Thursday, November 26, 2026 | 4:55 PM IST

ஜெயகாந்தன் எழுதுவதை ஏன் நிறுத்திக்கொண்டார்?

வெந்ததும் வேகாததும்- கவிராயர் பக்கம் - 12

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஜெயகாந்தன் எழுதுவதை ஏன் நிறுத்திக்கொண்டார்? இந்தக் கேள்விக்கு ஜெயகாந்தனே பதில் சொல்லியிருக்கிறார்.

“சிங்கம் தான் சிங்கம் என்பதை நிரூபிக்க எப்போதும் கர்ஜித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை. கர்ஜிக்காவிட்டாலும் சிங்கம்… சிங்கம்தான்!”

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இது சிங்கத்துக்கு மட்டும் பொருந்தும். ஜெயகாந்தன் எழுத்துலக சிங்கமல்லவா?

ஜெயகாந்தன் தொடர்ந்து எழுதியிருக்கலாமே என்று ஆதங்கப்படும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

“இந்த ஆசாமி எழுதுவதை எப்போது நிறுத்திக்கொள்வான்?” என்று டன்டன்னாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்களைப் பார்த்து ஆயாசப்படும் வாசகர்கள் இருக்கிறார்கள்.

“ஏன் சார் எழுதுகிறீர்கள்?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளாத எழுத்தாளர்கள் இருக்கமுடியாது.

“இதைத் தெரிந்து உமக்கு என்ன ஆகப்போகிறது?” என்று பேட்டியாளரிடம் ஒரு எழுத்தாளர் எரிந்து விழுந்தார்.

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்

ஆனாலும், இந்தக் கேள்விக்கு எழுத்தாளர்கள் பலரும் விடையளித்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் சக்தி காரியாலயம் ஒரு தொகுப்பை வெளியிட்டது. 1962-இல் சி.சு.செல்லப்பா ‘எதற்காக எழுதுகிறேன்’ என்ற தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அண்மையில் சந்தியா பதிப்பகம் இக் கேள்விக்குப் பதிலாகக் கிடைத்த கட்டுரைகளை வெளியிட்டது.

இவற்றின் தொகுப்பு ஆசிரியர் கே.பி.நாகராஜன் ஜார்ஜ் ஆர்வெல்லின் “வார்த்தைகள் ஒன்றுகூடி ஏற்படுத்தும் இன்பம் அலாதி” என்ற கருத்தை ஆமோதிக்கிறார்.

பொதுவாக, இந்தக் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் பழைய, புதிய எழுத்தாளர்களின் பதில்களைப் பார்க்கும்போது இதைப் பற்றி எப்போதாவது அவர்கள் எண்ணிப் பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புதுமைப்பித்தனேகூட ஒரு கட்டுரையில் ‘என்னமோ தோணித்து எழுதினேன்’ என்கிற ரீதியில் பதில் சொல்லி இருப்பார். அதுதான் விஷயம். வேலி ஓரம் ஒரு செடி முளைக்கிறது. அதற்கு என்ன நோக்கம் இருக்கமுடியும்?

பூவே…. பூவே… நீ எதற்காகப் பூக்கிறாய்? அக்காக் குருவியே ஏன் இப்படி தொண்டை வறளக் கத்துகிறாய்? என்று கேட்பதற்கும் எழுத்தாளரிடம் போய் எதற்காக எழுதுறீர்கள் என்று கேட்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை’

எப்பேர்ப்பட்ட கொம்பனையும் மண்ணில் விழுத்தாட்டும் சக்தி இந்த சமூகத்துக்கு உண்டு. எழுத்தையே பிழைப்பாக எண்ணியிருப்பவர்கள் பாடு அதோகதிதான். ஆகவே, எழுத்துக்கு ஆகப் பெரிய நோக்கமில்லை. ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. அஃது ஓர் ஈனப்பிழைப்பு“ என்று தஞ்சை ப்ரகாஷ் ஒருபுறம் முழங்கினார்.

தஞ்சாவூர் கவிராயர்
தஞ்சாவூர் கவிராயர்

அவரது சிஷ்யராக அறியப்பட்ட பிரபஞ்சன் இன்னும் கொஞ்சம் வயிராற சோறு போட்டிருந்தால் தமிழைத் தூக்கி நிறுத்தியிருப்பேன் என்று சமத்காரம் செய்தார்.

‘எழுத்தாளன் இந்தச் சமூகத்தில் தொழிலாளி என்று கருதப்படும் எவனைவிடவும் உசந்தவன் இல்லை. எழுத்து என்பது மனிதன் பிரித்துக்கொண்ட எத்தனையோ வெகுசாதாரண வேலைகளில் ஒன்றுதான்’ என்று எம்.வி.வெங்கட்ராமன் சொல்வார்.

“எழுத்தாளரும் தச்சரும் ஒன்றுதான். தொழிலிலே உயர்வு தாழ்வு இல்லை” என்று வாயிலிருந்த வெற்றிலை சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து சொன்னார் கரிச்சான் குஞ்சு.

நிஜமான எழுத்து என்பது பண்டாரங்களின் கையிலிருக்கும் திருவோடு அல்ல. அது பசி தீர்க்காது. எழுத்துக்கு யாரும் கூலி தர முடியாது. குருதட்சணை என்று வேண்டுமானால் சொல்லலாம்… இப்படி எங்கள் பேச்சு நீண்டுகொண்டே போயிற்று.

கடைசியாக ஜே.கே.சொல்வதை நாங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம்.

“எழுத்து என் ஜீவிதம். ஜீவனம் அல்ல!”

— தஞ்சாவூர்க் கவிராயர், 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.