உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு.
உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ளது அருள்மிகு உத்தமர் கோயில். மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் பக்தர்களால் மும்மூர்த்திகள் ஸ்தலம் என போற்றப்படுகின்றது.
இக்கோயிலில் சிவகுரு, பிரம்மகுரு, விஷ்ணு குரு, ஞானகுரு, தேவகுரு, அசுரகுரு , சுக்ரகுரு என ஏழு குருவும் ஒரே கோவிலில் எழுந்தருளியதால் , “சப்தகுரு ஸ்தலம் ” என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷபராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு காலை ஏழு குருவிற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்புபரிகார ஹோமம் நடைபெற்றது . இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் பெயர் , ராசிக்கு பரிகாரம் செய்து கொண்டனர்.. மாலை குருப்பெயர்ச்சி நேரமான 5 – 21 -க்கு கோவிலில் தென்திசை நோககி எழுந்தருளியுள்ள சிவகுருவான தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, வண்ண மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு அர்ச்சனையுடன் கூடிய மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர். மேலும் குருப்பெயர்ச்சியைத் தொடர்ந்து பக்தர்கள் தட்சிணாமூர்த்தி சன்னதியில் தங்கள் பெயர், ராசி நட்சத்திரத்திற்கு பரிகாரப் பொருட்களை அர்ச்சகரிடம் கொடுத்துஅர்ச்சனை செய்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
குருப்பெயர்ச்சி விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் செயல் அலுவலர் சிதம்பரம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
-ஜோஷ்