ஒரே நாளில் வடக்கு  வரைக்கும் சென்ற தமிழகப் பெண் பிரபலம். !

பிரதமர், ரஜினி,மாண்டஸ் புயல், மரப்பாலம் எல்லாமும் ரிவர்ஸ்

0

பிரதமர், ரஜினி,மாண்டஸ் புயல், மரப்பாலம் எல்லாமும் ரிவர்ஸ்
ஒரே நாளில் வடக்கு  வரைக்கும் சென்ற தமிழகப் பெண் பிரபலம். !

இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் தொங்கியதால் வவ்வால் என்று பட்டப்பெயர் சூட்டி கலாய்த்த இந்தி சேனல்கள்
புட்போர்டு டிராவல் குறித்துச் சென்னை போலீசில் புகார்..

மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்துச் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் துரிதப்படுத்தினார். அவருடன் அமைச்சர்கள், துறை செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதில் சென்னை காசிமேடு துறைமுகப் பகுதியில் முதல்வர் ஆய்வுப்பணி மேற்கொண்டபோது அந்தப் பகுதியின் குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல இயலவில்லை. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மற்றும் முதல்வர் வாகனம் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வரின் ஆய்வின்போது உடன் இருக்க வேண்டிய நிலையில் இருந்த சென்னை  மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ககன்தீப்சிங்பேடி, உள்ளிட்டோர், பாதுகாப்பு வாகனத்தில் புட் போர்டு டிராவல் செய்தனர்.


மேயர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி, எம்.எல்.ஏ ஒருவர் என முக்கிய பிரமுகர்கள் புட் போர்டில் சென்ற காட்சிகள் இணையத் தளங்களை நேற்று (11.12.2022 ) முழுமையாக ஆக்ரமித்தன.
டுவிட்டர், இன்ஸ்டாகிராம்,டெலிகிராம், பேஸ்புக்’, வாட்ஸ் ஆப், யூ டியூப், லோக்கல் சேனல்கள் முதல் வெளியூர், வெளிநாடு சேனல்கள் வரை எதைத் திருப்பினாலும் மேயர் புட்போர்டில் சென்ற காட்சிகள் வைரலாகின. இந்தப் பயணத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. பொறுப்புள்ள மேயர். ஐ.ஏ.எஸ் அதிகாரி போன்றோர் இவ்வாறு செய்யலாமா, முதல்வரின் பார்வையில் படுவதற்காக இப்படிச் சீன் போடுகிறார்களா..படியில் பயணம் நொடியில் மரணம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே படியில் தொங்கலாமா..இதுதான் திராவிட மாடலா என்றெல்லாம் கண்டன குரல்கள்  வெளிப்பட்டன.

இந்தக் கண்டனபதிவுகளில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை முதல் ஆளாகத் தனது வேலையைக் காட்டினார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் மேயர் மற்றும் கமிஷனர் உள்ளிட்டோர் வாகனத்தில் தொங்கும் காட்சிகளைப் பதிவு செய்த அவர், அதற்கு அருகில் தனது கருத்தாக, சுயமரியாதை, சமூக நீதி, சாமான்யர்கள் கட்சி என்றெல்லாம் திமுகக் கூறி வரும் போலி கதைகள் நீண்ட நாட்களு’கு முன்னராகவே புதைக்கப்பட்டு விட்டன.

இதைக் காட்டும் வகையில்தான் மேயர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தொங்கி சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது என்று பதிவு செய்தார். அவ்வளவுதான் இணையங்கள் கதற ஆரம்பித்தன. திமுக ஐ.டி. விங் பிரிவினர், அண்ணாமலையின் பதிவுக்கு பதில் போட்டுக்கொண்டே இருந்தனர். குஜராத் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, தனது காரில் நின்றபடியே பொதுமக்களைப் பார்த்து கையசைத்த காட்சிகளைப் பதிவு செய்த திமுகக் குழுவினர், தடுக்கி விழுந்தால் பொட்டுனு போகிற கிழவன் தொங்கிட்டு வரலாம்..தப்பில்லே….பெண் ஒருவர் வரக்கூடாதா.. அதானடா..பெண் என்ற காரணத்தால் வன்மம்டா என்று பதிவேற்றினர்.

