வவ்வால்களை வேட்டையாடி, சில்லி சிக்கன் என விற்பனை செய்ததாக இருவர் கைது!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனத்திற்கு உட்பட்ட தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்பதாக டேனிஷ்பேட்டை வன அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனக் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்திற்குள் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது, உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் வேட்டையில் ஈடுபட்ட இரண்டு பேரை சுற்றி வளர்த்து கைது செய்திருக்கின்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேட்டையில் ஈடுபட்டது டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த கமல் மற்றும் செல்வம் என்பதும், இவர்கள் அடிக்கடி வனப்பகுதிக்குள் வந்து பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, சுத்தம் செய்து சமைத்து, மாலை நேரச் சிற்றுண்டியாக சில்லி சிக்கன் எனப் பொதுமக்களுக்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படித்தி சிறையில் அடைத்தனர்.
இதில் குறிப்பாக, இவர்கள் வேட்டையாடி வந்த பழந்தின்னி வவ்வால்கள் மிகவும் தனித்துவமானவை. இவை பழங்களையும், பூக்களிலிருந்து தேனையும், சிறிய பூச்சிகளை மட்டுமே உணவாக அருந்தக்கூடியவை. இந்த வகை வவ்வால்கள் மனிதர்கள் உணவாகச் சாப்பிடக் கூடாத பாலூட்டி உயிர்களில் ஒன்றாகும். ஏற்கனவே, நிபா வைரஸ், கொரோனா வைரஸ் உள்ளிட்ட கொடிய நோய்கள் வவ்வால்கள் மூலம் பரவியதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வவ்வால்களைப் பிடித்து சில்லி சிக்கன் எனக் கூறி பொதுமக்களுக்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
— மு. குபேரன்.