இ.டி. ரெய்டு முன்னே … பல கோடி தேர்தல் பத்திரங்கள் பின்னே … பக்கா பிளான் பாஜக !

ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ‘ரெய்டு’க்கு முன்பாக பாஜக விற்கு நிதியளித்ததே இல்லை. 4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித்துள்ளன.

0

இ.டி. ரெய்டு முன்னே … பல கோடி தேர்தல் பத்திரங்கள் பின்னே … பக்கா பிளான் பாஜக ! 

ன்றிய பாஜக அரசு, கடந்த 2018-ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்ட விரோதம் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமை யில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா,  பி.ஆர். கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது.

2 dhanalakshmi joseph

பாஜக ஊழலைப் பாதுகாக்கும் வகையில், எஸ்பிஐ வங்கி கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள்,  மார்ச் 12 மாலைக்குள் விவரங்களை சமர்ப்பிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து,

உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த எஸ்பிஐ வங்கி, கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024  பிப்ரவரி 15 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும்; இதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி உள்ளன என்றும்; எஞ்சிய 187 பத்திரங்கள் மாற்றப்படாததால், அந்தத் தொகை பிரதமரின் தேசிய  நிவாரண நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

- Advertisement -

- Advertisement -

ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையமும், எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை ‘பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்களின் வெளிப்பாடு’ என்ற பெயரில் 2 பாகங்களாக தனது இணையதளத்தில் கடந்த மார்ச் – 14 அன்று மாலை வெளியிட்டது.

மோடி பிரதமர் ஆன பின்பு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகிய மத்திய அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளை மிரட்டவே அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.

கடந்த  2022-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளான கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ‘பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ்’ என்ற நிறுவனம்தான் அதிகபட்சமாக  1,368 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது.

அதேபோல, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் பாஜகவுக்கு வைத்த ’தேர்தல் மொய்’ தொகை ரூ.398 கோடி.

ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலின் 3 நிறுவனங்களும் சேர்ந்து எழுதியிருப்பது ரூ. 246 கோடி.

ஒன்றிய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப்பணிகளுக்கான காண்ட்ராக்டுகளைப் பெற்றுள்ள மேகா என்ஜினீயரிங் நிறுவனம் ரூ. 966 கோடியை பாஜகவுக்கு ’கப்பமாக’ கட்டியிருக்கிறது.

4 bismi svs

மேலும், குவிக் சப்ளை செயின் லிட் நிறுவனம் ரூ. 410 கோட; ஹால்டியா எனர்ஜி ரூ. 377 கோடி என தேர்தல் பத்திரங்களின் வழியே பாஜகவுக்கு நன்கொடைகளை அளித்திருக்கின்றன.

இவற்றையெல்லாம்விட கேலிக்கூத்தானது, பாகிஸ்தானை ஒரு எதிரி நாடாக சித்தரித்து அரசியல் ஆதாயம் பெறுவதை நீண்ட கால செயல்திட்டமாக வைத்திருக்கும் இதே பாஜக தான், கராச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “ஹப் பவர் கம்பெனி (HUB Power company)” என்ற நிறுவனத்திடமிருந்து நன்கொடையை பெற்றிருக்கிறது. 

அதுவும் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்த நிலையில்,  நடைபெற்ற மக்களவை தேர்தல் செலவுகளுக்காக மேற்படி “ஹப் பவர் கம்பெனி” நிறுவனத்திடமிருந்து  ரூ.95 லட்சத்தை நன்கொடையாக பெற்றிருக்கிறது, பாஜக. 

பாஜக ஆளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த டோரண்ட் குழுமம் கடந்த ஜனவரி 10, 2024 அன்று  ரூ.20 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியது. அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜனவரி 13, 2024 அன்று டோரண்ட் குழுமத்திற்கு குஜராத் பாஜக அரசு ரூ.47,350 கோடி மதிப்பிலான முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மேலும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட கட்டுமான உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் & இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) ரூ.966 கோடி தேர்தல் பத்திரம் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அதிக தொகையை நிதியாக வழங்கிய இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும். ஏப்ரல் 11, 2023 அன்று ரூ.140 கோடி வழங்கியுள்ள மேகா நிறுவனத்துக்கு ரூ.14,400 கோடியில் தானே – போரிவலி (மகாராஷ்டிரா) இரட்டை சுரங்கப்பாதை திட்டப் பணியை கொடுத்தது மோடி அரசு. நம்மூர் நடிகர் பார்த்திபன் பாணியில் சொல்வதென்றால், செம்மையான ”give and take” பாலிசிதான்.

மங்கோலியாவில் ரூ.5400 கோடி பசுமை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை இந்தியா சார்பாக பெற்றது. ரூ.3681 கோடி மதிப்புள்ள மும்பை புல்லட் ரயில் நிலையத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் பெற்றது. ரூ.38,000 கோடி மதிப்பிலான காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் சிஏஜி சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

அம்பானி, அதானி எங்கே லிஸ்டில் என நாம் எண்ணுவதற்குள் குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ.410 கோடி அளவில் நன்கொடை அளித்துள்ளது. இந்த நிறுவனம் தபஸ் மித்ராவுக்குச் சொந்தமானது ஆகும். மோடியின் நெருங்கிய நண்பர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன ஆடிட்டராக இருக்கும் இந்த தபஸ் மித்ரா தனது பெயரில் உள்ள குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் ரூ.410 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் தபஸ் மித்ராவின் நிறுவனம் வெறும் ரூ.10 கோடி மட்டுமே லாபம் ஈட்டிய நிலையில்,  எவ்வாறு ரூ.410 கோடி அளவில் நன்கொடை அளித்தது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ஒருவேளை பாஜகவிற்காக  தபஸ் மித்ரா மூலம் அம்பானி நன்கொடை வழங்கியுள்ளாரா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

போக, சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர். இந்த சுரங்கத்தை கட்டி வரும்  நிறுவனமான நவ யுகா நிறுவனம் பல கோடி ரூபாய் அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம்  நன்கொடை வழங்கியுள்ளது. இதில் 90% தொகையை பாஜக பெற்றுள்ளது  எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 2018-இலிருந்து 2023 வரையான காலத்தில் பாஜகவிற்கு நிதியளித்துள்ள நிறுவனங்களில் குறைந்தது 30 நிறுவனங்களின்மீது ஒன்றிய  அரசின் அமைப்புகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை மொத்தம் ரூ.335 கோடி நிதியளித்துள்ளன. அதில் ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ‘ரெய்டு’க்கு முன்பாக பாஜக விற்கு நிதியளித்ததே இல்லை. 4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித்துள்ளன. ஏற்கெனவே பாஜகவிற்கு நிதியளித்துக் கொண்டிருந்த 6 நிறுவனங்கள், ரெய்டுக்குப் பின் முன்பைவிட மிக அதிமான தொகையை நடவடிக்கைக்குப்பின் பாஜகவிற்கு அளித்துள்ளன. என்னே ஒரு ராஜ தந்திரம்?

பாண்டியன்

(நன்றி : கேலிச்சித்திரம் – சதிஷ் ஆச்சார்யா.)

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.