜா, தனுஸ்ரேயா ராஜன், ஈஷா, ஜெயஸ்ரீ, மாளவிகா மனோஜ் உட்பட நடிகர்களும் டெக்னீஷியன்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ராஜுமுருகன், தமிழ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கவிஞர்கள் யுகபாரதி, கார்த்திக் நேத்தா, சித்த மருத்துவர் கு.சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு பட வெற்றிக்காக டைரக்டர் மீரா கதிரவனையும் நடிகர்-நடிகைகளையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் வாழ்த்திப் பேசினார்கள்.
படத்தில் நடித்த கலைஞர்கள், டெக்னீஷியன்கள் அனைவருமே ஹபீபியில் பங்கு பெற்றதை பெருமையுடன் நினைவு கூர்ந்து, டைரக்டர் மீரா கதிரவனுக்கு நன்றி சொன்னார்கள்.
மருத்துவர் கு.சிவராமன், “இந்தப் படத்தை பாளையங்கோட்டையில் எனது குடும்பத்துடன் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வந்து அதிகாலை நான்கு மணி வரை படத்தின் கதை மாந்தர்களையும் மீரா கதிரவனின் திரை நேர்த்தியையும் நினைத்துக் கொண்டே இருந்தேன்”.
டைரக்டர் ராஜுமுருகன், “இன்னைக்கு காலைல சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலையில் பார்த்தப்ப நாலு பாலகிருஷ்ணா படங்களைப் பார்த்த டென்ஷனில் இருந்தேன். இப்ப இந்த விழாவுக்கு வந்த பிறகு அந்த டென்ஷன் குறைச்சிருக்கு. 1980-90 வரை தமிழ் சினிமாவில் இஸ்லாம் கதாபாத்திரங்களை மனிதநேயம் மிக்கதாகவும் நல்லதாகவும் காட்டினார்கள். அதன் பிறகு தான் தீவிரவாதிகளாக காட்ட ஆரம்பித்தார்கள். அதை உடைத்து நொறுக்கியுள்ளார் மீரா கதிரவன்”.
கவிஞர் கார்த்திக் நேத்தா, “பேரிரைச்சல், வன்முறை சினிமாக்கள் பெருகிவரும் இந்த நேரத்தில் மனசுக்கு இதமான ஒரு சினிமாவாக ஹபீபி வந்திருப்பது ஆறுதலா இருக்கு”.
இயக்குனர் தமிழ், “நூறு ஆண்டு கால தமிழ் சினிமாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கதவை திறந்து புதிய பாதையைக் காட்டியுள்ளார் மீரா கதிரவன்”.
கஸாலி, “நாங்கள் வேறு ஒரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் இந்த மண்ணில் நாங்கள் தமிழர்கள் தான். இங்கே மற்ற சமூகத்து மக்களுடன் அண்ணன் -தம்பி, மாமன், மச்சான் உறவுமுறையுடன் தான் பழகி வருகிறோம். தீவிரவாதிகளாகவே சினிமாக்களில் எங்களை சித்தரிப்பதால், சினிமா பார்க்கும் பழக்கமே இஸ்லாமியர்களிடம் குறைந்திருந்த நேரத்தில் இந்த ஹபீபி ரிலீசாகி எங்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்காக மீரா கதிரவனுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம்”.
சுரேஷ் காமாட்சி, “இது இஸ்லாமியர்களின் வாழ்வியல் அல்ல, வேறு மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்களின் வாழ்வியல். எங்க இராம்நாட் மாவட்டத்துல கீழக்கரையில் இஸ்லாமியர்கள் வீட்டுத் திருமணம் நடந்தால் அந்த ஊரில் இருக்கும் மற்ற சமூகத்தினர் வீட்டில் சமைக்க மாட்டார்கள். எல்லோருக்கும் முஸ்லீம் வீட்டு கல்யாணச் சாப்பாடு தான். இந்தப் படத்திற்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மீரா கதிரவன் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
பொதுவா சினிமாக்களின் பிரஸ் ஷோ முடிந்து வெளியே வந்ததும் மீடியா நண்பர்கள் எல்லோரும் டைரக்டர்களிடமும் நடிகர்களிடமும் படம் சூப்பரா இருக்குன்னு சொல்வார்கள். அவர்களின் மனம் சங்கடப்படக்கூடாது என்பதற்காக எல்லாப் படங்களுக்கும் இதை சொல்வார்கள். அதனால் நான் மீரா கதிரவனிடம் , பிரஸ் ஷோ முடிந்து வெளியே வரும் பிரஸ் பீப்பிள் சொல்வதை நம்பாதீர்கள். இரண்டு மணி நேரம் கழித்து அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் வருவது தான் உண்மையான விமர்சனமாக இருக்கும்னு நம்பிக்கையளித்தேன். நான் சொன்னது போலத்தான் மீடியா நண்பர்களின் அனைத்து விமர்சனங்களும் நல்லவிதமாக இருந்தது”.
தனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்த தனது காதல் மனைவி ஜென்னி மார்க்ஸ், படத்தின் தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், கஸ்தூரி ராஜா உட்ப்ட அனைத்து நடிகர்கள், தன்னுடைய உதவி இயக்குனர்கள், தக்க சமயத்தில் உதவிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பி.ஆர்.ஓ.க்கள் சுரேஷ் சந்திரா, அப்துல்நாசர் என ஒருவர் விடாமல் அனைவருக்கும் நன்றி சொல்லி உருக்கமாகப் பேசினார் டைரக்டர் மீரா கதிரவன்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.