காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு..
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியை அக்கட்சி செயற்குழு இன்று தேர்வு செய்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அடைந்த படு தோல்வியைத் தொடர்ந்து, தார்மீக பொறுப்பேற்று, காங்கிரஸ், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி.
முன்னணி தலைவர்கள் பலர் வற்புறுத்தியும் கூட, ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார் எனவே கடந்த இரு மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைமை இன்றி தத்தளித்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக் கட்சியின் உயர்மட்டக் குழுவான செயற்குழு டெல்லியில் இன்று கூடியது.
கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் காலையில் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இதன் பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் இந்த நடைமுறையில் தாங்கள் பங்கேற்பதில்லை என்று கூறி கிளம்பி சென்றனர்.
அதை நேரம், பிரியங்கா காந்தி மட்டும், தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு என காங்கிரஸ் கட்சியின் ஐந்து மண்டல நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அனைத்து மண்டல நிர்வாகிகளுமே, ராகுல் காந்தியே மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்திக்கு இதில் சம்மதம் இல்லாத நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இழுபறி நிலை நீடித்தது.
இதனிடையே இரவு 10.50 மணியளவில் செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. அப்போது, “சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
சோனியா காந்தி 1998 முதல் 2017ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து 19 வருடங்கள் பதவி வகித்தார். அந்த கட்சியில் நீண்ட கால தலைவராக பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டு. காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்தித்த கால கட்டத்தில் தலைமை பதவிக்கு வந்த சோனியா காந்தி, அக்கட்சியை அடுத்தடுத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
இப்போது மீண்டும் காங்கிரஸ் கடும் சிக்கலில் தவித்துள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து உடல்நலக்குறைவால் ஒதுங்கியிருந்த சோனியா மீண்டும் களம் வந்துள்ளார். இனி அரசியலில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.