நேற்று ( 28.02.2025 ) இரவு தொலைக்காட்சிக்காரர்கள் குறிப்பாக புதிய தலைமுறை ஊடகம் மிகவும் அதிகமாக என்னை மிரட்டிவிட்டது.
ஏதோ சம்பல் கொள்ளைக்காரர்கள் சரணடையும் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதுபோல அத்தனை பரபரப்பு அத்தனை மெனக்கெடல்.
பாலியல் வழக்கில் ஒரு தலைவர் விசாரணைக்கு வருகிறார் இவ்வளவுதான் செய்தி . ஆனால் நம்முடைய ஊடகங்கள் என்ன செய்தன சம்பல் கொள்ளைக்காரன் அல்லது வீரப்பன் அல்லது பிரபாகரன் போன்றவர்கள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடையப்போவது போல ஒரு பரபரப்பையும் கிளுகிளுப்பையும் படபடப்பையும் வெடவெடப்பையும் உருவாக்கி விட்டார்கள்.

இந்த வழக்கே நிறைய விவாதங்களுக்கு உரிய ஒரு வழக்கு. சாதாரண பாலியல் வழக்கோடு இதை ஒப்பிட முடியாது. சீமான் நமக்கு ஆகாதவர் தான். ஆனாலும் இந்த வழக்கில் இருமுனை நியாத்தை அல்லது இருமுனை அநியாயத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட வழக்கு. அப்போது இந்த வழக்கு காரணமாகவே சீமான் ஜெயலலிதாவை ஆதரித்தார் . அது மட்டுமல்ல இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சுலோகன் அமைத்தார் ஆகவே இந்த வழக்கை அம்மையார் நிறுத்தி வைத்துவிட்டார்.
பிறகு அந்த நடிகை மறுபடியும் இந்த வழக்கை தொடுக்கிறார். என்ன நடக்கிறதோ தெரியவில்லை வழக்கு தொடுக்கவும் சில சமரசங்கள் நடக்கவும் வழக்கு வாபஸ் பெறவும் இப்படியாகவே இந்த வழக்கு பதினோரு ஆண்டுகள் நடந்து முடிந்துள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கிடையில் சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்து அவர்களின் மகளை திருமணம் முடித்துக் கொள்கிறார் .
இந்த வழக்கில் அந்த நடிகை அவர்களும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனால் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு தனக்கான நீதிக்காக போராடி இருக்கிறார். ஆனால் வழக்கு கிணற்றுக்குள் போட்ட கல்லு போலத்தான் இருந்தது.
“வீனாச காலே விபரீத புத்தி” என்பார்கள் அதுபோல பெரியாரை அதிதீவிரமாக தாக்கிப் பேசிய சீமான் சும்மா இருக்காமல் அந்த வழக்கை இனி முடித்து வைக்க வேண்டும் என்று அவராக போய் நீதிமன்ற வலையில் விழுந்துவிட்டார். நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது விசாரித்து மூன்று மாதத்திற்குள் முடித்து வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.
இது சீமான் தனக்குத்தானே மண்ணள்ளி போட்டுக்கொண்ட பரிதாபமானது நிலை. இதற்கிடையே தான் சம்மனை கிழித்தல் உதவியாளர் கைது என்று நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று அவ்வளவு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அது நடக்காமல் இருந்திருந்தால் அல்லது ஊடகங்கள் இந்த அளவிற்கு பெரிது படுத்தாமல் இருந்திருந்தால் சாதாரணமாக சீமான் வந்து வாக்குமூலத்தை கொடுத்துவிட்டு போய் இருப்பார். ஊடகங்கள் செய்த பரபரப்பில் கூட்டம் கூட இது பெரிய நாடு தழுவிய செய்தியாக பரவி விட்டது.
பெரியார் விஷயத்தில் பல வழக்குகள் இருக்கின்றன அவற்றையெல்லாம் எடுத்து சீமானை கைது செய்தால் அவருடைய இமேஜ் கூடிவிடும் என்று காவல்துறை நினைத்து உள்ளது அதற்கு தகுந்தது போல் உயர் நீதிமன்றம் இந்த நடிகை வழக்கை தூக்கி காவல்துறை கையில் கொடுத்துவிட்டது. இந்த வழக்கில் சீமான் கைது செய்யப்பட்டார் அவருடைய இமேஜ் டேமேஜ் ஆகும் என்று கணக்கு போட்டு உள்ளார்கள்.
அரசியல்வாதிகள் இப்படித்தான் நினைப்பார்கள். இதை சீமானும் புரிந்து வைத்துள்ளார் நேற்று முழுவதும் நினைத்தபோது நான் வருவேன் என்று வசனம் பேசியவர் நேற்று இரவே ஆஜராகிவிட்டார் ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் வெளிவிக்கப்பட்டார். இவ்வளவுதான் விஷயம் இதில் நம்மை பரபரப்பாகியது தொலைக்காட்சிகள் தான்.
பெரிய யுத்த காட்சி போல கட்டமைத்து விட்ட ஊடகங்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றன என்பதற்கு நேற்றைய நிகழ்ச்சிகள் உதாரணம்.
இடையில் வீரப்பன் மகள் காவல்துறையோடு மல்லு கட்டுவதெல்லாம் சீரியஸான ஒரு படத்தில் ஒரு காமெடி பீஸ் போல காவல்துறைக்குத் தெரியும் இந்த மாதிரி பரபரப்பான ஒரு சூழலில் கைது செய்ய மாட்டார்கள் . சீமானின் வாக்குமூலத்தில் திருப்தி இல்லை கைது செய்ய வேண்டும் என்றாலும் சீமானின் ரசிகர் குஞ்சுகள் தூங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது திடீரென ஒரு நாள் கைது செய்வார்கள் அதுதான் பெரும்பாலான நடைமுறை மற்ற பாலியல் வழக்கிலிருந்து இது வேறுபட்டது. நெருங்கி பழகிவிட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று உடலை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டு போன வழக்கு இது.
உயர் நீதிமன்றத்தில் சீமானுக்கு எதிரான தீர்ப்பு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் அதுக்கு மாறுபட்ட தீர்ப்பு வர வாய்ப்பு இருக்கிறது உச்சநீதிமன்ற கதவை தட்டுவதற்கும் சீமானுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஏனென்றால் இந்த வழக்கின் தன்மை அப்படி பிசுபிசுத்து போன ஒன்று என்பது என்னுடைய அனுமானம்.
— கவிஞர் ஜெயதேவன்.