சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திலேயே (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு) தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், வீரமும் தன்மரியாதையும் மிக்கவர்களாகவும், ஆண்களுக்கு நிகராகச் சமூகத்தில் இயங்கியவர்களாகவும் இருந்துள்ளனர்.
சங்க இலக்கியங்களில் உள்ள இதுபோன்ற பாலின சமத்துவக் கருத்துக்களைச் சிறுவர்களுக்குக் கதைகள் மூலமாகக் கொண்டு சேர்ப்பது அவர்களின் மனதில் சமத்துவச் சிந்தனையை ஆழமாக விதைக்கும்.
சங்க காலங்களில், குறிப்பாகத் தமிழர் மரபில் பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்ததாக சமூகத்தின் பொது புத்தியில் ஆழமாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்த தவறான பொது புத்தி, பெரும்பாலான மக்களிடம் மரபாக பின்பற்றப்படுகிறது.
நம் சமூகத்தில் நிலவும் பெரும்பாலான பாலின சமத்துவ ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணமாக மரபு சார்ந்த தவறான கதைகளும் கருத்துக்களும் உள்ளது. இத்தகைய போக்கை மாற்ற சங்க இலக்கியங்கள் மற்றும் வரலாற்று சான்றாதாரங்களுடன் நம் மரபின் பாலின சமத்துவத்தின் உண்மைத் தன்மையினை சிறுவர்களுடன் கதைகள் வழி உரையாட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
வீரமும் துணிச்சலும் மிக்க பெண் பாத்திரங்களை முன்னிறுத்துதல்:
அனைவரும் அறிந்த சங்க கால ஒளவையார், காக்கைப்பாடினியார் போன்ற பெண்பாற் புலவர்கள் அரசர்களுக்கே அறிவுரை கூறும் அளவுக்கு உயர்ந்து நின்றனர். அதேபோல், தன் குடும்பத்தையும் நாட்டையும் காக்கும் பெண்களின் வீரக் கதைகளையும் சொல்லலாம்.
மேலும் சிறுவர்கள் சாகசக் கதைகளை விரும்புவார்கள். எனவே, ஒரு சிறுமி அல்லது இளம்பெண் இயற்கைப் பேரழிவிலிருந்தோ அல்லது விலங்குகளிடமிருந்தோ தன் ஊரைக் காப்பாற்றும் துணிச்சலான கதையாக அதை மாற்றலாம்.
ஆண்களைப் போலப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதைச் சொற்களால் திணிக்காமல், கதையின் நாயகியின் செயலால் சிறுவர்கள் உணரச் செய்ய வேண்டும்.

வீட்டு வேலைகளில் பாலினப் பாகுபாடின்மையை உணர்த்துதல்:
சங்க காலப்பாடல்களிலும் திணை வாழ்வியலிலும், ஆண்-பெண் இருவரும் சேர்ந்து உழைக்கும் தன்மையைக் காணலாம். உழவுத் தொழில், வேட்டையாடுதல், பொருட்கள் சேகரித்தல் போன்ற பலவற்றில் இருவரின் பங்களிப்பும் இருந்திருக்கிறது.
உதாரணமாக அண்ணனும் தங்கையும் அல்லது சிறுவனும் சிறுமியும் இணைந்து காட்டில் பழங்கள் சேகரிப்பது, விலங்குகளுக்கு உதவி செய்வது போன்ற காட்சிகளை அமைக்கலாம். “சமையல் வேலை பெண்ணுங்களுக்கு மட்டும்தான், வெளியில் சென்று விளையாடுவது ஆண்களுக்கு மட்டும்தான்” என்ற எண்ணம் சங்க காலத்தில் இல்லை என்பதை அவர்களின் கூட்டுச் செயல்கள் மூலம் விளக்கலாம்.
(தொடரும்)
— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளா், கதைசொல்லி






Comments are closed, but trackbacks and pingbacks are open.