சென்னைக்கு வந்தேன்; சிவமாகவில்லை!

வெந்ததும் வேகாததும் - கவிராயர் பக்கம் - 8

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சென்னைக்கு வந்து சிவமானேன் என்று தத்துவார்த்தமாகச் சொல்வது உண்டு.

1975இல் நான் உத்தியோக நிமித்தமாகச் சென்னைக்கு வந்தேன். ஓராண்டு தங்க நேர்ந்தது. அப்போது என் வயது 22. கல்லூரிக் காலத்திலேயே தஞ்சை ப்ரகாஷின் இலக்கியக் கும்பலில் சேர்ந்துவிட்டேன்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பொழுதெல்லாம் இலக்கியம் பேசுவது வாய்க்கு ருசியாக ஓட்டல்களில் சாப்பிடுவது (பில் ப்ரகாஷ் கொடுப்பார்) வாழ்க்கையின் உன்னதங்களை அனுபவிப்பது என்று காலம் கழித்துக் கொண்டிருந்தேன். வேண்டா வெறுப்பாக சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதினேன். வேலை கிடைத்துவிட்டது.

நன்றாக நினைவிருக்கிறது. தஞ்சாவூர் ஜங்ஷனில் என்னைச் சென்னைக்கு ரயிலேற்றிவிடப் ப்ரகாஷ், பிரபஞ்சன், இருளாண்டி, முருகேசன் என்று பெரிய பட்டாளமே வந்திருந்தது. மறுநாள் சென்னை வந்து சேர்ந்தேன். மாம்பலம் ரங்கநாதன் தெருவில் குடியேறினேன். வீட்டுக்கு வெளியே ஒரு பெரிய மாமரம். மாடியில் நாங்கள் நாலைந்து இளைஞர்கள் தங்கியிருந்தோம்.

விஸ்தாரமான மாடி. அங்கு தங்கியிருந்தவர்கள் ரசனைமிக்கவர்கள். சினிமா, இசை, இலக்கிய வாசிப்பு – என்று வித்தியாசமான பட்டணத்து இளைஞர் கூட்டம். பக்கத்துத் தெருவில்தான் எழுத்தாளர் ஐராவதம் சுவாமிநாதன் குடியிருந்தார். அலுவலக நேரம் தவிர எஞ்சியபொழுதெல்லாம் அவரோடு இலக்கிய அரட்டைதான். அருகில் மங்கேஷ் தெருவிலிருந்துதான் பிரக்ஞை இலக்கிய இதழ் வெளிவந்து கொண்டிருந்தது.

இரவு 9 மணிக்கெல்லாம் ரங்கநாதன் தெரு வெறிச்சோடிவிடும். பிரக்ஞை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த டயனோரா டி.வி. கடையின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்போம்.

ஐராவதம் எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துவார். பாலகுமாரனும் எங்களோடு பேசுவதற்கு வருவார். இலக்கியம்தான் என்றில்லை. தமிழ் சினிமா, இசைக் கச்சேரிகள், சென்னை சாப்பாட்டு மெஸ்கள் – என்று எங்கள் பேச்சில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இல்லை. மறந்து போய்க்கூட யார் யார் எங்கே வேலை பார்க்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டதே இல்லை. ஒரே ஒரு விதிவிலக்கு ஐராவதம் சுவாமிநாதன் ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்தார் என்று தெரியும். அவர் கையில் தாராளமாகப் பணம் புரளும். எங்கள் அறையில் விலை உயர்ந்த புத்தகங்களை வாங்கிப் போட்டுவிட்டுப் போய் விடுவார்.

ஒருநாள் இரவு பத்து மணி இருக்கும் எங்களுக்கு முன்னால் ஒரு சிறிய நீலநிற ஸ்டாண்டர்ட் கார் வந்து நின்றது. ஓட்டுநர் இருக்கையில் இருந்து ஸ்டைலாக இறங்கினார் ஜெயகாந்தன். எங்கள் பேச்சில் இயல்பாகக் கலந்து கொண்டார்.

