மனிதர்கள் வாழ தகுதியற்ற மாவட்டமாக அறிவித்து விடுங்கள் !
நெல்லையில் தொடரும் சாதி ஆணவக் கொலைகள் சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டனம்!
நெல்லை தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் சென்னை நகரத்தில் TCS நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்துவந்த கவின் (25) என்ற இளைஞரும் பாளையங்கோட்டை கேடிசி பகுதி மறவர் சாதியை சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினி என்ற பெண்ணும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். நண்பர்களாக பழகி வந்தவர்கள். இடையில் கல்லூரி வேலை என்று இடைவெளி ஏற்பட்டு பின் அண்மை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் பல முறை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் 27.8.25 அன்று தன் அக்காவை கீழ் சாதிப் பையன் காதலிப்பதா என்ற சாதிய வன்மம் வைத்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கவினை தனியாக பேச அழைத்துள்ளான். எதார்த்தமாக பேச வந்த கவினை தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மிக கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளான். எவ்வளவு வனமம், ஆணவமும் ஆதிக்க திமிரும் இருந்திருந்தால் இத்தகைய கொலையை துணிந்து செய்திருக்க முடியும்? இத்தகைய மறவர் சாதி ஆதிக்க வன்மத்தோடு நடத்தப்பட்ட இக் கொடூரக் கொலை வெறிச்செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இரண்டு குடும்பமும் வசதிகள் உள்ளவை. இருந்தும் இங்கு சாதி ஆணவம் தலைக்கேறிய பைத்தியங்களாக மூடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கொலை செய்ய துணியும் பல பெண்ணின்/ஆணின் பெற்றோர்கள் உத்தா உறவினர்கள்.. இந்த மன நிலையை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து விவாதங்கள் அவசியமானவை.
தினம் தினம் ஆணவக் கொலை செய்யும் மன நோயாளிகள் தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் சாதி ஆதிக்கத் திமிரோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகு ஆதிக்க சிந்தனையை மாற்றுவது என்பது தமிழ் சமூகத்தின் முன் உள்ள சவால்கள். ஒவ்வொருவரின் கடமையல்லவா?
நெல்லையில் தொடர்ந்து சாதி ஆணவக் கொலைகள் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களை வன்கொடுமை மாவட்டங்களாக மனிதர்கள் வாழத் தகுதியற்ற மாவட்டமாக அறிவித்திட வேண்டும்.
இத்தகைய வன்கொடுமைகளை ஆணவக் கொலைகளை குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
2018 இல் உச்ச நீதிமன்றம் இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அளித்திருக்கிறது அதனை உடனடியாக அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்.

கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட இந்த கொடூரத்தில் கொலைகாரன் சுர்ஜித் மட்டும் குற்றவாளி அல்ல, சுபாஷினியின் தாய் தந்தையரும் இதற்கு உடந்தையானவர்கள் அவர்களும் குற்றவாளிகள். சுபாஷினியின் பெற்றோர்களை காவல்துறை, தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டும்.
பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இதுவரை 600க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்து இருக்கிறது. தமிழ்நாடு எங்கும் சாதி மீறி திருமணம் செய்து கொள்ளக் கூடிய மதம் மாறி திருமணம் செய்து கொள்ளக்கூடிய இணையர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வதன் அடிப்படையில் மாவட்டந்தோறும் பாதுகாப்பு இல்லங்களை அவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணைய அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் .
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் முன்விரோத கொலைகள் ரவுடிகள் அராஜகம் போன்றவற்றை தடுக்க வேண்டுமானால் அந்த மாவட்டங்களில் பரவலாக தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

வன்முறைக்குப் பின்புலமாக செயல்படும் சாதி மதவாத கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே இது போன்ற வன்கொடுமைகளை தடுத்திட முடியும்.
மேலும் அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் ஏன் சாதி எதிர்ப்பு கருத்தியல் பின்னோக்கி சென்று சாதிய ஆதிக்க மனோபாவம் மேலோங்கி உள்ளது என்பது குறித்து பேசுபொருளாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்த சாதி அதிகமாக வன்கொடுமைகளில், ஆணவக்கொலை குற்றத்தில் ஈடுபடுகிறது என்பது விவாதிக்க வேண்டும். அவற்றைக் களைந்திட அந்தந்த சாதியை சேர்ந்த முற்போக்காளர்கள் ஜனநாயக சக்திகள் மாற்று விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்.
— வ.ரமணி , சாதி ஒழிப்பு முன்னணி