தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை  மோடியைக் கரை சேர்க்குமா ?

0

தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை  மோடியைக் கரை சேர்க்குமா? 1999 – 2004ஆம் ஆண்டு வரை பாஜக தலைவர் வாஜ்பாய் திமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி அரசை வெற்றிகரமாக நடத்தி வந்தது. அந்த ஆட்சியில் குறைந்தபட்சச் செயல்திட்டம் வகுக்கப்பட்டு, ஆட்சி நடைபெற்றதால் பாஜக ஆர்எஸ்எஸ் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்து வந்தது. இதனையடுத்து 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தோடு பாஜக போட்டியிட்டது. அப்போதைய கருத்துக்கணிப்புகள் பாஜக தனித்தே 300 இடங்களைப் பெறும் என்று கூறின. அந்தத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.

மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்

https://businesstrichy.com/the-royal-mahal/

காங்கிரஸ் கட்சி மன்மோகன்சிங் தலைமையில் கூட்டணி ஆட்சியை நடத்தியது. தொடர்ந்து 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில்தான் 10 ஆண்டு காலக் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்து மோடி ஒன்றியத் தலைமை அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டுப் பாஜக 2014ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டு, பாஜக வெற்றிபெற்றுக் கூட்டணி ஆட்சியை அமைத்தது.

மோடி தலைமை அமைச்சரைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து காங்கிரஸ் கட்சியையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை மோடி தலைமையிலான பாஜக அகற்றியது. அகற்றமுடியாத நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, பாஜக ஆட்சி மாநிலங்களில் ஏற்பட வழிவகை செய்யப்பட்டது. இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே தன் இலட்சியம் என்று மோடி முழங்கினார். தென்மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக இருந்த கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துத் தென்மாநிலத்தில் கால் பதித்தது என்ற பெருமையைப் பெற்றது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்திராகாந்தி - மோடி
இந்திராகாந்தி – மோடி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்பதற்குரிய இடங்களைப் பெறாமல் 48 இடங்களை மட்டுமே பெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், இராஜஸ்தானில் ஆட்சியைப் பாஜக கைப்பற்றியது. என்றாலும் காங்கிரஸ் கட்சியை மாநிலத்திலும் ஒன்றியத்திலும் முழுமையாக ஒழிக்கப்படவேண்டும் என்ற கனவு முழுமையாக நிறைவேறவில்லை என்ற நிலையே தொடர்ந்து வந்தது. இந்திராகாந்தி 75இல் நடைமுறைப்படுத்திய நெருக்கடிகால நிலையை மோடி ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்தி, காங்கிரஸ் கட்சியையும் இந்திராகாந்தியையும் கடுமையாகச் சாடுவார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற்ற பரப்புரையில் மோடி பேசும்போது,“இந்தத் தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களைப் பெறும். கூட்டணிகள் 30 இடங்களில் வெற்றிபெறும். மொத்தம் கூட்டணியோடு இணைந்து 400 இடங்களில் வெற்றிபெறுவோம்” என்று சூளுரைத்தார். மேலும்,“தற்போதைய நாடாளுமன்றத்தில் 48 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாகக்கூட ஆகமுடியாத காங்கிரஸ் பாதி (24) இடங்களில் வெற்றிபெறுவதே கடினம். காங்கிரஸ் கட்சியின் கணக்கு இந்தத் தேர்தலோடு முடியும்” என்று காங்கிரஸ் கட்சியை எள்ளிநகையாடிப் பேசினார்.

பரப்புரையில் மோடி
பரப்புரையில் மோடி

தேர்தல் முடிவு மோடியின் எண்ணத்திலும் நினைப்பிலும் மண்ணை அள்ளிப்போட்டது. பாஜக 240 இடங்களிலும் கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றிபெற்றன. அறுதிப் பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்கவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டது. காங்கிரஸ் விஸ்வரூபம் பெற்றுத் தனியே 99 இடங்களிலும் கூட்டணிகள் மொத்தம் என 234 இடங்களில் வெற்றிபெற்றன. காங்கிரஸ் கட்சியைக் குறைகூறியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற மோடியின் நினைப்புக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

