அது என்ன சமூகநீதி துறை அமைச்சர் ? ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்பதே சிறப்பு !
மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு அவர்களுக்கு,
வணக்கம். முதன்முதலாக கடந்த 2021 தேர்தலில் விழுப்புரம் – வானூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தற்போது திண்டிவனம் தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றதோடு, வி.சி.க.வின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் நீடித்து வந்த “ஆட்சியில் பங்கு … அதிகாரத்தில் பங்கு” என்ற இலட்சியம் நிறைவேறும் வகையில் தவெக ஆட்சியில் பங்குபெற்று அமைச்சராகவும் ஆகியிருப்பதில் பெரு மகிழ்ச்சி! வாழ்த்துகள்!
இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதாக அழைக்கப்பட்டுவந்த துறையை திடீரென்று சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி தற்போது விவாதபொருளாகியிருக்கிறது. இது ஆதி திராவிடர் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்திவிடாதா? என்ற கேள்வியும் உள்ளடங்கியிருக்கிறது.
“சமூக நீதி என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய சமூகங்களுக்கான சமூகநீதியை மேம்படுத்துவதும் உறுதி செய்வதும் என்பதே முதன்மை பணியாகும். இதில் ஆதி திராவிடர் நலன்களை மேம்படுத்துவது என்பது ஒரு ஓரத்தில் மூலையில் உள்ளது. இது ஆதி திராவிடர் நலன்களைப் பாதிக்கும்” என்பதாக சுட்டிக்காட்டுகிறார், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் தமிழரசன்.
கடந்த திமுக ஆட்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்குழுவின் தலைவராக செயல்பட்ட சிந்தனை செல்வன் கோரிக்கையின் அடிப்படையில், “ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகள்” அனைத்தும் “சமூகநீதி மாணவர்கள் தங்கும் விடுதிகள்” என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது அதன் துறையும் சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் பெற்றிருப்பதாக அறிந்துகொள்ள முடிகிறது.
திமுக அரசு சமூகநீதி மாணவர் தங்கும் விடுதிகள் என்று மாற்றம் செய்தமைக்கான அடிப்படை காரணம், “ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் 80% ஆதி திராவிடர் மாணவர்களும், +20% பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது அரசின் ஆணையாகும். அதைப்போலவே பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 80%. ஆதி திராவிடர் மாணவர்கள் +20% சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது அரசின் ஆணையாகும். இதனால்தான் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கும் விடுதிகள் “சமூகநீதி மாணவர்கள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டது . இதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நீங்கள் கோரிக்கையொன்றை முன்வைத்து நீங்கள் மீண்டும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பெயர் மாற்றம் செய்து கொள்ளவேண்டும் என்பதே ஆதிதிராவிடர்கள் நலன்மீது அக்கறை கொண்ட எல்லோரது எதிர்பார்ப்பும்.
கடந்த திமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்டோரின் நலத் திட்டங்களுக்காக ஒன்றிய அரசு, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி, பெண்கள் உரிமைத் தொகைக்கும், மாணவர்களுக்கு வழங்கும் மாத உதவித்தொகைகளுக்கும் மடைமாற்றம் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் திமுக அரசின் மீது வன்மம் கொண்டவர்கள் கடந்த 4 ஆண்டுகள் அவதூறைத் தொடர்ந்து பரப்பி வந்தனர். சமூக மேம்பாட்டின் மீது அக்கறைக் கொண்டவர் என்ற போர்வையில் எவிடன் கதிர், நீலம் அமைப்பின் இயக்குநர் பா.இரஞ்சித் போன்றவர் சமூக வலைதளங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி திமுக என்பதைப் பரப்பி வந்தனர். நீங்கள் அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான நிதியை வேறு பணிகளுக்குத் திருப்ப முடியாது. இது திமுக மீது கட்டமைக்கப்பட்ட பொய் பரப்புரை என்று கூறி தலித் மூகமுடிகளின் முகத்திரையைக் கிழித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பட்டியலின மாணவர்கள் அரசின் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களைப் பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 இலட்சம் என்று கடந்த 15 ஆண்டு காலமாக உள்ளது. அரசு வேலையில் அடிப்படை பணியாளராக தாழ்த்தப்பட்டவரின் அடிப்படை ஊதியம் 20,000 என்றால் அகவிலைப்படி+வீட்டு வாடகை படி+ நகர ஈட்டுபடி என்று சுமார் 30,000-ஐ தாண்டிதான் மாத ஊதியமாக பெறுகின்றனர். தற்போது ஆண்டு வருமானம் ஏறத்தாழ 3,60,000 என்று உள்ளது. இதனால் பட்டியலினம் சார்ந்த இளைஞர்கள் அரசின் நலத்திட்டதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். ஆண்டு வருமானத்தை 8,00,000 என்று உயர்த்தினால் பல இளைஞர்கள் அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு பெரும் வாய்ப்பாக அமையும். இதனை நடைமுறைப்படுத்த மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு நடவடிக்கைகளைப் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தாழ்த்தப்பட்ட மாணவர் +2 முடித்து உயர்கல்வி பயிலும்போது அரசாணை 93இன் அடிப்படையில் முற்றிலும் இலவசமாக கல்வியைப் பெறமுடியும். அரசு கல்வி நிறுவனம் தவிர்த்து, அரசு உதவிபெறும், தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த அரசாணையை நடைமுறைப்படுத்த முடியாது என்று வெளிப்படையாகவே அறிவிக்கின்றன. இதனால் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்குள்ளப்பட்டுள்ளது. இதனைப் போக்க, பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ‘ஒற்றை சாரள முறை’ (Single Window Sytstem) இருப்போதுபோல் கலை கல்லூரிக்கும் ஒற்றை சாரள முறையை அரசு அடுத்த கல்வியாண்டில் (2027-28) நடைமுறைப்படுத்தும் வகையில் இப்போதே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அமைச்சர் பொறுப்பில் உள்ள உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
சமூகத்தில் அடக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றிக்கும் அரும்பணியை நீங்கள் தொடர்ந்து செய்து ஏற்றிருக்கும் அமைச்சர் பொறுப்புக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று மீண்டும்… மீண்டும் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
— தமிழன்புடன், ஆதவன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.