பட்டா கத்தியுடன் பப்ளிக்கா அலப்பறை ! பட்டதாரி வாலிபரை தட்டித் தூக்கிய போலீசார் !
நாய் சேகர் கேரக்டர்ல நடிகர் வடிவேலு சொல்ற டயலாக் மாதிரி, “நானும் ரவுடிதான்னு” கெத்து காட்ட, லவுசு விட்ட பார்ட்டியை ”அட வா பங்காளினு வாஞ்சையா” வாரி சுருட்டி சிறையிலடைத்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார் ...
பட்டா கத்தியுடன் பப்ளிக்கா அலப்பறை !
பட்டதாரி வாலிபரை தட்டித் தூக்கிய திருச்சி மாவட்ட போலீசார் !
”ரொம்ப அதிகமால்லாம் எனக்கு வழக்கு இல்லை. 261 எஃப்.ஐ.ஆர். இருக்கு. 3 மர்டர் கேசு. நாலு கடத்தல் வழக்கு. ஒரு பொடா வழக்கு. ஒரு ஆயுத வழக்கு. இது இல்லாம ஒரு நூற்று பதினொரு வழக்கு … ” னு இன்ஸ்டாகிராம்ல தனது குருநாதருக்கு ரீல்ஸ் போட்டு … டாஸ்மாக் பார்ல பட்டா கத்தியோட அலப்பறையும் கொடுத்து, நாய் சேகர் கேரக்டர்ல நடிகர் வடிவேலு சொல்ற டயலாக் மாதிரி, “நானும் ரவுடிதான்னு” கெத்து காட்ட, லவுசு விட்ட பார்ட்டியை ”அட வா பங்காளினு வாஞ்சையா” வாரி சுருட்டி சிறையிலடைத்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார்.
திருச்சி, ஜீயபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் டாஸ்மாக் கடை அருகே, பட்டாக்கத்தியுடன் ஏரியாவுல நான்தான் ரவுடினு சவுண்டு விட்டுக் கொண்டிருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாரின் உதவி எண்ணுக்கு 9487464651 தகவல் கிடைக்க, எஸ்.பி.யின் உத்தரவையடுத்து களமிறங்கிய லோக்கல் ஜீயபுரம் போலீசார் கோப்பு கீழத்தெருவைச் சேர்ந்த வெறும் 20 வயதேயான பிரசாந்த் என்பவனை தட்டி தூக்கி வந்திருக்கிறார்கள்.
போலீசின் விசாரணையில், சோமரசம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கோப்பு நாகராஜின் தீவிர ஆதரவாளர் இந்த பிரசாந்த் என்பதும்; Koppu Nagaraj Fans Club, Koppu Nagaraj Network, Facebook, Youtube, Instagram உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் அண்ணன் கோப்பு நாகராஜுடன் சேர்ந்து ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டும்; அண்ணன் நாகராஜ் அறுவா தூக்கிய அருமை பெருமைகளையெல்லாம் பட்டியலிட்டு பட்டி தொட்டியெங்கும் புகழ் பரப்பும் கொ.ப.செ.வாக வலம் வந்த ஆசாமி என்பதும் தெரியவந்திருக்கிறது.
இதுதவிர, மறைமுகமாக சில பல காரியங்களையும் அண்ணன் நாகராஜுக்காக தம்பி பிரசாந்த் செய்து வந்திருப்பதும் போலீசாரின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
பட்டாக்கத்தியுடன் வலம் வந்து போலீசில் வகையாய் சிக்கியிருக்கும் பிரசாந்த், பி.காம் பட்டதாரி என்பதுதான் கொடுமை. பொதுவில் கல்லூரி மாணவர்கள் காஸ்ட்லி பைக், ஹைடெக் மொபைல் சகிதமாக கெத்து காட்டும் பேர்வழி என்ற பெயரில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு வழக்கில் சிக்கி வருவது ஒருபுறமிருக்க; சிலர், கஞ்சா போதைக்கும் லோக்கல் போக்கிரிகளின் கெட்ட சாகவாசத்தாலும் கெத்து காட்டி வழக்கில் சிக்கி வருகின்றனர்.
இன்றைய இளசுகள் மத்தியில், சோசியல் மீடியாவில் கெத்து காட்டுவதென்பதே தனிவகை போதையாக மாறிப் போயிருக்கும் சூழலில்; அதிலும் லைக்குகளை அள்ளுவதற்காக எதையும் துணிந்து செய்யும் மனநிலையையும் தோற்றுவித்திருக்கும் பின்னணியில்; இதுபோல சாகசங்களை செய்யத் துணிந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது, திருச்சி மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கை.
ஆதிரன்.