அசோக் நகரில் ஓர் அரசியல் கூட்டத்திற்கும் போய்விட்டு வருவதாகச் சொன்னார்.

நண்பர் ஒருவர் அவரைச் சீண்டினார்.

“உங்கள் இலக்கியச் சிம்மாசனத்தை விட்டு இறங்கி ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்?”

“புருவத்துக்கு மைதீட்டிக் கொள்கிறவனும் பொய் முடி வைத்திருப்பவனும் அரசியலுக்கு வரும்போது நான் வரக்கூடாதா? என்று சீறினார் ஜெயகாந்தன். தன் கம்பீரமான நிஜ மீசையை நீவியபடி.

நாங்கள் குடியிருந்த வீட்டின் கீழ்த்தளத்தில் பெரிய கல்யாணக் கூடம் இருந்தது. அங்கே அடிக்கடி பக்திச் சொற்பொழிவுகள் நடக்கும். சொற்பொழிவு முடிந்ததும் சுவையான சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்.

எங்கள் நண்பர்கள் சொற்பொழிவுக்கு முன்னரே அங்கு ஆஜராகி விடுவார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கதாகாலட்சேபம் கேட்க மாம்பலத்து தேவதைகள் வந்துவிடுவார்கள். கதை சொல்பவரின் தத்துவப் பேச்சில் அந்த தேவதைகள் லயித்திருக்க, தேவதைகளின் அழகில் நண்பர்கள் லயித்திருப்பார்கள். இந்தக் கூட்டத்திற்குச் சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன் தவறாது வருவார். அவரைப் பெண்கள் மொய்த்துக்கொள்வார்கள். ‘சரித்திர நாவல் எப்படி சார் எழுதணும்’ என்று ஒரு எழுத்தாள நண்பர் அப்பாவியாக என்னிடம் கேட்பார். கடைசியாகப் பெண்கள் கண்மூடி நின்றபடி பஜனை பாடல் பாடுவார்கள். அவர்களின் முகங்கள் விளக்கு வெளிச்சத்தில் ‘டால்’ அடிக்கும்.

தஞ்சாவூர்க் கவிராயர்
தஞ்சாவூர்க் கவிராயர்

“சாமி கும்பிடும்போது பெண்களுக்கு எங்கிருந்தோ தனி அழகு வந்துவிடுகிறது” என்று ஒரு நண்பர் என் காதில் கிசுகிசுப்பார்.

பக்கத்து அறையில் ஒரு தெலுங்குப் பட டைரக்டர் குடியிருந்தார்.

ஒருநாள் தஞ்சாவூரிலிருந்து வந்த ப்ரகாஷ் சென்னையில் தன் வேலைகளை முடித்துக்கொண்டு என் அறைக்கு வந்தார்.

கதவு திறந்து இருந்தது. ப்ரகாஷ் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார். தாடி. பெரிய வழுக்கை. பெரிய கண்கள். பெரிய ஆகிருதி.

அந்தத் தெலுங்குப் பட டைரக்டர் எட்டி பார்த்தவர் ப்ரகாஷைப் பார்த்துவிட்டு அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிட்டார்.

நாங்கள் பதறிவிட்டோம்.

‘இவரு சாதாரண மனுஷர் இல்லை. பெரிய ஞானி என்று என மனசு சொல்கிறது’ என்றார் தெலுங்கில்.

ப்ரகாஷ் அவரோடு தெலுங்கில் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

தஞ்சாவூர் திரும்பிய ப்ரகாஷ் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் கடைசி வரியை மறக்கமுடியாது.

“சென்னைக்குச் சென்று சிவமானவர்கள் உண்டு. நீ அரியும் சிவனும் ஆகியிருக்கிறாய்!’’

இலக்கியத்தில் ஒருகாலும், அலுவலக வேலையில் ஒருகாலுமாய் என் வாழ்க்கை நகர்வதைப் பார்த்துவிட்டுத்தான் இப்படி நயமாகக் குறிப்பிட்டார் தஞ்சை ப்ரகாஷ்.

—   தஞ்சாவூர்க் கவிராயர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.