அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதல்வர் விஜய் – (ஏ) மாற்றத்திற்கான அரசியல் பொதுமக்கள் நம்பிக்கை குலைந்தது

திருச்சியில் அடகு நகையை விற்க

நடந்து முடிந்த தேர்தல் பரப்புரைகளில் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்,“தீய சக்தி திமுக வேண்டாம் – ஊழல் சக்தி அதிமுகவும் வேண்டாம். தூய சக்தியான தவெகவை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழல் இல்லாத, மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருவேன்” என்று சூளுரைத்தார். கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான தவெக 35% வாக்குகளை முதல் தேர்தலிலே பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அறுதிப்பெரும்பான்மைக்கான 118 இடங்களைப் பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது.

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்த மே 4ஆம் நாள் மாலை தேர்வு முடிவுகள் “தொங்கு சட்டமன்றத்தை” நோக்கிச் செல்வதை அறிந்த காங்கிரஸ் கட்சி, விஜய் ஆட்சிக்கு ஆதரவு கோரினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தருவார்கள் என்று விஜய் ஆதரவு கேட்காமலே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமைக்கு விஜய் மின்னஞ்சல் மூலம் ஆதரவு கேட்டார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “ஆதரவு தருவதை மாநிலக் கமிட்டியே முடிவு செய்து கொள்ளலாம்” என்று அறிவித்தவுடன், மே 5ஆம் நாள் காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடி ஆதரவு தெரிவித்து, அதற்கான கடிதத்தை மாலையில் பனையூர் சென்று விஜய்-யிடம் கொடுத்து ஆதரவு தருவதில் முந்திக் கொண்டது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

இதனைத் தொடர்ந்து விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல், இழுபறி நடைபெற்றது. திமுக கூட்டணியில் இணைந்திருந்த சிபிஎம், சிபிஐ, விசிக, இயூமுலீக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தன. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி+சி.வி.சண்முகம் தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தனிக்குழுவாக இயங்கித் தவெக அரசிற்கு ஆதரவு தருவதாகக் கூறினர். ஏப்ரல் 10ஆம் தமிழ்நாட்டின் முதல்வராகத் தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரோடு 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஒருவாரம் கழித்துத்தான்  பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்குத் துறைகள் அறிவிக்கப்பட்டது.

(ஏ) மாற்றத்திற்கான அரசியல் – 1

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்த மே 4ஆம் நாள் மாலை தொங்கு சட்டமன்றம் அமையப்போவதை அறிந்து அரசியல் கட்சிகள் நடவடிக்கைகள் வேகம் கொள்ளத் தொடங்கியது. அப்போது மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற திருமதி லீமாரோஸ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தவெக – அதிமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று குறிப்பிட்டார்.

பேச்சு வார்த்தையின்போது அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவெக – அதிமுக கூட்டணியில் முதல் 2 ஆண்டுகள் அதிமுகவுக்கு முதல்வர் பதவியில் நான்தான் இருப்பேன். விஜய் துணை முதல்வர். அடுத்த 3 ஆண்டுகளுக்கு விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியில் விஜய் முதல்வர், அதிமுக துணை முதல்வர் என்றவுடன் தவெக, அதிமுகவோடு கூட்டணி வேண்டாம் என்று ஓட்டம் பிடித்தது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடந்ததைத் தவெக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை. லீமாரோஸ்-இன் கூட்டணி அறிவிப்பை எதிர்க்கவும் இல்லை. திமுக கூட்டணியின் ஆதரவை விஜய் நாடியபோது, நாங்கள் மதச்சார்பற்ற அரசை அமைக்க உள்ளோம். மதச்சார்பற்ற திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவைக் கேட்டுள்ளோம். நாங்கள் ஒருபோதும் மதச்சார்புள்ள பாஜகவோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை நாங்கள் நாடவில்லை என்று உலக மகா பொய்யைத் தவெக தெரிவித்தது. மேலும் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராகத் திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயல்வதாகவும் கட்டுக்கதைகளைச் சமூக ஊடகத்தில் தவெக பரப்பியது.

