திமுக அரசை விமர்சித்ததால் சிபிஎம் மாநில செயலர் பொறுப்பு மாற்றமா?
‘இந்து தமிழ் திசை’ மட்டுமல்ல, ‘நியூஸ் 18’ உள்பட வேறு சில ஊடகங்களும் அப்படித்தான் செய்தி வெளியிட்டன. திமுக அரசை விமர்சித்ததால் சிபிஎம் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே. பாலகிருஷ்ணன் மாற்றம் என்றும்; மூன்று முறை பதவி வகிக்கலாம் என்றாலும் இப்போது அவர் மாற்றப்பட்டுவிடுவார் என்றும் செய்தியைக் கோர்த்திருந்தன. காவல்துறை கெடுபிடி குறித்து அவர் செய்த விமர்சனம்தான் காரணம் என்று பின்னணியும் கொடுத்திருந்தன.
அவர் அந்த விமர்சனத்தைச் செய்தியாளர் சந்திப்பில் சொல்வதற்கு முன்பே, சொல்லப்போனால் மாநாடு அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே, அவர் இந்தப் பொறுப்பில் தொடர மாட்டார் என்று கட்சியின் வேர்மட்டத் தோழர்களுக்கும் நன்றாகத் தெரியும். பொறுப்புகளில் தொடர்வதற்கான வயது வரம்பு குறித்த கட்சியின் அமைப்பு விதிகள் தெரிந்த மற்றவர்களுக்கும் இது புரியும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனாலும், இவர்கள் இப்படித்தான் செய்தி வெளியிட்டார்கள். செய்தியைத் தயாரித்தவர்களின் புரிதல் குறைபாடா, வழிகாட்டியவர்களின் உள்நோக்கக் கோளாறா? விளக்கங்கள் தரப்பட்டபிறகு கொஞ்சம் சன்னமாகவாவது வருத்தம் தெரிவித்தார்களா? என்று தெரியவில்லை. ஆயினும், அந்த நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல், ஊடக நெறியில் உண்மையான பற்றுள்ள பொதுவான மற்றவர்களும் கூச்சப்பட்டுக் குமுறலோடு இருந்திருப்பார்கள்.
முகநூலில் : எழுத்தாளர் குமரேசன்