கண்ணைத் திறந்து வைத்த கல்யாணம்…

0

கண்ணைத் திறந்து வைத்த கல்யாணம்…

பச்சைமலை கறி வெட்டு
பச்சைமலை கறி வெட்டு
கொல்லிமலையில் ஒரு திருமணத்திற்கு நண்பருடன் சென்றிருந்தோம். நாமெல்லாம் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ எவ்வளவு தூரம் வணிகமயப்படுத்தப் பட்டிருக்கிறோம், எந்த அளவுக்கு சக மனிதர்களால் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று அழுத்தப்படுகிறோம் என்பது முகத்தில் அடித்தாற்போல் புரிய வைத்தது சில மணி நேர அந்த நிகழ்ச்சி. காலை ஆறு மணிக்கு மேல் அரப்பளீசுவரர் கோவிலில் திருமணம் என்று சொல்லியிருந்தார்கள். கோவில் அலுவலகத்தில் முறைப்படி ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்திருந்தார்கள்.
ரோஸ்மில்
ஆறரை மணி சுமாருக்கு கோவிலில் தெருக்கூத்து ஆடல் பாடலுடன் ஒரு குழு ஆடிக்கொண்டிருந்தனர். அங்கு நடந்த இரண்டு மூன்று திருமணங்களுக்கும் தாலி எடுத்துக்கொடுக்க நூல் போட்ட யூநாமர் யாருமில்லை. அவரவர் ஊர்ப் பெரியவர்களே எடுத்துக்கொடுத்தனர். வேற்றுமொழி மந்திரமுமில்லை, தமிழ் மந்திரமுமில்லை. தாலியைக் கட்டியவுடன் மஞ்சளில் நனைத்த அரிசியைத் தூவி வாழ்த்தினர் உடன் வந்திருந்தவர்கள்.
மிகக் குறைவான நகைகள், அலங்கார அணிகள், மறுபடியும் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு உடுத்தத்தக்க வகையிலான பட்டுப்புடவை மணப்பெண்ணுக்கு. மாப்பிள்ளை ஒரு பட்டு வேட்டியில் மாலை மட்டுமே அணிந்திருந்தார். தாலி கட்டியதும் முக்கியமான சிலருடன் தம்பதியினர் முதலில் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று உணவருந்திவிட்டு மதியத்துக்கு மேல் மணமகள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னார்கள். நாங்கள் மணமகள் தரப்பு என்பதால் உடனே அவர்களது வீட்டுக்குக் கிளம்பி விட்டோம்.
பச்சைமலை கல்யாணம்
பச்சைமலை கல்பச்சைமலை கல்யாணம்யாணம்
- Advertisement -