18ஆவது மக்களவையின் அவைத்தலைவரைக் கருத்தொற்றுமையோடு தேர்ந்தெடுக்கக் காங்கிரஸ் மக்களவைத் துணைத் தலைவர் பதவியைக் கேட்டது. மோடி சார்பில் மறுக்கப்பட்டதன் விளைவாக அவைத்தலைவருக்குத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் சென்ற மக்களவையின் தலைவராக இருந்த ஓம்பிர்லா மீண்டும் தேர்வுசெய்யப்பட்டார். நாடாளுமன்றத்தை மோடியின் சொல்படி நடத்துவதில் கைதேர்ந்தவர் ஓம்பிர்லா என்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அவைத் தலைவராக அமர்ந்த ஓம்பிர்லா தன்னை வாழ்த்திபேசியவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவை நடவடிக்கையில் இல்லாத ஒன்றை வாசித்தார்.

ஓம்பிர்லா
ஓம்பிர்லா

அது என்னவெனில், “இன்று (26.06.24) இதே நாளில்தான் இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி நெருக்கடி கால நிலையை அறிவித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்தது. அதன் நினைவாக மக்களவை உறுப்பினர்கள் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நிற்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே எதிர்க்கட்சித் தரப்பில் கடுமையான கண்டனம் எழுந்தது. அவையில் கூச்சல் எழுந்தது. அவையை நடத்தமுடியாமல் ஓம்பிர்லா அவையை ஒத்திவைத்துவிட்டு அவையைவிட்டு வெளியேறினார். இது தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் மோடியின் அழுத்தத்தின் காரணமாகவே ஓம்பிர்லா இப்படி நடந்துகொண்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மிசா தி.சாக்ரடீஸ்
மிசா தி.சாக்ரடீஸ்

மோடி அரசியல் களத்திலும், மக்களவையிலும் நெருக்கடி கொடுப்பதன் மூலம் நெருக்கடிகால நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டது திமுகதான். இப்படி நெருக்கடி கொடுப்பதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியை உடைக்க மோடி முயன்று வருகின்றார் என்பதே உண்மை. நெருக்கடிகால நிலை அறிமுகப்படுத்தப்பட்டுத் தற்போது 50 தொடங்கும் நிலையில், மோடியின் காங்கிரஸ் எதிர்ப்பு அவரை இனியும் கரைச் சேர்க்காது என்று மிசா கைதியாகத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பொன்மலை சாக்ரடீஸ் அங்குசம் இதழிடம் தெரிவித்தார். மேலும் அவர் உரையாடும்போது, “இந்திராகாந்தி நெருக்கடி கால நிலையை அறிவித்து ஜனநாயகப் படுகொலையைச் செய்தார் என்பது உண்மைதான்.

திமுக பாதிக்கப்பட்டது, முக ஸ்டாலின், வீரமணி, ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் சிறையில் தாக்கப்பட்டார்கள் என்பதும் உண்மைதான். பாதிப்புக்கு உள்ளான திமுக 1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்திய அளவில் காங்கிரஸ் 400 இடங்களில் வெற்றிபெற்றது. தமிழ்நாட்டில் திமுக போட்டியிட்ட 16 இடங்களிலும் வெற்றிபெற்றது. தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான தேர்தல் பரப்புரையில் இந்திராகாந்தி,“நெருக்கடிகால நிலையை அறிவித்தமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பொதுவெளியில் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டார்.

பிரதமர் - மோடி
பிரதமர் – மோடி

மக்கள் மன்னித்து ஆட்சியை வழங்கினார் என்பது வரலாறு. மோடிக்கு உண்மையில் நெருக்கடி கால நிலையின் மீது எதிர்ப்புணர்வு இருக்குமானால், இந்தியா முழுவதும் சிறையில் இருந்த மிசா கைதிகளுக்கும், இறந்துபோயிருந்தால் அவர்களின் குடும்பங்களுக்குச் சிறப்பு உதவியாக ஒரு கோடி வழங்கவேண்டும். அதைவிடுத்துக் காங்கிரஸ் எதிர்ப்புக்கு வாயால் வடை சுடும் செயலை இனியும் மோடி செய்து கொண்டிருக்கக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.

மோடியின் காங்கிரஸ் எதிர்ப்புணர்வு இனியும் அவரைக் கரை சேர்க்க உதவாது என்பதே சமகாலச் செய்தியாக உள்ளது. மோடி காங்கிரஸ் எதிர்ப்புணர்வைக் கைவிட்டு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னிறுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மோடியின் எண்ணம் மாறுமா? காத்திருப்போம்.

–ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.