(ஏ) மாற்றத்திற்கான அரசியல் – 2

பாஜக (மதச் சார்புள்ள) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்ற அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அவர்களிடம் குதிரை பேரம் நடத்தி, அவரிடம் அரசை ஆதரிப்பதற்கான கையெழுத்துடன் கூடிய கடிதத்தைத் தவெக வாங்கியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மே 6ஆம் நாள் நள்ளிரவில் ஆளுநர் மாளிகை சென்று தவெக நடத்தும் குதிரை பேரத்தை அம்பலப்படுத்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் உடன் இருந்தார். நள்ளிரவில் கிண்டி காவல் நிலையத்தில் டிடிவி தினகரன் ஆள் கடத்தல் நடைபெற்றுள்ளது என்று புகார் அளித்தார். உடனே தவெக சார்பில் சமூக வலைதளங்களில் அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் காரில் அமர்ந்து தவெக அரசு அமைவதற்கான ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போடும் வீடியோவை வெளியிட்டது. இதன் மூலம் நாங்கள் அமமுக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தது. இது குறித்துத் தவெக கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளமுடியவில்லை.

(ஏ) மாற்றத்திற்கான அரசியல் – 3

மே 10 ஆம் நாள் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆளுநர் தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராகப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவர் மேடையை விட்டுச் சென்றவுடன், பதவி ஏற்பு விழாவின்போது கடைபிடிக்கும் நெறிமுறைகளை முதல்வர் விஜய் காலில் போட்டு மிதித்து, வாக்களித்த நண்பா, நம்பீஸ், தொழில்நுட்பத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி கூறினார். தொடர்ந்து பேசும்போது,“கடந்த திமுக அரசு கஜானாவை வலித்து…. துடைத்து ஒன்றும் இல்லாமல் வைத்துவிட்டுச் சென்றுள்ளது. நான் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற எனக்குக் கால அவகாசத்தைக் கொடுங்கள். நிறைவேற்ற முயற்சி செய்வேன். நானும் மனிதன்தான். நான் ஒன்றும் தேவதூதன் இல்லை என்றும் அறிவித்தார். இதைக் கேட்ட பொதுமக்களின் நம்பிக்கைகள் நொறுங்கிப் போயின. ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே மகளிர் உதவித்தொகை ரூ.2500, வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.4,000, 60 வயதைத் தாண்டி ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.3000, 200 யூனிட் மின்சாரம் இலவசம், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் – என இந்தத் திட்டங்களுக்குக் கையொப்பமிடப்படும் என்று அறிவித்தது நினைவில்லாமல், தலைமை செயலகம் சென்றவுடன் 200 யூனிட் மின்சாரம் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்டது. சிங்கப்பெண் – காவல்துறை பாதுகாப்பு, போதை ஒழிப்புக்குக் காவல்துறையில் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றே கையொப்பமிடப்பட்டது. முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர்ச் செய்தியாளர்கள் சந்தித்துக் கருத்து கேட்டபோது, எந்தப் பதிலும் சொல்லாமல் காரில் ஏறிச் சென்றார். இதன் மூலம் பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்தி விட்டார் என்ற கருத்தும் நிலவியது.

(ஏ) மாற்றத்திற்கான அரசியல் – 4

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தன் கனவை நிறைவேற்றிக் கொண்ட முதல்வர் விஜய் தலைவர்களிடம் வாழ்த்துகளைப் பெறப் பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். பின்பு திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, காங்கிரஸ் கட்சி அலுவலகம் சென்று செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமா, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றதைச் சமூக ஊடகங்கள் “விஜய்-இன் அரசியல் நாகரிகம்” என்று கொண்டாடி மகிழ்ந்தது. அதிமுகவில் தனிக்குழுவாக இயங்கும் வேலுமணி+சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களைச் சண்முகம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றது என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் முன்னாள் முதல்வர் என்ற பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெறவில்லை. அன்று அவரின் பிறந்தநாளும்கூட.

பாமக தலைவர் அன்புமணியைச் சந்தித்த விஜய், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசைச் சந்திக்காததும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியில் இருந்த அதிமுகவின் ஒரு குழுவையும், அன்புமணியையும் சந்தித்ததின் மூலம் அரசியல் நாகரிக வாழ்த்துகளுக்கான சந்திப்பு போலியான பிம்பம் என்பதை வெளிப்படுத்தியது. இதற்கிடையில் முதல்வர் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக அவருடைய குடும்ப ஜோதிடர் ‘ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்’ நியமிக்கப்பட்டார். முறையான அறிவிப்பு இல்லாமல் தன்னிச்சையாக விஜய் தன்னுடைய ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கியது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. அதற்கு விஜய் அல்லது அவரின் கட்சியின் சார்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

