இது ஒன்னும் பிக்பாஸ் வீடு கிடையாது ! ”சாரி ப்ரதர்” என்பதற்கெல்லாம் வேலை கிடையாது ! அண்ணாமலைக்கு எதிராக அணிதிரண்ட பத்திரிகையாளர்கள் !

கேள்வி கேட்டது தந்தி நிருபர். 5 நிமிசமாக அவர் சகட்டு மேனிக்குத் திட்டியது சன் டி.வி.யை. இது ஒரு தந்திரம். நான் சொல்வதை கேட்டுவிட்டு போ. திருப்பிக் கேட்காதே என்ற தந்திரத்தை கையாள்கிறார்.

1

 அண்ணாமலைக்கு எதிராக அணிதிரண்ட பத்திரிகையாளர்கள் !

இது ஒன்னும் பிக்பாஸ் வீடு கிடையாது !
இது ஒன்னும் பிக்பாஸ் வீடு கிடையாது !

தொடர்ச்சியாக, பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாக பேசிவரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளன.
ஜன-25 அன்று மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மு.ஆசிப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம், மூத்தப் பத்திரிகையாளர் திருஞானம், நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால், சென்னை பிரஸ் கிளப்பின் தலைவர் என்.செல்வராஜ் மற்றும் செயலாளர் ச.விமலேஸ்வரன், சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர் மு.குணசேகரன், நியூஸ் 7 ஆசிரியர் தியாகச்செம்மல், சத்தியம் தொலைக்காட்சியின் அரவிந்தாக்ஷன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், இப்போது டாட்காம் பீர்முகம்மது, தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் பிரபுதாசன், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் மணிமாறன், சங்கர், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த சகாயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செல்வராஜ்
செல்வராஜ்

சென்னை பிரஸ் கிளப் சார்பில் பங்கேற்று பேசிய, தலைவர் கிரைம் செல்வராஜ், “பத்திரிகையாளர்களை கீழ்த்தரமாக பார்க்கும் போக்கு நிலவுகிறது. நான் 94 – இல் இந்த துறைக்கு வந்த போது என்னுடன் அப்போது பணியாற்றி சாமானிய பத்திரிகையாளன் இன்று முன்னணி செய்தி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளுக்கு உயர்ந்திருக்கின்றனர். பத்திரிகையாளன் என்றைக்கும் பத்திரிகையாளன்தான், கடைசி வரைக்கும். ஆனால், உங்களைப் பொறுத்தவரையில், இன்றைக்கு இருக்கும் பதவி இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து பேச முடியாத அளவுக்கு தாக்குதல் கொடுக்கும் வகையில்தான் காயப்படுத்தும் வகையிலான வார்த்தை பிரயோகங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இங்கே கூடியிருக்கும் பலரும் பல்வேறு அரசியல் கட்சிகளை ஆதரிக்கக்கூடியவர்கள், சார்ந்து இயங்கக்கூடியவர்கள்தான்.

ஆனாலும், சக பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ஒன்று கூடியிருக்கிறோம். பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகாமல் இதே போல பத்திரிகையாளர்களாக ஒன்றிணைய வேண்டும். இன்று பேசிவிட்டு நாளை மன்னிப்புக் கேட்பதற்கு இது ஒன்றும் பிக்பாஸ் வீடு கிடையாது. மன்னிச்சிருங்க பிரதர்… பிரதர் சாரி… இதெல்லாம் வேண்டாம். சாரியே சொல்லாதீங்க. அதற்கான மரியாதையே போச்சு. பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன் குறிப்பிட்டதைப் போல, இவருக்கு முறையான கவுன்சிலிங்க் கொடுக்க வேண்டும். கூட்டம் போட்டு பேசிவிட்டு கலைந்துவிடுவார்கள் என்றில்லாமல், இனி இதுபோல் நிகழாமல் இருப்பதை உறுதிபடுத்த, பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அடுத்தக் கட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.” என்ற வேண்டுகோளை முன்வைத்தார், அவர்.

பத்திரிகையாளர் சங்கம்
பத்திரிகையாளர் சங்கம்

மூத்தப் பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர் செல்வம் பேசுகையில், ”பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய போராட்டங்கள் பலவற்றை நடத்தியிருக்கிறோம். ராஜீவ்காந்திக்கு எதிரானப் போராட்டத்தை நாம் முன்னெடுத்த போது, அது காங்கிரசு கட்சிக்கு எதிரான போராட்டமாக பார்க்கப்படவில்லை. ஆனந்த விகடனில் கார்ட்டூன் போட்டதற்காக அதன் ஆசிரியர் தண்டிக்கப்பட்டதற்கு எதிராக போராடியபோது, அதிமுகவுக்கு எதிரான போராட்டமாக அது சித்தரிக்கப்படவில்லை. சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாக இருக்கட்டும்; நக்கீரன் கணேசன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டமாக இருக்கட்டும் இவை எதற்கும் சுருங்கிய முத்திரை குத்தப்படவில்லை. பரந்துபட்ட கருத்துக்கள் என்ற அளவில்தான் இந்த போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது.“ என்பதை சுட்டிக்காட்டினார்.

”தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களாக இருந்தால் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். சம்பந்தபட்டவர்களை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள். ஆனால், பாஜக மட்டும்தான் இதனை ஊக்குவிக்கும் கட்சியாக இருக்கிறது.” என்பதை பதிவு செய்தார், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மு.ஆசிப் பேசுகையில், “இதற்கு முன்னர் யாரும் இப்படி பேசியதில்லையா? அவர்களுக்கு எதிராக நீங்கள் எதுவும் செய்ததில்லையே? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இது கட்டமைக்கப்பட்ட பொய். யார் எப்போது, பத்திரிகையாளர்களுக்கு எதிராக, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நடந்துகொண்டார்களோ அவர் யாராக இருந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் அத்தகைய பாரம்பரியம் இருந்து வருகிறது. இந்த பாரம்பரியத்தை புரிந்துகொள்ளாதவர்கள்தான், அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் அப்போ அப்படி பேசினாங்களே, அப்போ ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை? என்று கேட்கிறார்கள். நியூஸ்-7 நிருபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கூட தமிழக அரசின் மெத்தனத்தை போலீசின் அலட்சியத்தை கண்டித்துத்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தித்தான் தமிழகம் முழுவதும் நாம் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். இந்தக்கூட்டத்திலும் அதனை கண்டித்திருக்கிறோம். இதெல்லாம் இவர்களின் கண்களுக்கு தெரியவே, தெரியாது. தெரிந்தும் தெரியாதது போல பேசுவார்கள்.” என்றார்.

பத்திரிகையாளர் சங்கம்
பத்திரிகையாளர் சங்கம்

சன் நியூஸ் ஆசிரியர் மு.குணசேகரன் பேசுகையில், “தமிழகத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. திமுக தரப்பில் யாரேனும் பேட்டி கொடுத்தால், அதனை எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தரப்பில் மறுத்து மறுபேட்டி கொடுப்பார்கள். எதிர்விணையாற்றுவார்கள். இது அரசியல் உரையாடல். பேட்டி கொடுத்த அரசியல் கட்சி பிரமுகரை விட்டுவிட்டார், அவர் சொன்ன கருத்துக்களின் மீதும் கருத்துக்களை சொல்லவில்லை, மாறாக, யார் பேட்டி எடுத்தார்களோ அந்த நெறியாளரை விமர்சிக்கிறார். அதுவும் மிகவும் கொச்சையாக விமர்சிக்கிறார். பண்பட்ட அரசியல் உரையாடல் நடந்த தமிழகம். பல்லுபடாம என்ற பதத்தில் யாரும் பேசியதில்லை. பாஜக தலைவர்களேகூட பேசியதில்லை. கவன ஈர்ப்புக்காகவெல்லாம் பேசவில்லை, இதன்பின்னே ஒரு செயல்திட்டம் இருக்கிறது.

அதுவும் திருவான்மியூர் அருகே ஒரு கோயில் வாசலில் நின்று இவ்வாறு பேசியிருக்கிறார். ஊர் வழக்கு என்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னர் பாஜக தலைவராக இருந்தார் இப்போது கவர்னராக இருக்கிறார். அவர் இதற்குமுன்னர் இதே வார்த்தையை பேசியிருக்கிறாரா? அதே பகுதியைச் சேர்ந்தவர்தான் வானதி சீனிவாசன். அவர் எங்கேயாவது எங்க ஊர் வழக்கு என்று பேசியிருக்கிறாரா? தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்ககூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அதே பகுதியை சேர்ந்தவர்தான். அவர் பேசியிருக்கிறாரா? அப்படி யாரும் இதுவரை பேசியதில்லை. ஏனென்றால், அது வழக்கம் அல்ல. அதன்பிறகும்கூட, சாரி ஒரு ப்ளோல சொல்லிட்டேன்னு சொல்லல. மாறாக, அப்படித்தான் பேசுவேன்.

மன்னிப்புக்கூந்தல் எல்லாம் கேட்க முடியாது என்கிறார். எந்த அரசியல் தலைவராவது “மன்னிப்புக்கூந்தல்” என்று பேசி கேட்டிருக்கிறீர்களா? வாட்சப் வழியாக, பேஸ்புக் வழியாக, டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் புழங்கும் ஒரு சொல். அதிலிருந்து பயிற்சி எடுத்து பேசியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மூன்றாண்டுகள்தான் ஆகிறது. அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க கூடியிருக்கும் பத்திரிகையாளர்கள் பலர் முப்பதாண்டுகால அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் ஒன்றுகூடி நமக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்று அவர் யோசிக்க போவதில்லை. இந்த கும்பல் எனக்கு எதிராக மூன்று முறை போராடியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். தனக்கு எதிராக போராடியவர்களை பத்திரிகையாளர்களாக பார்க்கவில்லை. கும்பல் என்கிறார். அடிவருடி என்கிறார்.

பத்திரிகையாளர் சங்கம்... போராட்டம்
பத்திரிகையாளர் சங்கம்… போராட்டம்

திருநெல்வேலியில் ஒரு சம்பவம். கேள்வி கேட்டது தந்தி நிருபர். 5 நிமிசமாக அவர் சகட்டு மேனிக்குத் திட்டியது சன் டி.வி.யை. இது ஒரு தந்திரம். நான் சொல்வதை கேட்டுவிட்டு போ. திருப்பிக் கேட்காதே என்ற தந்திரத்தை கையாள்கிறார். அரசியல் நாகரீகம் என்பது ஊடகவியலாளர்களுடன் ஊடக சந்திப்பில் அவர்கள் நடந்துகொள்வதை பொறுத்ததுதான் அமைகிறது.” என்றார்.

பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் திரளான அணிதிரண்டு, மிக முக்கியமாக சங்க வேறுபாடுகளை கடந்து பத்திரிகையாளர்களாக ஒன்றிணைந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

1 Comment
  1. Mani gandan k says

    Correct 💯

Leave A Reply

Your email address will not be published.