இந்த வார பிளாஸ்ட் 8.10.2026 – 14.10.2026

துணையால் துணைக்கு வந்த சிக்கல் !

மலைக்கோட்டை மாவட்டத்திலிருந்து எம்.எல்.ஏ.வான அந்த துடிப்பானவருக்கு எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தது, நடுநாயகமான துணைப்பதவி. அப்போது ஆரம்பித்த ஆட்டம், ரெய்டு, விசிட்னு இப்போது வரையில் அலப்பறை ஓயவில்லை என்கிறார்கள். சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லையாம். வீடு மாறியதும்; வீட்டின் முன் வைத்த பேனரும் சர்ச்சையானது. மன மனக்கசப்பில் மனைவியை பிரிந்துவிட்டதாக, பிரமாண பத்திரத்திலேயே பதிவு செய்தவர்; அதையே முறையாக செட்டில்மெண்ட் செய்யாமல், தன்னிடம் பஞ்சாயத்து ஒன்றுக்காக வந்த பெண் ஒருவரையே காளகஸ்தியில் வைத்து கரம் பற்றியதுதான் பற்றி எரிகிறதாம். இந்த வீட்டு விவகாரம் பனையூர் வரையில் பஞ்சாயத்தாகிவிட்டது என்கிறார்கள்.

அசராத வசூல் வேட்டை பெண் இன்ஸ் !

மலைக்கோட்டை மாவட்டத்தின் காவிரிக்கரையோரம் அமைந்த நான்கு எழுத்து ஊரில், மூன்றெழுத்து பெயரைக்கொண்ட பெண் இன்ஸ்பெக்டரின் வசூல் வேட்டையைக் கண்டு லோக்கல் காக்கிகளே மெர்சலாகி கிடக்கிறார்களாம். புகார்னு வந்தாலே, அத சிறப்பா முடிச்சு கொடுக்க விவகாரத்துக்கு தகுந்தபடி பேரம் தானாம். குட்கா வழக்கில் சிக்கிய நபரிடம் ஒரு இலட்சம் கைமாறியதாம். பாவம் வயதான பாட்டி கழுத்தில் போட்டிருந்த நகையை அறுத்துக்கொண்டு போன வழக்கில், ரெக்கவரி காட்டியதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த பாட்டியிடமே கறந்துவிட்டாராம். குட்கா, சந்துக்கடை, லாட்டரி-னு செம வேட்டையாம். ரேஷன் அரிசி விவகாரத்தில் சிக்கி அது பெரும் விவகாரமாகி, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் வந்த இடத்திலும் வேட்டையை விடாது தொடர்கிறாராம். இதுபோன்ற காக்கிகளுக்கு டிரான்ஸ்பர் எல்லாம் ஒரு தண்டனையா?

கசாமுசா கருப்பு !

கசாமுசா புகாரில் சிக்கிய தெய்வீகமான தேசியக் கட்சியின் கருப்பு ஆசாமிக்கு, இதுவரை ஆமாம்சாமி போட்டவர்களெல்லாம் சிக்கலில் சிக்கித்தவிக்கிறார்களாம். இரண்டு வருடத்துக்கு மேலாக, சொந்தக் கட்சியிலேயே பெரும் புகைச்சல் எழுந்த நிலையிலும், தலைமைக்கு வந்த காகிதத்தையெல்லாம் சீட்டுக்கு கீழே பத்திரமாக வைத்து சின்சியராக பணியாற்றிய தெய்வீகக் கட்சியின் மேலிட பொறுப்பாளரை தூக்கியடித்திருக்கிறதாம் கட்சித் தலைமை. அந்த இடத்துக்கு புதியதாக ஒருவர் வந்து சேர்ந்திருக்கிறாராம். முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், எந்நேரமும் கைதாகலாம் கருப்பு என்கிறார்கள்.

கிளம்பக் காத்திருக்கும் பூதங்கள் !

தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய தொழிலதிபருக்கு எதிரான பாலியல் வழக்கின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அடுத்தடுத்து காக்கி கருப்பு ஆடுகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில், இதுபோல விசாரணைக்கு வராமல் பல ஆண்டுகளாக புகார் நிலையிலேயே காத்துக் கிடக்கும் விவகாரங்கள் ஏகப்பட்ட இருக்கின்றன என்கிறார்கள். சமீபத்தில், ஆதிந துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது, காக்கி தரப்பு. போலி ஆவணங்களை பயன்படுத்தி தொழிலதிபர் ஒருவரை நடுத்தெருவுக்கு தள்ளிய, பெயரில் கோடி-யை கொண்டவரை தலைவராகக் கொண்டு இயங்கும் வங்கிக்கு எதிரான வழக்கு விவகாரத்திலும் போலீசாரின் அணுகுமுறையில் பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறார்கள். இதுபோல, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை தூசு தட்டினாலே ஏகப்பட்ட பூகம்பங்கள் கிளம்பும் என்கிறார்கள்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.