தமிழகத்தில் த.வெ.க. அலையா? ஆட்சியை அமைக்கப்போகிறதா த.வெ.க.? விரிவான அலசல் !
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் 85.15% வரையில் உயர்ந்துவிட்டதாக குதூகலிக்கிறார்கள். குறிப்பாக, த.வெ.க.வின் திடீர் அரசியல் பிரவேசம்தான், இந்த அளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதத்தை உயர்த்தியிருக்கிறது என்றே எல்லோரும் பேசவும் செய்கிறார்கள். த.வெ.க.வினரோ, இப்போதே மந்திரி சபைக்கான ஆட்களையெல்லாம் தேர்வு செய்துவிட்டார்கள் என்ற அளவுக்கு இணையத்தில் அலப்பறையை தொடங்கிவிட்டார்கள்.
வாக்கு சதவிகிதம் உயர்ந்தது உண்மையா?
முதலில் இவர்கள் எல்லோரும் சொல்வதைப்போல, வாக்கு சதவிகிதம் ஒன்றும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிடவில்லை என்பதே யதார்த்தம். கடந்த 2021 இல் 4,62,36,716 பேர் வாக்களித்திருந்தபோது தமிழகத்தின் வாக்குப்பதிவு சதவிகிதம் 66.54% என்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது சுமார் 4,87,00,000 பேர் வாக்களித்துள்ள நிலையில் அதாவது சுமார் 25 இலட்சம் வாக்காளர்கள் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில் எப்படி திடீரென்று 85.15% சதமாக உயர்ந்தது என்ற கேள்விக்கு இவர்களிடம் விடையில்லை.
இன்னும் சொல்லப்போனால், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 3,68,54,373 பேர் வாக்களித்திருந்த நிலையில் 63.90% வாக்குப்பதிவு என்பதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கடுத்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 4,32,05,158 பேர் வாக்களித்திருந்த போது, 60.66% என்பதாக சொல்லப்பட்டது. அதாவது ஏறத்தாழ 63 இலட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருந்த நிலையில், முந்தைய ஆண்டைவிட, வாக்குசதவிகிதம் 3.24% எப்படி குறைய முடியும்? இந்த முரணை புரிந்து கொள்ளாமல்தான், வரலாற்றில் இல்லாத வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு என்பதாக பிதற்றுகிறார்கள்.
உண்மையில், எப்போதும்போல 2016-க்கும் 2021-க்கும் எப்படி சுமார் 30 இலட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததோ, அதுபோல 2021-க்கும் 2026-க்கும் சுமார் 25 இலட்சம் வாக்காளர்கள் உயர்ந்திருக்கிறார்கள் அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால், 2016-2021 ஐ ஒப்பிடும்போது, 2021-2026 இல் சுமார் 5 இலட்சம் வாக்காளர்கள் குறைந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
வேண்டுமானால், நீங்களே கூட்டிக் கழித்துதான் பாருங்களேன்.
2016 இல் பதிவான வாக்குகள் – 4,32,05,158 (60.66%)
2021 இல் பதிவான வாக்குகள் – 4,62,36,716 (66.54%)
2026 இல் பதிவான வாக்குகள் – 4,87,00,000 (85.14%) – இதில் எங்கே வரலாற்றிலேயே இல்லாத அளவு உயர்ந்துவிட்டது என்பதை கொஞ்சம் விளக்கித்தான் சொல்லுங்களேன்.
அலையாக திரண்டார்களா, புதிய வாக்காளர்கள்?
அடுத்து, அலை அலையாக புதிய வாக்காளர்கள் படைதிரண்டு விட்டார்கள். வெளிநாடுகளிலிருந்து எல்லாம் பிளைட் பிடித்து வந்து த.வெ.க.வுக்கு ஓட்டு அளித்துவிட்டு சென்றார்கள் என்றெல்லாம் ஒரு கதை கிளப்பி வருகிறார்கள். அதுவும், முதல்முறை ஓட்டளிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள் எல்லோருமே த.வெ.க.வுக்குத்தான் ஓட்டளித்திருக்கிறார்கள் என்றும்; நிச்சயம் அது தமிழகத்தின் தேர்தல் கணக்குகளை தலைகீழாக மாற்றி எழுதிவிடும் என்றும் மற்றொரு புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
அவர்கள் வேண்டுமானால், புரளியைக் கிளப்பிக் கொள்ளட்டும். நாம், அரசின் அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்களிலிருந்தே சில எளிய உண்மைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்வோமே!