தொங்கும் அரசியல்
தொங்கும் அரசியல்

கடுப்பான பாஜக.. குஜராத் மாநிலம் தும்கூர் மேயர், கம்பீரமாக நின்றபடி இருக்க அவருக்கு பிரதமர் மோடி தலைகுனிந்து வணக்கம் தெரிவிக்கும் காட்சிகளையும், மேயர் பிரியா, தொங்கி செல்லும் காட்சியையும் இணைத்து அது குஜராத் மாடல், இது திராவிட மாடல் என்று பதிலளித்தனர்.

அதில் ஆரம்பித்த அக்கப்போர் அனைத்து கட்சியினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் உருமாற்றம் அடைந்தது. தொங்கியபடி கடமையை நிறைவேற்றும் கொத்தடிமைகள், குடை பிடிப்பது, காரில் தொங்குவது பெண் இனத்துக்கு பெருமை சேர்க்கும் சமத்துவ, சமூக நீதி திராவிட மாடல்.. என்று ஒரு பதிவு…

தொல் திருமாவளவனுக்கு ஏற்பட்ட கதிதான் மேயருக்கும். பட்டியல் இனத்தவர் என்பதால் மதிக்கப்படவில்லை என்று ஜாதி ரீதியான பதிவு..

புட்போர்டு டிராவல் பே’கேஜ் சமூக நீதி சப்பாத்தி…பின்னாடி நிற்பது ககன் தீப் சிங் பேடி.. ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன் என்று ஒரு பதிவு..

தொங்கி பிழைப்பதை விடத் தொங்கி சாகலாம் என்று ஒரு பதிவு..

 

தொங்கும் அரசியல்
தொங்கும் அரசியல்

கனிமொழி அல்லது செந்தாமரையை இப்படித் தொங்க விடுவீர்களா என்று ஒரு பதிவு என்று லட்சக்கணக்கான பதிவுகள், மேயருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவாகின.
புதுச்சேரி ஆளுனர் தமிழிசை கருத்துக் கூறும்போது, மேயர் விரும்பி வாகனத்தில் சென்றாரா என்பது தெரியவில்லை என்று நாசூக்காகத் தெரிவித்தார்.
இப்படி ஒரு டிராவலில் அகில உலகப் பேமஸ் ஆன மேயர் பிரியாவை வட இந்திய சேனல்களும் விட்டு வைக்கவில்லை. வாகனத்தில் மேயரும் ஆணையரும் செல்லும் வீடியோவை வெளியிட்ட இந்தி சேனல்கள், மேயருக்கு வவ்வால் என்று பெயர் சூட்டி, கலாய்த்தன. மேயரின் இந்தத் தொங்கல் பயணம், குஜராத்தில் பாஜக வெற்றி, பிரதமரின் கருத்துகள், மாண்டஸ் புயல், நிவாரணம், பின்னுக்கு தள்ளி விட்டு டி.ஆர்.பியில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேயர் பயணம் செய்த வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லை..2019 ல் முடிந்து விட்டது??

தொங்கும் அரசியல்
தொங்கும் அரசியல்

அரசு விழாக்களில் முதல்வர் பங்கேற்கிறார் என்றால் புரட்டோகால் என்ற முறையில் வாகன கான்வாய் அமைக்கப்படும். முதலில் லோக்கல் பைலட் என்ற வாகனம், அதன் பிறகு கான்வாய் பைலட் என்ற வாகனம், அதன் பிறகு மஞ்சள் கொடியுடன் கூடிய மற்றொரு பைலட் வாகனம், அதற்குப் பிறகு செய்தித்துறையினர் வாகனம், அதற்குப் பிறகு ஜாமர் வாகனம், அதன் அருகில் பாம் ஸ்குவார்டு வாகனம், அதற்குப் பிறகு எஸ்.பி.ஜி பாதுகாப்பு உள்ளவர் என்றால் எஸ்.பி.ஜி வாகனம் அதற்குப் பிறகு முதல்வர் வாகனத்தை நடுவில் வைத்து நான்கு திசைகளிலும் கமோண்டா வாகனங்கள், அதன் பிறகு அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மேயர்கள், என்று செல்லும் முன்னதாக மெட்டல் டிடக்டர் பரிசோதனை, கண்ணாடி டிராலி வைத்து வாகனத்தின் கீழ் பகுதியில் பரிசோதனை, சுற்றுப்புற பரிசோதனை என்று சம்பிரதாயங்கள் முடிந்து, பாதுகாப்புத் தலைமை அதிகாரி உத்தரவிட்டால் தான் முதல்வரின் வாகனமே புறப்பட முடியும். அத்தகைய பாதுகாப்பு மிகுந்தது முதல்வரின் கான்வாய்.

