தொலைக்காட்சி விவாதங்கள் பார்ப்பதை நிறுத்திவிடலாமா? என்ன நடந்தது என்றால் 2014-இற்குப் பிறகு ஆங்கில தொலைகாட்சி விவாதங்கள், நிகழ்ச்சிகள் பார்ப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டேன். தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே பார்த்து வந்தேன். இப்போது அதையும் நிறுத்திவிடலாமா என்று நினைக்கிறேன்.
காரணங்கள் ஆழமானவை. ஒரு தேர்தல் முடிவு தவறாக அமைந்தால், ஒரு மோசமான ஆட்சியாளர் பதவியேற்றால் அதனை நேரடியாகக் கண்டிப்பதில் மிகப்பெரிய தயக்கம் நிலவுகிறது. டிமோவுக்கும், விஜய்க்கும் அதிக வேறுபாடுகள் கிடையாது. உண்மையில் விஜயே ஆகப்பெரிய சீரழிவு.
இது அரசை எதிர்ப்பதில் இருக்கும் தயக்கமல்ல. காங்கிரஸோ, தி.மு.க-வோ ஆட்சியில் இருந்தால் கடுமையாக எதிர்த்து, விமர்சித்துப் பேசுவார்கள். ஆனால் மிக மோசமான எதேச்சதிகாரிகள் ஆட்சிக்கு வந்தால் அதை நம்ப மறுப்பதுபோல மறுகும் பழக்கம் இருக்கிறது.
இதற்கு ஆழமான காரணம் மூன்று மக்களாட்சி மூடநம்பிக்கைகள். இதை எல்லோரும் பேசுகிறார்கள்.
மூட நம்பிக்கை ஒன்று : “மக்களைக் குறை சொல்லமாட்டேன்” மக்களாட்சியில் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். Nonsense. மக்களாட்சி என்பது வெகுஜன இறையாண்மை. எப்படி மன்னர்கள் தவறு செய்தால் விமர்சிக்க வேண்டுமோ, அப்படி மக்கள் தவறு செய்தாலும் விமர்சிக்க வேண்டும். மக்கள் தீர்ப்பு புனிதம், மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது.
மூட நம்பிக்கை இரண்டு : “தலைமை ஏற்பவரின் தனிப்பட்ட பண்புகள் குறித்து பேசக்கூடாது.” இதுவும் மிகவும் தவறானது. முதல்வரோ, பிரதமரோ மிக முக்கியமான முடிவுகள் எடுக்கும் இடத்தில், நிர்வாகத்தை வழி நடத்தும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் சிந்தனைகளைப் பேச வேண்டும். கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும்.
மூட நம்பிக்கை மூன்றாவது : “தேர்தலில் வெற்றிபெறுவதுதான் அரசியல்” என்ற கொச்சை நடைமுறைவாதம். இது முற்றிலும் மக்களாட்சியை குழிதோண்டிப் புதைக்கும் அணுகுமுறை. யார் வெற்றி பெறுவார்கள் என்று எப்போது பார்த்தாலும் பேசுவது. யார் வெற்றிபெற வேண்டும் என்று பேச அனுமதித்தால்தானே வெவ்வேறு தரப்பினரின் அரசியல் பார்வைகள் வெளிவரும்? கருத்தியலை விவாதிக்க வேண்டுமா, கருத்துக் கணிப்பு ஆரூடம் சொல்லவேண்டுமா?
இந்த பிரச்சினையெல்லாம் உலகளாவிய பிரச்சினைகள். உலகில் 250 ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கிய மக்களாட்சிக் குடியரசு என்ற விளையாட்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது டிரம்ப்பின் அமெரிக்காவில். மரணப்படுக்கையில் இருக்கிறது என்று சொல்லலாம். சமூக ஊடகங்களும், செயற்கை நுண்ணறிவும் “சமூகம்” என்பதன் பொருளையே மாற்றி வருகின்றன.
ஆனால், தோழர்களே, என் கேள்வியெல்லாம் நாம் ஏன் போராடாமல் தோற்கவேண்டும்? We should we give up without fighting? Why accept defeat? தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள் இந்த மக்களாட்சி மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிவரவேண்டும். அது நடக்குமா என்று தெரியாததால் நான் பார்ப்பதை நிறுத்துவதுதான் ஒரே சாத்தியம்.
— ராஜன்குறை






Comments are closed, but trackbacks and pingbacks are open.