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் வரையில் வரப்பெற்ற புதிய கோரிக்கைகளையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படியே தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,73,43,291 பேர். இதில் சுமார் 2.80 கோடி பேர் ஆண்கள். 2.93 கோடி பேர் பெண்கள். இதில் 18-19 வயதுடைய முதல்முறை வாக்களிக்கத் தகுதியானவர்கள் 14,59,039 பேர். மொத்த வாக்காளர்களில் இது வெறும் 2.5%. இவர்கள் எல்லோருமே தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்தார்களா? அப்படி வந்தவர்களும் த.வெ.க.வுக்குத்தான் ஓட்டு போட்டார்களா? என்பதெல்லாம் அடுத்து. ஒருவேளை இவர்களில் ஒருவர் தவறாமல் த.வெ.க.வுக்கு ஓட்டுப் போட்டுவிட்டார்கள் என்றே எடுத்துக் கொண்டால்கூட 2.5% தான். இந்த 2.5%தான் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மாணித்து விடப்போகிறதா?
த.வெ.க. தனிப்பெரும்பான்மை சாத்தியமா?
பாலாஜி மூர்த்தி என்பவர் இணையத்தில் ஒரு எளிய தேர்தல் கணக்கீடு ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதாவது கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 4,62,36,716 வாக்குகளில், திமுக 2,09,82,088 வாக்குகளையும்; அதிமுக 1,83,63,499 வாக்குகளையும் பெற்றிருந்ததாக குறிப்பிடுகிறார். இதன்படி, திமுக 46%; அதிமுக 40% வாக்குகளையும் பெற்றிருக்கிறது. திமுக தனது தேர்தல் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை சந்தித்த 2011 தேர்தலில் திமுக 22% வாக்குகளையும், காங்கிரஸ் 10% வாக்குகளையும் பெற்றிருந்தது. அதேபோல, அதிமுக தனது வரலாற்றில் மிக மோசமான தோல்வியை சந்தித்த 1996 தேர்தலில் அதிமுக 22% வாக்குகளையும்; காங்கிரஸ்-5% வாக்குகளையும் பெற்றிருந்தது.
இதன்படி, எடுத்துக் கொண்டால், 2021 இல் திமுக பெற்ற 46% வாக்குகளில் 14% வாக்குகளை த.வெ.க.வுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, 2011 இல் பெற்ற சதவிகிதமான 32% வாக்குகளோடு களத்தில் இருப்பதாகவே எடுத்துக் கொள்வோம். அதேபோல, அதிமுகவும் தன் பங்கிற்கு 15% வாக்குகளை த.வெ.வு.க்கு தாரைவார்த்துவிட்டு 1996 இல் பெற்றிருந்த சராசரியான 25% சதவிகித்தோடு களத்தில் இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். இதன்படி, இவ்விரு கட்சிகளும் த.வெ.க.வுக்கு விட்டுக் கொடுத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,08,40,651 (திமுக விட்டுக்கொடுத்த 14% + அதிமுக விட்டுக்கொடுத்த 15%) எனக் கொள்வோம். இதனோடு, தற்போது புதியதாக சேர்ந்திருக்கும் 28 இலட்சம் வாக்குகளும் த.வெ.க.வுக்கே போடப்பட்டதாகவே கொண்டோம் என்றாலும்கூட, ஆக மொத்தம் 1,36,40,651 வாக்குகள். இதன் சதவிகிதம் 28%. இதன்படி பார்த்தாலும்கூட, திமுக – 32%, அதிமுக – 25%, த.வெ.க. 28% என்றாகிறது. ஆக எப்படி பார்த்தாலும், த.வெ.க. ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெறும் என்பதில் சந்தேகமில்லை. சில இடங்களில் திமுக – அதிமுக வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஓட்டுகளாகவும் அவை அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த ஓட்டுகள் அனைத்தும் தனிப்பெரும்பான்மையுடன் த.வெ.க. ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு போதுமான வாக்குகளை பெற சாத்தியம் இல்லை என்பதுதான் இதன்வழியே நிரூபணமாகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி சொல்லும் சேதி என்ன?
