மகளிருக்கான கட்டணமில்லாப் ”வெற்றிப் பயணம்” திட்டம் தொடக்கம்
“வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, மகளிருக்குப் பெருமளவில் பயனளித்திடும் வகையில் வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (02.10.2026) சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கித் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் இன்று (02.10.2026) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் சத்திரம் பேருந்து நிலையத்தில் மகளிர் கட்டணமில்லா “வெற்றிப் பயணம்” திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு எஸ்.விஜி, மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி, இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கித் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூக நீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, “வெற்றிப் பயணம்” என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதனடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள 7 போக்குவரத்துக் கழகங்களின் மாநகர், நகர்புற சாதாரணப் பேருந்துகள் மற்றும் மலைப் பகுதிகளில் 40 கி.மீ. வரை மட்டுமே மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்துவந்த நிலையில், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து, இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்படும் மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள்,
புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுப்படுத்தப்பட்டு, மொத்தமாக 12,695 பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வழிவகை மகளிர் கட்டணமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 12,695 பேருந்துகள் வெற்றிப் பயணத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, 1,68,500 நடைகள் (Singles) இயக்கப்படும். இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 இலட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 கிளைகளின் மூலம் இயக்கப்படும் மொத்தம் 642 திட்டமிடப்பட்ட பேருந்துகளில், 424 பேருந்துகள் இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 5 இலட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் மகளிர் எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவ, மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் மற்றும் திருநர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் தேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொது மேலாளர் சதிஷ்குமார், துணை மேலாளர் (வணிகம்) சாமிநாதன், உதவி மேலாளர் (இயக்கம்) மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.