ஒரு பெண் சாதிப்பதை ஓராயிரம் கண்கள் கவனிக்கின்றன – செயின்ட் ஜோசப் கல்லூரியில் தோழர் பாலபாரதி !

0

ஒரு பெண் சாதிப்பதை ஓராயிரம் கண்கள் கவனிக்கின்றன செயின்ட் ஜோசப் கல்லூரி மகளிர் தின விழாவில் தோழர் பாலபாரதி பேச்சு – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவியர் நல மேம்பாட்டு குழு சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் அருள்முனைவர் ஜான் பீட்டர் அருளானந்தம், இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன் வாழ்த்துரை ஆற்றினர். பணிமுறை இரண்டின் துணை முதல்வர் பாக்கிய செல்வரதி, முனைவர் மகேஸ்வரி, முனைவர் கிளமென்ஸ் ஜெனிபர் மாணவர் பேரவையினர் முன்னிலை வகித்தனர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவியர் நல மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மேகி டயானா வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜெயஸ்ரீ நாய்கென் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத்தலைவருமான தோழர் க.பாலபாரதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாணவர்களும் மாணவியரும் நிறைந்திருக்கிற இந்த அரங்கில் இரு பாலருக்கும் என்னுடைய பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதைவிட இந்தக் கல்லூரி வளாகத்தில் சாதனையாளர் பெண் விருது பெற்றதை என் வாழ்நாளில் மகிழ்வான தினங்களில் ஒன்றாக எண்ணி இருக்கிறேன். தூய வளனார் கல்லூரி என்பது திருச்சிக்கு மட்டும் அடையாளம் அல்ல இது தமிழகத்தின் அடையாளம் இந்த கல்லூரியில் கல்வி கற்கிற மாணவ மாணவிகள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன்.

செயின்ட் ஜோசப் கல்லூரி மகளிர் தின விழாவில் தோழர் பாலபாரதி
செயின்ட் ஜோசப் கல்லூரி மகளிர் தின விழாவில் தோழர் பாலபாரதி

மலராக இருக்கலாம் பறவையாக இருக்கலாம் எளிய எளிய படைப்புகளாக இருக்கலாம். இயற்கையின் அத்தனை அழகையும் திறமையும் பிரம்மாண்டமாக ரசிக்கிற பார்வை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. ஒரு ஆணை பெண்கள் ரசிப்பதும், ஒரு பெண்ணை ஆண் ரசிப்பதும் உயிரின உள்ளுணர்வாக இருக்கிறபட்சத்தில் அது இயல்பானதாக இருக்கிறது. அதே வேளையில் அந்த ரசனையே ஈர்ப்பாக மாறி அந்த ரசனை தனக்கு மட்டுமானது என்கிற புரிதலற்ற போக்காக மாறுகிறபோது பிரச்சினையாக மாறிவிடுகிறது. அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட வேண்டும். இங்கு இருக்கக்கூடிய மாணவர்களில் பலர் சாதனையாளர்கள். மாணவிகளின் பலர் சாதனையாளர்கள்.

தோழர் பாலபாரதி
தோழர் பாலபாரதி

ஆனால் மாணவர்களை விட மாணவிகளின் சாதனைகளை நாம் பாராட்டுவதற்குக் காரணம் ஆண்களின் சாதனை சுதந்திர தேசத்தில் கிடைப்பவை. பெண்களுடைய சாதனை என்பது பலரின் கேள்விக்கும் கேலிகளுக்கும் உள்ளாகி வருவது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கு ஒரு பெண் சாதிப்பதை ஓராயிரம் கண்கள் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. ஆணும் பெண்ணும் இணைந்த ஒரு சமுதாயம் படைப்பதற்காகவே இது போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன ஆணும் பெண்ணுமாக இணைந்து ஒரு விடுதலைப்பூர்வமான சமூகத்தைக் கட்டமைப்பதே இந்த விழா ஏற்பாட்டாளர்களின் நோக்கம் என்பதை உணருகிறேன். அதற்கு இந்த விழா வழிவகை செய்யட்டும் என்கிற கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் முனைவர் கீதா சிவராமன் நன்றி கூறினார். முனைவர் பிரிம்ரோஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பணிமுறை ஒன்று மற்றும் இரண்டு மாணவ மாணவியர், பேராசிரியர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

– ஆதன்

Leave A Reply

Your email address will not be published.