தூய்மைப்பணியாளர்களோடு ”இன்பத் தீபாவளி !
தூய்மைப்பணியாளர்களோடு ”இன்பத் தீபாவளி !
பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் இல்லாமல் தீபாவளி இல்லை. பெரிய நிறுவனங்கள் தொடங்கி, அரசு அலுவலகங்கள் வரையில் அவரவர் தகுதிக்கேற்ப தமது ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வது பொதுவான ஒன்று.
”இவர்களின்றி பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லை” என சுட்டும் விதமாக புதுமை முயற்சியாக தூய்மைப்பணியாளர்களோடு ”இன்பத் தீபாவளி” நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார். திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கணேசன், அனூஜ் டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி தனசேகரன், திருச்சி அறக்கட்டளையின் நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்திருக்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 200 தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை – இனிப்புகள் அடங்கிய பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் களத்தில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களின் அர்ப்பணிப்புணர்வை பாராட்டியதோடு, அவர்களில்லாமல் நாம் சுகாதாரத்தோடு வாழ முடியாது என்பதை சுட்டிக்காட்டி நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
திருச்சியில் மாவட்ட ஆட்சியரே முன்னின்று நடத்தியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்று தூய்மைப்பணியாளர்கள் கௌரவிக்கப்பட்ட நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தனது சொந்த நிதியில் இருந்து 500 மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை கௌரவித்திருக்கிறார்.
திருச்செங்கோடு நகராட்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு உள்ளிட்டோர் ஏற்பாட்டில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசுப்பொருட்களை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கியிருக்கின்றனர்.
தூத்துக்குடியில், “அன்பு விலாஸ் பழக்கடை நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராஜு, தனது பங்களிப்பாக தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்புகளை வழங்கியிருக்கிறார்.
உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மூத்த தூய்மைப்பணியாளர்கள் சிலரின் கால்களை கழுவி பாத பூஜை செய்து அவர்களை கௌரவித்திருக்கின்றனர் சார்பு நீதிபதி உள்ளிட்ட வழக்கறிஞர்களும் உள்ளூர் பிரமுகர்களும்.
வெளியில் செய்தியாகாமல் உள்ளூர் அளவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் தங்கள் அளவில் தூய்மைப்பணியாளர்களுக்கு தனிக்கவனம் கொடுத்து தீபாவளி பரிசுகளை வழங்கியிருக்கின்றனர்.
தமிழகத்திற்கேயுரிய தனித்துவமான நிகழ்வு இதுவென்றால் நிச்சயம் அது மிகையல்ல. அதேசமயம், நெருடலை ஏற்படுத்திய வருத்தத்திற்குரிய தகவல் ஒன்றும் இருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் கும்பலாக நிற்கவைத்து அழைத்து வந்திருந்தனர் என்பதுதான் அது. இப்போது என்றில்லை, எப்போதும் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய நடைமுறை இது.
இதுபோன்ற பண்டிகை காலங்களில் மட்டும் அவர்களை கௌரவித்து மகிழ்வதோடு நில்லாமல், எப்போதும் அவர்களை கண்ணியத்தோடு நடத்தவும் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
– அங்குசம் புலனாய்வு குழு.