“ஜென்டில்மேன் இருக்கும் போது ஜென்டில்வுமன் இருக்கக்கூடாதா?”– ஹீரோயின் கேட்ட கேள்வி!
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள படம் ‘ஜென்டில்வுமன்’ . மார்ச் 07-ஆம் தேதி
ரிலீஸ் ஆவதால் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் பிப்ரவரி 18- ஆம் தேதி நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் லெனின் பாரதி, த.செ.ஞானவேல், ராஜு முருகன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில் பேசிய படம் சம்பந்தப்பட்டவர்கள்…
தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர்
“இந்தப்படத்தின் கதையைக் கேட்டவுடனே சூப்பர் இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை. மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. பத்திரிகை சகோதரர்கள் இப்படத்தை ஆதரிக்க வேண்டும், ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன் “.
One Drop Ocean Pictures லியோ..
“இந்தக் கதையை ஜோஷ்வா சொன்ன போது, இப்படத்தில் அழுத்தமான விசயம் இருப்பது புரிந்தது. மிகத் தெளிவாக சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து கதையிலிருந்தது. இந்தக்கதை பிடித்து எதையும் யோசிக்காமல் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் நன்றி. இப்படத்தைப் புரிந்து கொண்டு, உழைப்பைத் தந்த கலைஞர்கள், நடிகர்கள் அனைவருக்கும் நன்றிகள். வசனமும் பாடல்களும் யுகபாராதி அண்ணா. அவர் இப்படத்திற்குக் கிடைத்தது வரம். படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் , படத்தை வெளியிடும் உத்ரா புரொடக்சனுக்கும் நன்றி”.
எடிட்டர் இளையராஜா சேகர்
“இயக்குநர் ஜோஷ்வாவை இந்தப்படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும். தயாரிப்பாளர் ஹரி சார் இப் படத்திற்காகக் கேட்ட அனைத்தையும் தந்துள்ளார்.யுகபாரதி அண்ணாவின் வசனங்கள் தான் படத்திற்கு பலம். படம் அனைவருக்கும் கண்டிப்பாகபிடிக்கும்”.
நடிகை தாரணி
“எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு,என் தயாரிப்பாளர்களுக்கு , என் கோ ஆக்டர்ஸ்களுக்கு நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்”.
ஒளிப்பதிவாளர் காத்தவராயன்
“இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் உதவி இயக்குநராக இருக்கும் போதே, நிறைய டார்ச்சர் செய்வான். இப்போது என்ன பண்ணப் போகிறானோ? என நினைத்தேன்.ஆனால் படத்தை மிக அமைதியாக அழகாக எடுத்துள்ளான். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா,
“ஜென்டில்வுமன் இதுவரை நாங்கள் வெளியிட்ட படத்திலிருந்து, வித்தியாசமான படமாக இருக்கும். படத்தை வெளியிட எங்களுக்கு வழி ஏற்படுத்தித் தந்த ரிஸ்வான் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் மற்றும் நேதாஜி சார் ஆகியோருக்கு நன்றி. அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள்”
ஆர்ட் டைரக்டர் அமரன்
“இயக்குநர் ஜோஸ்வா எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உதவி இயக்குநர்களாக நிறையப் பேர் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் அதைச் சாத்தியமாக்குவது எத்தனை பெரிய கஷ்டம் என எனக்குத் தெரியும். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் அதிலும் 19 நாளில் அவர் இந்தப்படத்தை எடுத்துள்ளார், சினிமாவில் சிலருக்கு எல்லாமும் கிடைக்கும் ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஜோஷ்வா அதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு இந்த மொத்த டீமும் தான் காரணம். எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். ஜோஷ்வா மாதிரி இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்தால், சினிமா இன்னொரு தளத்திற்குச் செல்லும்”.
பாடலாசிரியர்& வசனகர்த்தா யுகபாரதி
“25 ஆண்டுகால திரை வாழ்வில் நிறையத் தம்பிகளை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களில் சிலரைச் சந்திக்கும் போது, இவர்கள் கண்டிப்பாக இயக்குநர் ஆகி விடுவார்கள் என நினைப்பேன். அப்படியான தம்பிதான் ஜோஷ்வா. இந்த படத்தைப் பற்றி நிறையப் பேசக்கூடாது, இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் அதிகம் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நல்ல படத்திற்கு நீங்கள் எப்போதும் பெரும் ஆதரவு தருவீர்கள், உங்கள் தோள் மீது வைத்துக் கொண்டாடுவீர்கள். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்தில் உள்ள கலைஞர்கள், நடிகர்கள் எல்லோரும் ஜோஷ்வா மீது வைத்த அன்பு தான் இந்தப்படம். அவர் 19 நாளில் இப்படத்தை முடிக்க முடியும் எனச் சொன்ன போது, நான் நம்பவில்லை. ஆனால் அடுத்தடுத்து நல்ல கலைஞர்கள் நம்பி வந்த போது அது நடந்தது. ஜோஷ்வாவிற்கு வாழ்த்துக்கள் “.
இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்
“சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான். எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார்.

இந்தக்கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன். அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது அவர் ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வியைத்தான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள். அதற்கு நான் பதில் சொன்னவுடன் அவர் நடிக்க ஒத்துக்கொண்டார். தயாரிப்பாளர்கள் என்னிடம் இந்தப்படத்தில் காமெடி இருக்கா?கமர்ஷியல் இருக்கா? என எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி அண்ணன் மூலம் தான் எனக்கு தயாரிப்பாளர்கள் அறிமுகம். அவருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
நடிகர் ஹரி கிருஷ்ணன்
” ஜோஷ்வா எனக்கு நல்ல நண்பர். அவரும் நானும் அயனாவரத்தைச் சேர்ந்தவர்கள். என் அப்பா ஆபாவாணன் படங்கள் பற்றிச் சொல்வார். அந்தப் படங்கள் எல்லாம் ஒரு இம்பாக்ட் கிரியேட் செய்யும். அது போலத் தான் நான் ஜோஷ்வாவை பார்க்கிறேன்”.
நடிகை லாஸ்லியா

“தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் ஆகியோருக்கும் எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் ஜோஷ்வாவிற்கும் நன்றி. அவர் நினைத்தது போல், இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்”.
நாயகி லிஜோமோல்
“படத்தின் டைட்டில் போலவே நிறையப் பேரின் பார்வையை மாற்றுகின்ற படமாக இது இருக்கும். இந்தக் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஜோஷ்வாவிற்கும் யுகபாரதி அண்ணாவிற்கும் நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என் கோ ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. அனைவரும் மிக ஆதரவாக இருந்தார்கள். இந்த அற்புதமான படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. 19 நாளில் இவ்வளவு குவாலிட்டியாக படத்தை முடிப்பது அத்தனை எளிதில்லை. இதைச் சாதித்த படக்குழுவினருக்கு நன்றி. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்”.

Komala Hari Pictures & One Drop Ocean Pictures நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என். நரேந்திர குமார் & லியோ லோகேம் நேதாஜி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
— மதுரை மாறன்.