அடுத்து இன்னொரு கோணத்தில், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை எந்த அடிப்படையில் ஏறி இறங்கியிருப்பது என்பதை கணக்கிட்டு பார்ப்போம். த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றான, திருச்சி கிழக்கு தொகுதியை எடுத்துக் கொள்வோம்.
2011 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் – 1,51,439
2016 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் – 1,66,985
2021 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் – 1,72,856
2026 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் – 1,80,050
இந்த புள்ளிவிவரத்தில், எங்கே புதிய அலை அடித்திருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் நிதானமான முறையில் புதிய வாக்காளர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது. தலைவன் விஜய் போட்டியிட்ட தொகுதியிலேயே, கடந்த 2021 தேர்தலுக்கும் 2026-க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? வெறும் 7194 வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருக்கிறது. இதை அலை என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
இதை வேறு விதத்தில் அணுகலாம். இதே திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் 2,47,148 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியாக இருந்தும் அதில் 1,72,856 பேர் மட்டுமே வாக்களித்திருந்தார்கள். அதாவது, 74,292 பேர் ஓட்டளிக்க தகுதியிருந்தும் ஓட்டுச்சாவடி பக்கம் வரவில்லை. சரி, மாற்று யாரும் இல்லையே என்ற ஏக்கமாக கூட இருக்கலாம் என கொள்வோம். இந்தமுறை, எஸ்.ஐ.ஆர்.-க்கு பிறகு தகுதியில்லாத சுமார் 26,957 வாக்காளர்களை நீக்கிய பிறகு 2,20,191 பேர் வாக்களிக்க தகுதியாக இருந்தும், அதில், 1,80,050 பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். இந்தமுறை 40,140 பேர் வாக்குச்சாவடி பக்கம் வரவே இல்லையே. த.வெ.க. அலை, மாற்றத்துக்கான அரசியல் அலை என்றால், த.வெ.க. தலைவன் போட்டியிடும் தொகுதியிலேயே ஏன் 40 ஆயிரம் வாக்குகள் பதிவாகாமல் போனது? என்ற கேள்விக்கு என்ன பதில்?
அடுத்து இதே திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்ற திமுகவை சேர்ந்த முனைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகளுடன், 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். 2016 இல் அதிமுகவின் வெல்லமண்டி நடராஜன் 79938 வாக்குகளுடன் 21894 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அதேபோல, 2011 இல் அதிமுகவின் ஆர்.மனோகரன் 83046 வாக்குகளுடன் 20626 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதன் பொருள், கிழக்கு தொகுதியில் தலைவன் ஜெயிக்க வேண்டுமென்றால், கடந்த மூன்று தேர்தல்களின் சராசரியை கணக்கிட்டால்கூட, குறைந்தபட்சம் 80 ஆயிரம் வாக்குகளை பெற்றாக வேண்டும். அதாவது தற்போது பதிவான வாக்குகளில் தோராயமாக 40 – 45% வாக்குகளை த.வெ.க. பெற்றாக வேண்டும். இது சாத்தியம்தானா?
திமுக – அதிமுக வாக்கு வங்கிகளை உருவியதா த.வெ.க?
இவற்றையெல்லாம்விட, தமிழகத்தில் 40 முதல் 45 சதவிகித வாக்கு வங்கியை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்து வந்திருக்கும் திமுக; 30 – 35 வாக்கு வங்கியை நிரூபித்து வந்திருக்கும் அதிமுக ஆகிய இருகட்சிகளையும் மீறி அவற்றிற்கென்று இருக்கக்கூடிய நிலையான ஓட்டுகளையும் உருவிவிடும் அளவுக்கு விஜய் வல்லமை படைத்தவரா?
