திருச்சியில் இருந்து தமிழக முழுவதும் போதை ஊசி சப்ளை செய்த மருந்து நிறுவன தொழில் அதிபர் உள்ளீட்ட 3 பேர் கைது !
தமிழக முழுவதும் போதை ஊசி சப்ளை செய்த திருச்சி மருந்து நிறுவன தொழில் அதிபர் உள்ளீட்ட 3 பேர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் முனீஸ்வரர் கோவில் அருகில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாகவும் போதைக்கான மருந்துகளை பேருந்தில் கடத்தி வருவதாகவும் ஜஜி அஸ்ட்ரா கார்க் அமைந்துள்ள சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சின்னமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமாறன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு 4 இளைஞர்கள் போதை ஊசி பயன்படுத்திக்கொண்டு, போதையில் இருந்தது தெரியவந்தது.
அப்போது போலீசாரை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து 11 போதை மருந்து பாட்டில்கள், அதை செலுத்துவதற்காக வைத்திருந்த 4 ஊசிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சின்னமனூர் இந்திரா நகர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஷேக் அபுதாகீர் மகன் முகமது மீரான் (வயது 22), 3-வது வார்டு சாமிகுளத்தை சேர்ந்த அழகுமுத்து மகன் மாணிக்கம் (19), தேவர்நகரை சேர்ந்த பழனிசாமி மகன் தங்கேஸ்வரன் (20), காமாட்சிபுரம் சுக்காங்கல்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் சரவணக்குமார் (20) என்பது தெரியவந்தது.
இதில் முகமது மீரான் பட்டதாரி என்றும், மற்றவர்கள் பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் வேலையின்றி சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே கைதான 4 பேருக்கும் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரான ஜோனதன் மார்க் (30) என்பவர் போதை மருந்து மற்றும் ஊசிகளை விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதேபோல் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜோனதன் மார்க்கை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் தனிப்படை போலீசார் திருச்சிக்கு விரைந்தனர். அங்கு போதை மருந்துகளை வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றபோது, ஜோனதன் மார்க்கை போலீசார் 24.08.2022 நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 பாட்டில் போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் அறங்தாங்கியை சேர்ந்த வினோதி (35) என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வெப்சைட் உருவாக்கி போதை மருந்து விற்பனை
சின்னமனூரில் போதை ஊசி பயன்படுத்திய வழக்கில் சிக்கிய திருச்சியை சேர்ந்த ஜோனதன் மார்க், இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு தலைவன் போல் செயல்பட்டது போலீசார் விசாணையில் தெரியவந்துள்ளது.
கைதான ஜோனதன் மார்க் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர். என்ஜினீயரான அவர், திருச்சியில் தனியார் மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் பெயரில், மதுரை, உள்ள மருந்து நிறுவனங்களிடம் இருந்து கிரீன் என்கிற ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தை மொத்தமாக கொள்முதல் செய்துள்ளார்.
இதே சென்னையில் உள்ள மருந்து நிறுவனத்திடம் இருந்து பிங்க் என்கிற ரகசிய குறியீட்டின் ஊக்க மருந்தும்,
புனேவில் உள்ள மருந்து நிறுவனத்திடம் இருந்து ஆரஞ்சு என்கிற ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தையும் பெற்றுள்ளார்.
இந்த ஊக்க மருந்தை டாக்டர் பரிந்துரையின் பேரில் சில சிகிச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், அதையே ஜோனதன் மார்க் போதை மருந்தாக விற்பனை செய்து வந்துள்ளார்.
தமிழகத்தில், சென்னை, ஓசூர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், சிவகங்கை, கரூர், சேலம், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்தில் பாலக்காடு, திருவனந்தபுரம், மலப்புரம்ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் போதை மருந்தை விற்பனை செய்து வந்துள்ளார். பல மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் போதை மருந்து கேட்கும் நபர்களுக்கு கூகுள்பே மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு, பஸ்களில் உறவினர்களுக்கு மருந்து அனுப்புவதாக கூறி அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்காக அவர் ஒரு வலைத்தளம் தொடங்கி, அதன் மூலம் மருந்துகளை விற்பனை செய்தும் வந்துள்ளார். இதனால், அவருடைய 3 வங்கிக்கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.
இதே போல் மருந்து கம்பெனிகளை கண்காணிக்க வேண்டியது தமிழக காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.