பாபர் மசூதியும் அயோத்தி ராமர் கோயிலும் அரசியலாக்கப்பட்ட வரலாறு (பாகம் – 1)

0

பாபர் மசூதியும் அயோத்தி ராமர் கோயிலும் அரசியலாக்கப்பட்ட வரலாறு (பாகம் – 1)

இராமர் கோயில் என்பது பாஜகவின் அரசியல் திட்டம். 1949 டிசம்பர் 23- அன்று நள்ளிரவில் இராமர், இலட்சுமணர், சீதை சிலைகளைத் திருட்டுத்தனமாகப் பாபர் மசூதிக்குள் வைத்ததன் மூலம் பிரச்சினை தொடங்கியது. புகைந்து கொண்டிருந்தது இராமர் கோயில் பிரச்சினை, 1989இல் ராம ராஜ்ஜியம் மற்றும் ராமருக்குக் கோயில் என்று அரசியல் திட்டமாக முன்வைக்கப்பட்டு, பிரச்சினை மேலும் சூடு பிடித்தது. இராமபக்தி பெரிய அளவுக்கு ஊட்டப்பட்டு, அது இஸ்லாமியருக்கு எதிரான வெறியாக மாற்றப்பட்டது. 1992 இல் பாபர் மசூதி உடைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நாடகங்கள் நடத்தப்பட்டு, இப்போது 2024 – இல் இராமர் கோயில் கட்டப்பட்டு விட்டது.

2 dhanalakshmi joseph

இராமருக்குக் கோயில் கூடாது என்றோ, அதுவும் ஒரு மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டக்கூடாது என்றோ சொல்லுவதற்கு எதிர்க்கட்சிகளுக்குத் திராணி இல்லை. இராமர் கோயில் குடமுழுக்கு அறிவிக்கப்பட்டபோது, “இராமர் கோயில் கட்டுமானம் முழுமையற்றதாக உள்ளது; ஆகவே இப்போது குடமுழுக்கு கூடாது” என்று தான் எதிர்க்கட்சிகள் கூறின. இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் ராமராஜ்ஜியம், ராமர் கோயில் என்பது உடன்பாடுதான்.

அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு அத்தனையையும் விடப் பெரும்புளுகு இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்பது. அயோத்தியில் இராமர் பிறந்தார் என்றும், அவரே இந்தியாவின் அடையாளம் என்றும் இந்து தேசியவாதிகள் கதை பரப்பி நிலைநிறுத்த முயன்று வருகிறார்கள். இராமர் கதை என்பது நகைப்புக்குரியது என்பது ஓரளவு பகுத்தறிவுள்ள அல்லது அறிவியல் சிந்தனை உள்ள அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

- Advertisement -

பாபர் மசூதி
பாபர் மசூதி

ஏ.கே. மஜும்தார், ஜவஹர்லால் நேரு போன்ற வர்கள் இராமர் என்று ஒருவர் இருந்ததற்கே சான்று இல்லை என்று கூறுகிறார்கள். வால்மீகி ராமாயணம் மட்டுமே இராமன் பற்றி பேசியது; வேறு சான்றுகள் கிடையாது. இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. திரேதா யுகம் என்பது12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். அதன் பிறகு துவாபர யுகம்; அது 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். இப்போது நடப்பது கலியுகம்; இது 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும். இராமர் திரேதா யுகத்தில் அயோத்தியில் பிறந்தார் என்று இராமாயணம் கூறுகிறது. அவர் பிறந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும், அது இடிக்கப்பட்ட இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் மதவெறி பரப்பி, 1992 டிசம்பர் 6 – அன்று பாபர் மசூதியைத் திட்டமிட்டபடியே இடித்து நொறுக்கினார்கள்.

4 bismi svs

அங்கே அகழ்வாய்வு நாடகம் நடத்தப்பட்டு, பாபர் மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழே தான் இராமர் பிறந்தார் என்று ஒரு உச்ச நீதி மன்றத் தீர்ப்பையும் வாங்கினார்கள். நீதிமன்றமோ மசூதியை இடித்தவர்களுக்கே அந்த இடத்தை உரிமையாக்கியது, இப்போது இராமருக்குக் கோயிலும் கட்டி 22.01.2024 அன்று குடமுழுக்கும் நடத்தப்பட்டு விட்டது. இதுவரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால்,பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் உண்மை. அந்த இடத்தில் அடுத்தடுத்து, இரண்டு பழைய மசூதிகள் கட்டப்பட்டு இருந்ததற்கான அடையாளங்களும், புத்தச் சமயம் முன்பு தழைத்திருந்த பகுதி என்பதால், சில புத்தச் சமயத் தடயங்களும் கிடைத் துள்ள நிலையில், இந்துக் கோயில் அங்கு இருந்த தில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

ராமர் கோயில்
ராமர் கோயில்

கோயில் அங்கு இருந்த தில்லை என்பது குறித்து ஏராளமான தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர். இக்கேள்விக்கு விடை காண ஏராளமான அறிக்கைகளையும் பல்வேறு வரலாற்றாளர்களின் கருத்துகளையும் ஊன்றிப் படிக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்குக் கோயில் இருந்தது என்று கூறுபவர்களுக்கு எதுவும் தேவைப்படவில்லை. கிடைத்த தடயங்களை ஒழுங்காகப் பதிவு செய்யாத தொல்லியல் துறையின் குறைபாடுள்ள அறிக்கையும், இராமர் பற்றிய நம்பிக்கையும் , உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகள் மிக்க தீர்ப்புமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய கோளாறான தீர்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், இந்துத்துவ ஆதரவுத் தொல்லிய லாளர்களைக் களமிறக்கி, இடிக்கப்பட்ட மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்று அறிக்கைக்கு மேல் அறிக்கை விடச் செய்தன இந்துத்துவ அமைப்புகள் . அப்படிப் பொய்யான செய்திகளைப் பரப்புவதில் தொல்லி யலாளர்களைப் பயன்படுத்துகின்ற போக்கு அதிகரித்துள்ளது.

அயோத்தி எப்போது தோன்றியது?

தொல்லியல் அறிக்கையின்படி கிமு 700ல் தான் முதன்முதலாக அங்கே மக்கள் குடியிருப்புகளுக்கான அடையாளங்கள் தெரிகின்றன. சரயு ஆற்றில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் அயோத்தி இருந்ததாக இராமாயணம் கூறுகிறது. ஆனால் அயோத்தி சரயு ஆற்றங்கரையிலேயே இப்போது இருக்கிறது. இராமாயணம் கூறுகிறபடி, சரயு ஆறு கங்கையில் சென்று சேர வேண்டும். ஆனால் இங்கே வேறு ஆற்றில் சேருகிறது. ஆய்வு செய்தால் நேபாளத்தில் ஒரு அயோத்தி இருக்கிறது. அது ஒரு நதியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதுதான் இராமர் உண்மையில் பிறந்திருந்தால் அங்குத்தான் பிறந்திருக்க முடியும் என்று ஷேர்சிங் என்ற ஆய்வாளர் தம் கருத்தை முன் வைக்கிறார்.

-பேராசிரியர் த.செயராமன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.