’ஜெயம்’ ரவி—ஆர்த்தி விவாகரத்து விவகாரம்! களத்தில் குதித்த குஷ்பு!
இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் ‘ஜெயம்’ரவி-ஆர்த்தி தம்பதிகளுக்கிடையே விவகாரத்து விவகாரம் மீடியாக்களில் வெளிச்சத்திற்கு வந்த போது, இருவருமே மெளனம் காத்தனர். ஆனால் பதினைந்து நாட்களுக்கு முன்பு, அதாவது செப்.-09—ஆம் தேதி, “மூன்று மாதங்களுக்கும் மேலாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லாததால், எனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன். இந்த விசயத்தில் நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. இனியும் இந்த விசயத்தில் மறைக்க எதுவுமில்லை என்பதால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்ததை எண்ணி வருந்துகிறேன்” என ஒரு அறிக்கை மூலம் விவாகரத்தை உறுதி செய்தார் ஜெயம் ரவி.
அத்துடன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து அளிக்கும்படி குடும்பநல நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார் ரவி. இந்த மனு மீதான முதல்கட்ட விசாரணை வருகிற அக்டோபர் மாதம் 10—ஆம் தேதி முதல்கட்ட விசாரணைக்கு வருகிறது.
இரண்டு மகன்கள் பிறந்த பிறகும் ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு கடுமையான சந்தேகம் வந்த பிறகே குடும்ப வாழ்க்கையில் புயல் மையம் கொள்ள ஆரம்பித்தது. இதுவே மிகத்தீவிரமாகி, பலத்த சேதாரத்தை ஏற்படுத்தும் முன்பே, கோர்ட்டுக்குப் போய்விட்டார் ரவி. விவாகரத்து விசயத்தில் ரவி முந்திக் கொண்டு கோர்ட்டுக்குப் போனது தான் ஆர்த்திக்கும் அவரது அம்மா சுஜாதாவுக்கும் கடும் கோபத்தையும் ஆத்திரத்தையும் கிளறிவிட்டது.
இதன் எஃபெக்ட் தான், ரவியின் பிரிவு அறிக்கை வெளியான இரண்டாம் நாளே, ஆர்த்தியிடமிருந்து எதிரடி அறிக்கை வெளியானது. அதில் “மூன்று மாதங்களாக ரவியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. எனவே இந்த விவாகரத்தில் எனக்கு விருப்பமில்லை. அவராக முந்திக் கொண்டு தான் கோர்ட்டுக்குப் போயுள்ளார்” என தடாலடியாக ரவி மீது பாய்ந்தார் ஆர்த்தி.
அத்துடன் விடாமல், பக்கா கிரிமினல் ப்ளான் போட்டு, கோவாவைச் சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ரவிக்குத் தொடர்பு இருப்பதாக நியூசைக் கசியவிட்டனர் ஆர்த்தியும் சுஜாதாவும். அத்துடன் கெனிஷாவுடன் ரவி இருக்கும் போட்டோக்களையும் அவருடன் ஊர் சுற்றியதற்கான ஆதாரங்களையும் ஆத்திரத்துடன் அள்ளிவீசினர் ஆர்த்தியும் அவரது அம்மாவும்.
இவர்களின் அதிரடிக்கு எதிரடியாக ஜெயம் ரவியும் அனலைக் கிளப்பினார். “மூன்று மாதங்களாக என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என பொய் சொல்கிறார் ஆர்த்தி. அவரிடமும் அவரது தாயாரிடமும் எனது குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பேசியும் பலனில்லாததால் ஆர்த்திக்கு இரண்டு முறை டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினேன். அதை அவர் பெற்றுக் கொண்டதற்கான அக்னாலெட்ஜ்மெண்ட் என்னிடம் இருக்கிறது. விவாகரத்து முடிவு குறித்து எனது மூத்த மகனிடம் விளக்கிச் சொன்ன போது அதை புரிந்து கொண்டான். இளைய மகனுக்கு அதற்கான வயது இல்லை. ஆனால் இரு மகன்களும் என்னுடன் தான் இருக்கிறார்கள்.
எனது மாமியார் வீட்டிலிருந்து வரும் போது, போட்ட பேண்ட்-சட்டையுடன் தான் வெளியே வந்தேன். நயா பைசா கூட அவர்களின் காசுக்கு ஆசைப்பட்டதில்லை. என்னிடம் இருக்கும் பணமெல்லாம் நான் உழைத்து சம்பாரிச்சது. பெற்றோர் இல்லாத கெனிஷாவுடன் என்னை கனெக்ட் பண்ணிப் பேசுவது அசிங்கம். அவர் சிறந்த மனநல ஆலோசகர். அவரை நான் சந்திக்கவில்லை என எந்த இடத்திலும் சொன்னதே இல்லை.
என்னைப் பற்றி ஆர்த்தியிடமிருந்தும் அவரது அம்மாவிடமிருந்தும் இன்னும் என்னென்ன பித்தலாட்ட செய்திகள் வரப்போகுதோ? எது வந்தாலும் சந்திப்பேன்” என சவுண்டாக பேசியுள்ளார் ரவி.
இருவருக்கும் பொதுவான தரப்பிடம் நாம் பேசிய போது, “ஜெயம் ரவியைவிட ஆர்த்தியின் குடும்பம் செல்வச் செழிப்பில் மிதக்கும் குடும்பம். ஆர்த்தியின் அம்மா, அதாவது ரவியின் மாமியார் சுஜாதாவுக்கு இது கெளரவப் பிரச்சனையாகிவிட்டது. விவாகரத்தைப் பொறுத்த வரையில் கணவனும் மனைவியும் மனம் ஒத்துப் போகாமல் விலகிக் கொள்வதாக ஒத்துக் கொண்டு மனு செய்தாலே விவாகரத்து கிடைக்க குறைந்தது ஒருவருடம் ஆகும். ஆனால் ஜெயம் ரவி மட்டும் முந்திக் கொண்டு மனு போட்டதால் சுஜாதாவுக்கு செம கடுப்பு. அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து கொடுத்துவிடக்கூடாது என்கிற கெளரவப் பிரச்சனை தலை தூக்கி, அது கர்வமாக மண்டைக்குள் ஏறியதால், ஜெயம் ரவியின் இமேஜை டேமேஜ் பண்ணுவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.
இதில் ஃபர்ஸ்ட் ஸ்டெப் தான், தனக்கு நெருக்கமான தோழியும் பிஜேபி பெரும்புள்ளியுமான நடிகை குஷ்புவைவிட்டு, “மனைவியைப் பிரிபவன் மனுசனே இல்லை. அவன் வாழவும் தகுதியில்லை” என காட்டமான பதிவைப் போட வைத்துள்ளார்” என்கிறார்கள். இதற்கடுத்து ஆர்த்திக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவும் களம் இறங்கலாம். கோலிவுட்டில் வார்த்தைப் போர் அனல் பறக்கலாம்.
ஓகே ரைட்டு… அப்ப கணவனைப் பிரிபவள் மனுஷியா? இல்லையா? இப்படி ஒரு அட்டாக் ரவி தரப்பிலிருந்து வரலாம்.
“வரலாம்…வரலாம்…வா…”
–மதுரை மாறன்