சட்டசபையின் நடுவே இடைவெளி எப்படி வந்தது தெரியுமா?
ஆளும் கட்சி வரிசைக்கும் எதிர்க்கட்சி வரிசைக்கும் இடையே இப்போ இருப்பது போல இவ்வளவு பெரிய இடைவெளியிருக்காது. சுமார் மூனு நாலு அடி அகலத்தில் நீளமான டேபிள் இருக்கும் .அந்த டேபிள்தான் எதிர்க்கட்சிக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே இருக்கும். வருஷத்தின் முதல் கூட்டத்தொடரின்போது ஆளுநர் உரையாற்றும் அன்று மட்டும் அந்த டேபிளை எடுத்திடுவாங்க. பிறகு வழக்கம்போல அந்த டேபிள் இருக்கும்.
இவ்ளோ குறுகிய இடைவெளியில் அமர்ந்து இருந்ததால்தான் 1989/90 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கருணாநிதி வாசித்துக் கொண்டிருந்த பட்ஜெட் உரையை ஜெயலலிதா கிழக்க, பதிலுக்கு திமுகவினர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்க என்று சட்டசபையில் கலவரம் நடந்தது.
1998 காலகட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற குழுவின் தலைவராக இருந்தவர் எங்க எம்.எல்.ஏ தாமரைக்கனி. சட்டமன்ற குழு தலைவர்களுக்கு எப்போதும் முன் வரிசையில் இடம் ஒதுக்குவார்கள்.
அப்படி அதிமுக சார்பாக முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த தாமரைக்கனிக்கு எதிரே ஆளும்கட்சி பக்கம் உட்கார்ந்து இருந்தது திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம். ஏதோ விவாதம் சர்ச்சையாகி தாமரைக்கனி வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கில் தன்னோட மோதிர கையால் ஓங்கி ஒரு குத்துவிட வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கு கிழிந்து ரத்தம் பொலபொலவென கொட்டியது. வீரபாண்டி ஆறுமுகத்தை தாக்கியதற்காக தாமரைக்கனி சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பே பண்ரூட்டி ராமச்சந்திரன் முதுகிலும் தாமரைக்கனி தாக்கிய வரலாறு உண்டு.
மிகவும் அருகருகே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இருப்பதால்தானே இப்படி அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என்று அதற்கு பிறகுதான் நடுவில் இடைவெளி இருக்கும்படி சட்டசபை இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
— பொ. காத்தவராயன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.