அதிமுக தரப்பில்கூட, கட்சியின் பிளவு, டி.டி.வி. தினகரன் இணைந்தது, அண்ணாமலை கழுவி ஊத்தினதையெல்லாம் மறந்து கூட்டணி போட்டு கை குலுக்கியது, அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாஜக வந்துவிடும் என்ற அளவுக்கு பாமரனும் புரிந்து வைத்திருக்கும் நிலையில் அக்கட்சியின் வாக்கு வங்கிகள் சிதறுவதற்கான வாய்ப்புகளை அடுக்கலாம்.
ஆனால், திமுகவின் நிலையை அப்படி சொல்லிவிட முடியாது. கடந்த தேர்தலில் 45% உத்தரவாதமான வாக்கு வங்கியை பெற்றிருப்பதோடு; இந்த முறை தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் கூட்டியிருப்பதோடு; கடந்த ஆண்டை காட்டிலும் கட்டமைப்பு ரீதியில் கட்சியை பலப்படுத்தி வைத்திருக்கிறது. அரசின் வழியே முன்னெடுக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சென்ற முறை ஓட்டளித்தவர்கள் இந்த முறை மனம் மாறினாலும், புதியவர்கள் அதை இட்டு நிரப்பும் அளவுக்கு தனது வாக்கு வங்கியை பாதுகாத்திருக்கிறது. பத்திரப்படுத்தியிருக்கிறது. இந்த பின்னணியில் பார்த்தாலும், யாருடைய ஓட்டுக்களை உருவி த.வெ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கப்போகிறது?
இதற்கு அவர்களே ஒரு கணக்கை சொல்கிறார்கள். தமிழகம் முழுவதும் தங்களது கட்சியில் 1.5 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் 60,000 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்களாம். எல்லோருமே வாக்காளர் அடையாள அட்டையை வைத்து பதிவு செய்திருக்கிறார்கள். எங்களது கட்சி உறுப்பினர்களின் ஓட்டுக்களே போதும் வெற்றி பெறுவதற்கு என்றே மிதப்பில் இருக்கிறார்களாம். அப்படி பார்த்தால், திமுக – அதிமுக எல்லாம் தேர்தல் பிரச்சாரமே செய்ய வேண்டியதில்லையே? அவர்கள் சேர்க்காத, உறுப்பினர்களா? இதில் காமெடி என்னவெனில், அந்த அடையாள அட்டையை நண்பர் ஒருவரும் வாங்கி வைத்திருந்தார். அவருக்கும் த.வெ.க.வுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. ஆனாலும், என்னதான் இருக்கிறதென்று பார்ப்போம் என்ற ஆவலில், ஆன்லைனில் விண்ணப்பித்து அட்டையை கையில் வைத்திருக்கிறார். அதில் அவரது வாக்காளர் அட்டையின் எண்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறதேயொழிய, குறைந்தபட்சம் சீரியல் எண் கூட இல்லை. பிறகு, எதை வைத்து 1.5 கோடி உறுப்பினர்கள் என்கிறார்கள் என்பதுதான் நமக்கு புரியவில்லை. வரிசை எண்கூட இல்லாமல் அடையாள அட்டை விநியோகித்த ஒரே கம்பெனி த.வெ.க. கம்பெனிதான் போல.
இந்த இலட்சணத்தில், இப்போதே மந்திரிசபையை அமைப்பது குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதான செய்தியையெல்லாம் கேட்டால், எந்த வாயால் சிரிப்பதென்றே தெரியவில்லை? போகிற போக்கை பார்த்தால், ”தற்குறி” என்ற சொல்கூட, எமக்கெல்லாம் கொஞ்சம் நாகரீகமாகத்தான் தோன்றுகிறது. அப்போ, உங்களுக்கு?
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.