(ஏ) மாற்றத்திற்கான அரசியல் – 5

மே 13ஆம் நாள் சட்டமன்றத்தில் “நம்பிக்கை வாக்கை” முதல்வர் விஜய் கோரினார். இதற்கு முன்பு பேரவைத் தலைவருக்குத் திமுக அளித்த கடிதத்தின் அடிப்படையில் உதயநிதி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராகப் பேரவைத் தலைவர் அறிவித்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடிதத்தைப் பேரவைத் தலைவரிடம் கொடுத்தார். வேலுமணி+சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற இன்னொரு குழுவும் தங்களை அதிமுக குழுத் தலைவராக அறிவிக்கக் கோரி கடிதம் கொடுத்தது. பேரவைத் தலைவர் ஜேடிசி பிரபாகர் விதிகளின்படி எடப்பாடி பழனிசாமியை அதிமுக குழுத் தலைவராக அறிவிக்காமல், இன்னொரு குழுவும் தங்களை அறிவிக்கக் கோரி கடிதம் கொடுத்துள்ளது என்று முடிவெடுக்காமல் காலம் கடத்தினார்.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது பழனிசாமி தலைமையிலான 22 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். வேலுமணி தலைமையிலான அதிமுக குழுவின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்கெடுப்பின் இறுதியில் 144 பேர் ஆதரவுடன் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறியது என்று பேரவைத் தலைவர் அறிவித்தார். பாஜகவோடு இணைந்துள்ள கட்சிகளின் ஆதரவை ஏற்கமாட்டோம் என்று அறிவித்த முதல்வர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் இன்னொரு குழுவின் ஆதரவை நாடியது ஏன்? ஒருவேளை திமுக கூட்டணியிலிருந்து தன்னை ஆதரிப்பவர்கள் நாளை நமக்கு மத்திய அரசை எதிர்க்கவேண்டும் என்று நெருக்கடி கொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கிய ஆணை இரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பும் வெளியானது. விஜய்-இன் மோசடி அரசியல் அம்பலமானது.

(ஏ) மாற்றத்திற்கான அரசியல் – 6

அதிமுகவின் பழனிசாமி குழுவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்டளையை மீறி அரசுக்கு ஆதரவு அளித்த 25 பேர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பழனிசாமி பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்துள்ளார். வேலுமணி+சண்முகம் தலைமையிலான இன்னொரு குழுவின் கொறடா டாக்டர் விஜயப் பாஸ்கர், அரசுக்கு எதிராக வாக்களித்த பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளது. பேரவைத் தலைவர் இரு கடிதங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர், “நடவடிக்கை எடுக்கக் காலக் கெடு எதுவும் இல்லை என்பதால், நான் எப்போது முடிவு எடுக்கவேண்டுமோ அப்போது எடுப்பேன்” என்று பேரவை விதிகளை மீறி முதல்வர் விஜய் ஆசியோடு சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசுக்கு ஆதரவு அளித்த 25 அதிமுக இன்னொரு குழுவினருக்கு 8 அமைச்சர் பதவி தருவதாகப் பேரம் பேசப்பட்டது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி ஜோலார்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

(ஏ) மாற்றத்திற்கான அரசியல் – 7

திமுக கஜானாவைக் காலி செய்துவிட்டது. திட்டங்களை நிறைவேற்ற நிதி இல்லை என்றும் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்த விஜய் மே 14ஆம் நாள் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000/- வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மே 15ஆம் நாள் மகளிர் உரிமை தொகை 1கோடியே 31இலட்சம் பெண்களுக்கு விஜய் அறிவித்த ரூ.2500க்கு பதில் ரூ.1000/- வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி வழங்குவதற்கான அறிவிப்பும் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1,300/-கோடி அரசுக்குச் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜனா காலி என்றால் இதற்கான நிதி எங்கிருந்து வந்தது. கஜனாவில் இல்லை என்றால் முதல்வர் விஜய்-இன் வீட்டிலிருந்து சொந்த நிதியிலிருந்து கொடுத்தாரா? என்ற கேள்வியைப் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கேட்டுவருகிறார்.

இறுதியாக, தூய ஆட்சியைத் தருவேன் என்று ஆட்சியைப் பிடித்த தவெக தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பும், பொறுப்பேற்றதற்குப் பின்பும் சராசரி அரசியல்வாதிகளைப் போல மோசடி அரசியல் செய்து வருகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்தின்படி முதல் கோணலை விஜய் சரி செய்யவேண்டும். இல்லையென்றால் முற்றும் கோணலாகி… ஆட்சியிலிருந்து அகற்றப்படும் நிலை ஏற்படவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

—  ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.