தற்போது இந்த முறை சற்று எளிமையாக உள்ளது.  தற்போதைய பிரச்னையில் மேயர் பிரியா பயணம் செய்தது, முதல்வரின் வாகனம் அல்ல. முதல்வர் பாதுகாப்பு கான்வாய் வாகனம். இந்த வாகனத்தின் பெயர் ஜாமர் வெகிகிள். அதாவது முதல்வர் செல்லும் பாதையில், வெடி குண்டு போன்ற எதுவும் இருந்து, அவற்றை ரிமோட் மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தைத் தடை செய்யும் வாகனம்தான் இது. வாகனத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள ஜாமர் கருவியானது, கான்வாய்ச் செல்லும் பாதையில் நான்கு திசையிலும் 200 மீட்டர் சுற்றளவில் எந்த எலக்ட்ரானிக் கருவிகளையும் இயங்க விடாமல், ஜாம் செய்து விடும். விஐபி வாகனம் கடந்தால்தான் அதுவும் ஜாமர் வாகனம் கடந்தால்தான் எந்தப் பொருளும் வேலை செய்யும். இந்த வாகனத்தில் காவல்துறை அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் பயணிக்க முடியாது.

ஆனால் இந்த வாகனத்தில் இரண்டு பக்கமும் புட்போர்டு வசதி உண்டு. கமாண்டோ வீரர்கள் இதில் தொங்கியபடி வருவார்கள். முதல்வர் வருவதற்கு முன்பாகச் சம்பந்தப்பட்ட இடத்தில் இறங்கி பொதுமக்களைச் சரி செய்வார்கள். அந்த வகையான வாகனம்தான் இது. ஆனால் இந்த வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற புதிய சர்ச்சையும் தற்போது வெடித்துள்ளது.  மேயர் தொங்கி சென்ற வாகனத்தின் பதிவெண்: டி.என்.06 டி.ஜி.1000. இந்த வாகனம் 2018 செப்டம்பர் 24 ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதி சான்று 2033 செப்டம்பர் வரை உள்ளது. ஆனால் இன்சூரன்ஸ் 2019 ஆகஸ்ட் 31 ல் முடிந்துள்ளது. அதன் பிறகு ரினிவல் செய்யப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டியுள்ள வட இந்திய ஊடகங்கள், தமிழக அரசியல்வாதிகள் என்றாலேயே இப்படித்தான் என்று விமர்சனம் செய்துள்ளதோடு, முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் கும்பிடு போட்ட காட்சிகளையும் இணைத்துக் கலாய்த்தன.

மாநகராட்சி விளக்கம்.

மேயர் மற்றும் கமிஷனர் வாகனத்தில் தொங்கிய சம்பவத்துக்கு சென்னை மாநகராட்சி வெளியிட்ட விளக்கத்தில், சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேயர் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் குறுகிய சாலையில் செல்ல முடியாது என்பதால் முதல்வர் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே குறிப்பிட்ட இடத்துக்கு சென்றன. முதல்வர் ஆய்வு செய்யும்போதே, பிரஸ் மீட் ஏற்பாடுகளைச் சரிபார்க்க வேண்டும் என்ற நோக்கில் மேயரும் கமிஷனரும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்தனர். அப்போதைக்கு கிடைத்த வாகனத்தில் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இடையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு – மேயரின் செயலை பாராட்ட வேண்டுமே தவிர, விமர்சனம் செய்யக்கூடாது என்றார்.

மேயர், கமிஷனர் மீது போலீசில் புகார்:

மேயர் மற்றும் கமிஷனர், எம்.எல்.ஏ ஆகியோர் புட்போர்டில் சென்றது தொடர்பாகச் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர், ஆணையரை சந்தித்து, மேயர் புட் போர்டு பயணம் தொடர்பாகப் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில் மோட்டார் வாகன சட்டத்தின்படி புட்போர்டில் தொங்க அனுமதியில்லை. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தொங்கி பயணம் செய்தால், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே சாலை விதி மீறலில் ஈடுபட்ட அரசு சார் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.எது எப்படியோ, வடிவேலு பாணியில் வாண்டடா வந்து வண்டியில் ஏறியதன் மூலம் வடக்கு வரை மேயர் புகழ் பரவி, தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை மறக்க செய்துள்ளது என்பதே நிதர்சனம்.

– அரியலூர் சட்டநாதன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.