அங்குசம் பார்வையில் ‘2 கே லவ்ஸ்டோரி’
தயாரிப்பு : ’சிட்டி லைட் பிக்சர்ஸ்’ விக்னேஷ் சுப்பிரமணியன். டைரக்ஷன் : சுசீந்திரன். தமிழ்நாடு ரிலீஸ் : ஜி.தனஞ்செயன். நடிகர்-நடிகைகள் : ஜெகவீர் [ அறிமுகம் ], மீனாட்சி கோவிந்தராஜன், பாலசரவணன், ஆண்டனி பாக்யராஜ், துஷ்யந்த், லத்திகா பாலமுருகன், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, வினோதினி வைத்தியநாதன், ஜி.பி.முத்து. ஒளிப்பதிவு : வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன், இசை : டி.இமான், பாடல்கள் : கார்த்திக் நேத்தா, எடிட்டிங் : தியாகு, ஆர்ட் டைரக்டர் : சுரேஷ் பழனிவேலு, நடனம் : ஷோபி பால்ராஜ், காஸ்ட்யூம் டிசைனர் : மீரா, புரொடக்சன் எக்ஸ்கியூட்டிவ் : டி.முருகேசன், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ].
மோனிகா [ மீனாட்சி கோவிந்தராஜன் ] ஹெட்டாக இருக்கும் ‘ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட் குழுவில் இருக்கிறார் அவரின் 22 ஆண்டு கால நண்பனான கார்த்திக் [ ஜெகவீர் ]. போட்டோ ஷூட்டின் டைரக்டர் பாலசரவணன் உட்பட அனைவருமே 2கே கிட்ஸ் தோழர்களும் தோழிகளும் தான். அந்தக் குழுவினர் ஜாலியாகவும் தூய்மையான நட்புடனும் வேலை செய்கிறார்கள். அந்தக் குழுவில் புதிதாக எண்ட்ரியாகும் 90 கிட்ஸான ஆண்டனி பாக்யராஜ் [ ஜெயம் ரவியை வைத்து ‘சைரன்’ படத்தை டைரக்ட் பண்ணியவர் ] மோனிகாவும் கார்த்திக்கும் லவ்வில் விழுவார்கள் என்கிறார். “அது நடக்கவே நடக்காதுடா. ஏன்னா அது இருபத்திரெண்டு வருச பியூர் ஃப்ரண்ட்ஷிப்டா” என்கிறார் பாலசரவணன். இதில் யார் சொன்னது நடந்தது? என்பதற்கு விடை தான் இந்த ‘2கே லவ் ஸ்டோரி.
இந்தப் படத்தில் இளைஞர்கள்-இளம் பெண்கள் பட்டாளமே இருந்தாலும் யாரும் சரக்கடிக்கவில்லை, தம்மடிக்கவில்லை, பஃப்பில் மப்பாட்டம் போடவில்லை, ஆபாச, சில்மிஷ சீண்டல்கள் இல்லை, வல்காரிட்டி டயலாக்குகள் இல்லை. முழுக்க முழுக்க பாஸிட்டிவ் அப்ரோச் தான், எனெர்ஜெட்டிக் டயலாக்குகள் தான். கான்ஃபிடெண்ட் டிராக் தான். இதற்காகவே டைரக்டர் சுசீந்திரனுக்கு நன்றியை ஏராளமாகவும் பாராட்டை தாரளமாகவும் சொல்லலாம்.
படத்தில் முதன்மை இடத்தில் இருப்பவர் மோனிகாவாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் தான். பார்ப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகுவை மிக்ஸ் பண்ணியது போல பளீர்னு இருக்கார். “டேய் கார்த்திக்”னு ஜெகவீரை அன்பு அரட்டலாக அழைப்பதிலும், “உங்களவிட என்னை அதிகமா புரிஞ்சவன் கார்த்திக் தான்” என அம்மா வினோதினியிடம் பேசும் காட்சியிலும் ஜெகவீரின் காதலியாக வரும் பவித்ராவிடம் ‘பொஸஸிவ்னெஸ்’ பற்றிப் பேசும் காட்சி உட்பட அனைத்துக் காட்சிகளிலுமே நடிப்பில் மிளிர்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன்.
அறிமுக நாயகன் ஜெகவீர் நடுத்தர வர்க்கத்து 2கே கிட்ஸ் இளைஞனை கண்முன்னே நிறுத்துகிறார். டயலாக் டெலிவரியிலும் பாடிலாங்குவேஜிலும் பாஸாகிவிட்டார். இன்னும் கவனமாகவும் உண்மையாகவும் உழைத்தால் டிஸ்டிங்ஷன் மார்க் வாங்கி ஜொலிக்கலாம். படத்தில் ரிலாக்ஸுக்கு க்யாரண்டி தருகிறார்கள் பாலசரவணனும் ஆண்டனி பாக்யராஜும். இடைவேளைக்குப் பின்பு சிங்கம்புலி அதை கையில் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஜெயப்பிரகாஷ் வீட்டில் நடக்கும் சம்பந்தம் பேசும் சீனில் சிங்கம்புலியின் கொங்கு பாஷை காமெடி சரவெடி.
மீனாட்சி கோவிந்தராஜனின் அம்மாவாக வினோதி வைத்தியநாதன், அப்பா வரும் கேரக்டர் [ பார்ப்பதற்கு ஒரு சாயலில் டைரக்டர் பி.வாசு போலவும் ஒரு சாயலில் ‘நீயா? நானா?’ கோபிநாத் போலவும் இருக்கிறார். பெயர் தான் தெரியவில்லை. துஷ்யந்தின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் என அனைவருமே நிறைவான அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இமானின் இசையில் கார்த்திக் நேத்தாவின் பாடல்கள் அனைத்துமே இளமை, இனிமை, துள்ளல் ரகங்கள்.
44 வயதான டைரக்டர் சுசீந்திரன் 24 வயதுள்ள இளைஞனுக்குரிய ஃப்ரெஷ் பிரெய்னுடன் இடைவேளை வரை படத்தைக் கொண்டு போகிறார். அதுக்கப்புறம் 54 வயது சிந்தனையுடன் படத்தை முடித்திருக்கிறார்.
— மதுரை மாறன்.