ஜெயகாந்தனின் மகளாக மட்டுமல்ல…. ஜெ. தீபலெட்சுமி “பளிச்”
ஜெயகாந்தனின் மகளாக மட்டுமல்ல…. ஜெ. தீபலெட்சுமி “பளிச்”
தமிழீழ இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வாக பதியம் எனும் அமைப்பானது, திருப்பூரில் தேநீர்ச் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 18.05.2025 அன்று திருப்பூர் நகரில் சிறிய அரங்கில் உரை வீச்சு, கலந்துரையாடல் நிகழ்வாக நடந்தேறியது. பதியம் என்கிற அமைப்பின் நிறுவனராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார் பாரதிவாசன்.
“2௦௦2ல் தொடங்கப்பட்டது பதியம். இலக்கியம் சார்ந்த உரை வீச்சு, குறும்படங்கள், மாற்றுத் திரைப்படங்கள் திரையிடுதல் போன்றவைகள் பதியம் அமைப்பின் முக்கிய செயல்பாடுகள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையான கூட்டங்களைத் திருப்பூரில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த மாதத்துக்காக “தமிழீழ இனப் படுகொலை நினைவேந்தல்” நிகழ்ச்சியினை நடத்தியுள்ளோம்.” என்கிறார் பாரதிவாசன்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகளும், மாற்றுச் சிந்தனைக்கான பெண்ணிய எழுத்தாளரும், கட்டுரையாளரும், மொழி பெயர்ப்பாளருமான ஜெ. தீபலெட்சுமி பங்கேற்று சீரிய உரையாற்றினார். நிகழ்ச்சியில் அறிமுக உரையாற்றியவர் எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா.
“நமது நிகழ்விலே பங்கேற்று உரையாற்றிட வந்துள்ள ஜெ. தீபலெட்சுமி குறித்துப் பெரிதான அறிமுகம் ஏதும் நமக்குத் தேவையில்லை. ஆம். அவர் தான் இன்னாரது மகள் என்கிற கிரீடம் சூட்டிக் கொள்ளாமலேயே, மிக எளிமையாக இந்த நிகழ்வுக்கு வந்து அமர்ந்துள்ளார். மிக அமைதியான தமிழின் இலக்கியச் சூழலில் தனது எழுத்துகளினால் பெரும் பரபரப்பு உருவாக்கி, அந்தக் காலக் கட்டத்திலே தனக்கென மாபெரும் வாசகர் கூட்டத்தினைத் தக்க வைத்துக் கொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது மகள் தான் இங்கு நம்மிடையே வந்து அமர்ந்திருக்கும் ஜெ. தீபலெட்சுமி.” எனக் குறிப்பிட்டார் எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா.

ஜெ. தீபலெட்சுமி எழுத்துகள் தொடர் கட்டுரைகளாக பிரசுரம் பெற்று, பின்னர் அவைகள் புத்தகங்களாக வெளி வந்துள்ளன. “ஆண்கள் நலம்”, மற்றும் “குத்தமா சொல்லலை குணமாவே சொல்றோம்”, மற்றும் “இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை” போன்றவைகள் குறிப்பிட்ட புத்தகங்கள் ஆகும். மேலும் மொழி பெயர்ப்பில் பேரார்வம் கொண்டிருப்பவர் அவர்.
ஜான் லீ ஆண்டர்சன் என்பவர் சேகுவாரா வாழ்க்கையை ஆங்கிலத்தில் ஒரு நூலாக எழுதியுள்ளார். ஜெ. தீபலெட்சுமி அதனைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆயிரத்து முந்நூறு பக்கங்களில் “சேகுவாரா ஒரு வாழ்க்கைப் போராளி” எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

“மே பதினெட்டு தமிழீழ இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச வந்துள்ளேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மகளாக மட்டுமல்ல, அவரது எழுத்துகளின் தீவிரத் தன்மை கொண்ட வாசகியாகவே நான் இங்கு வந்துள்ளேன். ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஒரு இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள், ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் ஆகிய மூன்றுமே ஜெயகாந்தன் அவர்களின் மிக முக்கிய நூல்களாக நான் ஆழ்ந்து வாசித்து அறிந்து கொண்டவைகள்.
எனினும் என்னுடைய எழுத்துகள் ஒரு ஐடி பணியாளரின் அனுபவங்களாகவும் அவஸ்தைகளாகவும் வெளிப்பட்டிருக்கக் கூடும். 2௦௦9ல் வலைப்பூக்களில் எழுதினேன். பின்னர் தமிழ் இந்து நாளிதழிலும், ஹெர் ஸ்டோரி பகுதியில் தொடர்ந்து பெண்ணியம் சார்ந்து கட்டுரைகளும் எழுதினேன். என்னவோ எனக்கு மொழி பெயர்ப்பில் எப்போதும் தீராத ஆர்வமிருந்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் தான் சேகுவாரா வாழ்க்கை குறித்தான ஆங்கில நூலினைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதினேன். அதன் மூலம் சிதையாமலும் அதே நேரத்தில் வாசிப்பவர்க்கு அயர்ச்சி ஏற்படாமலும் இருக்கத் தக்கதான மொழி நடையில், ஆயிரத்து முந்நூறு பக்கங்கள் கொண்ட புத்தகமாக அதனை வெளியிட்டுள்ளேன். “சேகுவாரா ஒரு வாழ்க்கைப் போராளி” எனும் தலைப்பில் அந்தப் புத்தகம் இரண்டாவது பதிப்பாக வெளி வரவுள்ளது.
ஒரு முறை கவிஞர் சுகிர்தா ராணி அவர்களின் கவிதை ஒன்றினை, நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதி இருந்தேன். டெல்லியில் ஜேஎன்யு எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் போராட்டத்தில், அந்தக் கவிதையின் ஆங்கில வரிகளை காகித அட்டைகளில் எழுதித் தாங்கிப் பிடித்திருந்தனர் அந்த ஜேஎன்யு போராட்டக் குழுவினர். அதனைக் கண்ணுற்ற கவிஞர் சுகிர்தா ராணி அவர்கள், உடனே எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பெரும் மகிழ்வுடன் அதனைப் பகிர்ந்து கொண்டார் அதனை நான் அப்போது அத்தனை மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார் ஜெ. தீபலெட்சுமி.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.