- Advertisement -

மண்டபத்தில் வைத்து சோறு போடும் வர்த்தக நிகழ்வு போல அவர்களுக்கு வழக்கமில்லை. காலை உணவுக்கு கோழி, ஆடு, பன்றிக்கறி தயாராகிக் கொண்டிருந்தது. உறவினர்கள், ஊர்க்காரர்களே சேர்ந்து கறி வெட்டி சமைத்துக்கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொல்லிமலையில் வழியெங்கும் பன்றி இறைச்சிக் கடைகளே அதிகம் தென்பட்டன. ஆட்டுக்கறி மிகக்குறைவு, கோழிக்கறி கீழே இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கானது போலும்; யாருமே அதை சீண்டுவதில்லை. இருபது பேருக்கும் மேல் ஆங்காங்கே அமர்ந்து கறி வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக அங்கேயே மூன்று ஹாலோபிளாக் கற்களை வைத்து அடுப்பை மூட்டி கறி வெந்து கொண்டிருந்தது. ஒரு மாமரக் குச்சியை வெட்டி பட்டையைச் சீவி விட்டு கிளறிக் கொண்டிருந்தனர்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ஆட்டு ஈரல், பன்றி ஈரலை ஒவ்வொன்றாக ஒரு குச்சியில் குத்தி நெருப்பில் சுட்டுக் கொடுத்தவண்ணம் இருந்தனர். அக்குழந்தைகளும் வேறு எதுவுமே கேட்காமல் கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். நம் சமவெளிப் பகுதியில் குழந்தைகள் பண்ணும் அழிச்சாட்டியமும், உலகத்திலேயே அதுதான் அதிசயக் குழந்தை என்று பாவித்துப் பெற்றோர்கள் பண்ணும் அலும்பும் தோன்றி மறைந்தது.
பச்சைமலை கறி வெட்டு
பச்சைமலை கறி வெட்டு
ஒரு பெரிய குழி வெட்டி அதன்மீது கடப்பாரையைக் குறுக்காகப் போட்டு, பாத்திரத்தை வைத்து அந்தக் குழிக்குள் விறகு போட்டு சோறு ஆக்குவது, கறி வேக வைப்பது என மொத்த சமையலையும் முடித்துவிட்டனர். மொத்த சமையலும் அவர்கள் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த விறகில் முடிந்துவிட்டது. ஒரு எரிவாயு சிலிண்டர் கூட தேவைப்படவில்லை. இலையைப் போட்டதும் சோறு போட்டு வரிசையாக கோழிக்கறி, ஆட்டுக்கறி, பன்றிக்கறி குழம்பு ஊற்றினார்கள். எந்தக் கறி கேட்டாலும் unlimited serving. அடுத்து இரசம், மோர் மட்டுமே. உப்பு கூட கேட்டால் மட்டுமே வைத்தார்கள்; எல்லா இலைக்கும் தேவையில்லாமல் வைக்கவில்லை.
பொறியல், கூட்டு, வடை, அப்பளம், பிரியாணி, சில்லி சிக்கன், காளான், இட்லி, தோசை, லட்டு, பாயாசம், வெற்றிலை பாக்கு என எதுவும் கிடையாது. வாழைப்பழம் மட்டும் தேவைப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்று ஓரிடத்தில் வைத்திருந்தார்கள். டீ, காபி, ஐஸ்கிரீம், குளிர்பானம், பாதாம் பால் என எந்தவிதமான சர்க்கரை சேர்க்கப்பட்ட பதார்த்தங்கள் அங்கு வைக்கப்படவே இல்லை. தேநீர் இருக்காதா என்று தேடிப் பார்த்துவிட்டு அமைதியாக அடங்கிக் கொண்டோம்.
4 bismi svs
மொத்தத்தில் சர்க்கரை என்ற பொருளுக்கு அந்தக் கல்யாண விருந்தில் ஒரு கிலோ அளவுக்குக் கூட தேவை இல்லை.
பந்தியில் அமர்ந்த அத்தனை பேரும் போட்ட சோற்றை அப்படியே சாப்பிட்டனர். டயட், சுகர், மாத்திரை போடனும், கம்மியா ரைஸ் வையுங்க என்ற அனத்தல் யாரிடமும் இல்லை. சைவம் என்பவர்களுக்கு அங்கு வேலையே இல்லை. நாலு காசு சேர்ந்தவுடன் சாய்பாபா, ப்ரத்தியங்கரா தேவி, சங்கடஹர சதுர்த்தி, சைவம் என்று வருபவர்கள் இரசம், மோர் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.
வீட்டுக்கு வெளியில் மட்டும் பிளாஸ்டிக் நாற்காலி போட்டிருந்தனர். உறவினர்கள் வீட்டுக்குள் சென்று போர்வை விரிக்கப்பட்ட தரையில் உட்கார்ந்து கொள்கின்றனர். வந்திருந்த எல்லா வயதுப் பெண்ளும் தரையில் அமருகின்றனர். எனக்கு முட்டி வலி, இடுப்பு வலி, இடுப்பு மடிப்புல வலி என்ற பேச்சே இல்லை.
நம் சமவெளியில் நாற்காலியால் நாசாமாகப் போன உறவுகள் எத்தனை எத்தனை என்று யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. என்னை சோபாவுல உக்கார வைக்காம பிளாஸ்டிக் சேர்ல உக்கார வச்சாங்க, வெளில சேர் போட்டு உக்கார வச்சிட்டாங்க, எனக்கு உடைஞ்ச சேர் போட்டுட்டாங்க என்று எத்தனை பஞ்சாயத்துகள்!
சமையல்
சமையல்
வந்திருந்த மொத்தக் கூட்டத்தில் நானும், நண்பரும் மட்டுமே கொஞ்சம் வயிறைத் தடவிக் கொண்டிருந்த நபர்கள். நாம இன்னும் கொஞ்சம் தொளதொளன்னு இருக்கற சட்டை போட்டுட்டு வந்திருக்கனும் என்று தோன்றுகிற அளவுக்கு அங்கிருந்த எல்லோரும் கச்சிதமான எடையில் இருந்தது ஆச்சரியம்.
மணப்பெண்ணின் பெற்றோர் உட்பட அத்துனை பேரும் மிகச்சாதாரணமான உடையிலேயே இருந்தனர். யாரும் கூடுதலாக ஒரு நகை, வளையல் கூட அணிந்து வரவில்லை. இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்தான் கல்யாணம் நடந்து முடிந்தது என்று நம்ப முடியாத அளவுக்கு இயல்பாக இருந்தனர். இந்தத் திருமணத்தில் வசதி குறைவான குடும்பத்தார் என்றும் சொல்லிவிட முடியாது. மணப்பெண் வீட்டாருக்கு நிலபுலன்கள், மூன்று JCB, டிராக்டர், லாரி என நிறைவான வசதி.
இங்கே நாம் கல்யாணத்துக்கு ஒரு மாதம் முன்னதாக இருந்தே பண்ணும் காரியங்கள் எத்தனை எத்தனை என்று நினைத்துப் பார்த்தால் எவ்வளவு தூரம் ஊருக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறோம், சடங்கு சம்பிரதாயம் பாரம்பரியம் என வாழ்க்கையில் பத்து பைசாவுக்குப் பயனில்லாதவற்றை எப்படியெல்லாம் தூக்கிச் சுமக்கிறோம் என்று மலைப்பாக இருக்கிறது.
ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து நிறைவான வாழ்க்கை வாழ ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டியதில்லை, பவர் ஏற்றப்பட்ட மந்திரங்கள் சொல்ல பெசல் பவர் கொண்ட ஆட்கள் தேவையில்லை, நகைகள், ஆடை அணகலன்கள், வர்த்தக மண்டபங்களில் ஆடம்பர உணவுகள், அர்த்தமற்ற சடங்குகள் என எதுவுமே தேவையில்லை. இருந்தாலும் இதையெல்லாம் விட்டு வெளியேற முடியுமா என்றால் நம்மிடம் பதிலில்லை.
– RS பிரபு 
5 national kavi
Leave A Reply

Your email address will not be published.