நான் கருத்துக்கணிப்பு எடுக்கவில்லை, அது ஒரு மோசடி
“இளைஞர்கள் அனைவரும் தவெகவுக்குத்தான் வாக்களிப்பார்கள். தனித்தே ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆகிவிடுவார் விஜய்” என்று அக்கட்சியினர் மட்டுமல்ல, சில பல பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும்கூடச் சொல்லி வருகிறார்கள்.
இது எதார்த்தமா?
1. தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி. அவர்களில் 18 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 2.37 கோடி. அதாவது, 41.49%. இந்த வாக்குகள் அப்படியே தவெக பக்கம் சாய்ந்தால், நிச்சயம் அக்கட்சி ஆட்சி அமைக்கும். விஜய் முதலமைச்சர் ஆகிவிடலாம்.
ஆனால், அது சாத்தியமா?
ஒட்டுமொத்தமாக ஒரு பக்கம் வாக்குகள் சாய வேண்டும் என்றால், அரசுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்பு மக்களிடம் இருக்க வேண்டும். தற்போது அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கலாம்; ஆனால் கடும் எதிர்ப்பு மனநிலை என்பது இல்லை. கட்சி சார்பான ஆதரவு/எதிர்ப்பு நிலவுகிறது.
ஆகவே, அப்படி ஒரேயடியாக எந்தக் கட்சியின் பக்கமும் வாக்குகள் சாயும் நிலை இந்தத் தேர்தலில் இல்லை.
2. குறைந்தபட்சம், ஒரு அலை வீசினாலாவது மாற்றம் வருமா எனப் பார்ப்போம்.
திமுகவுக்கு எதிராக அலை வீசிய 1991 தேர்தலிலேயே அக்கட்சி 29.9% வாக்குகள் பெற்றது. அதிமுகவுக்கு எதிராக அலை வீசிய 1996-லேயே அக்கட்சி 27.1% வாக்குகள் பெற்றது.
தற்போது இந்த வாக்குச் சதவீதத்தில் மாற்றம் இருக்கலாம். ஆனால், தான் விரும்பும் கட்சிக்குத்தான் வாக்கு என்பவர்கள் கணிசமானோர் உள்ளனர். அவர்களில் கணிசமானோர், இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
திமுக, அதிமுக கூட்டங்களில் கூடும் இளைஞர்களைப் பார்த்தாலே இதை உணர முடியும். தவிர, இந்த இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளில்தான் முக்கியமான கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகளில் பெரும்பாலானவற்றின் இளைஞர்கள் அரசியல் ரீதியாக வந்தவர்கள் என்பதால் வேறு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

3. “வீட்டுக்கு வீடு விஜய், விஜய் என இருக்கிறார்கள். அவர்கள் வாக்கு தவெகவுக்குத்தான்” என்கிறார்கள். அது இல்லை. அப்படியே அது உண்மை என்று வைத்துக்கொள்வோம்; வீட்டுக்கு வீடு ரஜினிகாந்த், ரஜினி இருக்கிறார்கள். கமல்ஹாசன், கமல் இருக்கிறார்கள். அஜித்குமார், அஜித் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், எஸ்.கே. இருக்கிறார்கள். இவர்கள் எவரும் தவெகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
4. “இரண்டு மூன்று வயது குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்க” என்கிறார்கள். அதைக் கேட்டுப் பெற்றோர் வாக்களிப்பார்கள் என்று தவெகவினர் சொல்கிறார்கள். விவாத நிகழ்ச்சியில் இப்படி ஒருவர் சொல்ல… நான், “இதென்ன பிரமாதம், என் டாக்டர் தோழியிடம், கர்ப்பிணி ஒருவர் பரிசோதனைக்கு வந்தாராம். வயிற்றில் இருக்கும் குழந்தை, ‘விஜய்க்கு ஓட்டுப்போடுங்க’னு சொல்லுச்சாம்” என்றேன்.
குழந்தை கேட்கும் ஐஸ்கிரீம், சாக்லேட்டுகளையே ரெண்டு திட்டுத் திட்டிவிட்டுத்தான் வாங்கிக்கொடுப்பார்கள் பெற்றோர். ஓட்டுப்போடுவதைச் சுயமாகத்தான் தீர்மானிப்பார்கள். (வேண்டுமென்றால், இரண்டு வயதில் இருந்து வாக்குரிமை கோரி தவெக போராட்டம் நடத்தலாம். அப்படிச் சட்டம் வந்தாலாவது அவர்களுக்குச் சாதகமான முடிவு கிடைக்குமா எனப் பரிசோதித்துப் பார்க்கலாம்.)
5. விஜய் ரசிகர்கள் பலரும்கூட.. கள்ளக்குறிச்சி பலிகள், பொதுப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றிச் சொந்தப் பிரச்சினைகளுக்கும் விஜய் வாய் திறக்காதது, திறக்கும்போதுகூடப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது, பிரச்சாரங்களுக்கு வராமல் அடிக்கடி லீவ் எடுப்பது போன்ற காரணங்களால், “யோசிக்கலாமா” என யோசிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
6. இன்னும் கணிசமான ரசிகர்கள், “நம்ம தளபதி முதலமைச்சர் ஆகிவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்தான். ஆனால் அவரின் புதுப் படங்கள் வராவிட்டால் என்ன செய்வது? கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய முடியாது, பிளாக்கில் டிக்கெட் வாங்கி முதல் காட்சி பார்க்க முடியாது” என்று சிந்திப்பார்கள். இவர்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மனமில்லாவிட்டால், வாக்களிக்காமலேயே இருந்துவிடுவார்கள்.
7. இளம் தலைமுறையினரில் சிலர், ஒரு வேகத்தில் “திமுக, அதிமுக வேண்டாம்” என்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாக்குகளைத்தான் முன்பு விஜயகாந்த் அள்ளினார்; தற்போது சீமான் பெறுவதும் இவர்களின் வாக்குகளே. ஆகவே நாதக வாக்கு கொஞ்சம் தவெகவுக்கு வரலாம்.

காரணம், விஜய் ரசிகர்களுக்கும் சீமான் ரசிகர்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. சீமான் பேசுவதையெல்லாம் அந்த ரசிகர்கள் நம்புவார்கள்; விஜய் பேசாததை எல்லாம் கூட அந்த ரசிகர்கள் நம்புவார்கள். இதுதான் வித்தியாசம்.
இந்த முறை சீமானுக்கே வாக்குகள் குறையும்; அதிலிருந்து விஜய்க்குப் பிரியும். அதாவது தவெக தொகுதிக்கு 1500 முதல் 5000 வரை பெறும். செங்கோட்டையன் கொஞ்சம் அதிகமாகவும், விஜய் இன்னும் அதிகமாகவும் பெறுவார்கள்.
@ நான் கருத்துக்கணிப்பு எடுக்கவில்லை; அது ஒரு மோசடி.
தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்குபவன், உணர்ச்சிவசப்படாமல் பாரபட்சமின்றிச் சிந்திப்பவன் என்கிற முறையில் என் கருத்தைச் சொல்கிறேன். ஆகவே, இது நடக்கவே வாய்ப்பு அதிகம்.
— டி.வி.சோமு








Comments are closed, but trackbacks and pingbacks are open.