கடவுள் பெயரில் ஜோப்டி திருடர்கள்………….
கடவுள் பெயரில் ஜோப்டி திருடர்கள்………….
வசந்த பஞ்சமி தங்கம் வாங்குங்க அப்படின்னு எந்த சேனலை வைத்தாலும் விளம்பரம்மோ விளம்பரம். பஞ்சமி நிலம் தெரியும் அது என்னங்கய்யா வசந்த பஞ்சமி என தேடியபோது ஒருயிடத்தில் படித்தது.
தை மாத அமாவாசைக்கு பிறகு வளர்பிறை திதியில் வரும் பஞ்சமி திதியை வசந்த பஞ்சமி என்றும் அழைப்பார்களாம். பிரம்மாவின் மனதில் இருந்து சரஸ்வதி தேவி அவதரித்த நாள் தான் வசந்த பஞ்சமி நாள் என்கிறார்கள். வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டால் அனைத்து கலைகளிலும் முன்னேற்றம் பெறுவதோடு, ஆன்மீகத்திலும் உயர்நிலை பெற்று ஞானமும் பெறலாம், இந்நாளில் வடமாநிலங்களில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்வார்களாம்.

இந்த கதையில் இருந்து எனக்கு இரண்டு கேள்விகள் உருவாகிறது. ஒன்று, பிரம்மாவின் மனதில் இருந்து சரஸ்வதி உருவானவர் என்றால் அது அவரது மகள் தானே, பின்ன ஏன் அவருக்கு மனைவியாக்கி வச்சியிருக்காங்க?
இரண்டாவது, சரஸ்வதி கல்விக்கு தானே அதிபதின்னு சொல்வாங்க, திடீர்னு என்ன தங்கத்துக்கு ஷிப்ட் செய்யறாங்க?
மதத்தின் பெயரில் கலவரம் மட்டும்மல்ல மக்களை மந்தைகளாக்கி பெரும் வர்த்தகம் நடந்துக்கொண்டு இருக்கிறது.
இதை இவ்வளவு உறுதியாக சொல்லக்காரணம், 7, 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என ஒன்றை சங்கிகளின் ஆஸ்தான பத்திரிக்கை ஆன்மீக செய்தி எழுதியது, அதுபரவி பெரும் கூட்டம் திருவண்ணாமலைக்கு கிரிவலப்பாதையில் உள்ள குபேர கிரிவலத்திற்கு வரத்துவங்கியது. இது என்னடா புதுசா இருக்கு என நினைத்த அண்ணாமலையார் கோவில் நிர்வாகம், குபேர கிரிவலம் என ஒன்று கிடையாது என அதிகாரபூர்வமாக மறுத்தது. அதனை எவன் கேட்டான்.
இப்போது பௌர்ணமி கிரிவலம் போல் குபேர கிரிவலம் பெரியதாக வளர்ந்து நிற்கிறது. அப்படியொரு நாளே இல்லை என அதிகாரபூர்வமாக சொன்ன அதே அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் மற்றும் பூஜை செய்பவர்கள், இரண்டு ஆண்டுகளில் பக்காவான ஏற்பாடுகளை செய்யத்துவங்கி, சிறப்பு அலங்காரம், அர்ச்சனை எனச்செய்து பக்காவாக கல்லா கட்டுகிறது. விவிஐபிகள் கூட வரிசைக்கட்டி வந்து நிற்கிறார்கள். அண்ணாமலையாரை கூட மறந்துபோகும் அளவுக்கு ஆன்மீக கட்டுரைகள் அடுத்தடுத்து விதவிதமாக குபேர கிரிவலத்துக்கு எழுதிவருகின்றனர்.
முன்ன இல்லன்னு சொன்னிங்க, இப்போ எப்படிடா இப்படியொரு நாள் இருக்கு என யாரும் இதுவரை கேட்கவில்லை.
வடமாநில பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் புகுத்தி பெரும் வர்த்தகம் நடக்கிறது. என்னவென்றே தெரியாத அட்சயதிருதியை புகுத்தி அந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கமாக வீட்டில் சேரும் எனச்சொல்லி கடந்த சில ஆண்டுகளில் அது ஒரு பெரும் வியாபாரமாக வளர்ந்து நிற்கிறது.
இப்போது வசந்த பஞ்சமி என்பதை புகுத்தி வியாபாரத்தை பெருக்கச்செய்கிறார்கள். இதனை யார் செய்கிறார்கள் என நுணுக்கமாக பார்த்தால் வடஇந்திய மார்வாடி, பானியா சமூகம் தான் தென்னிந்தியாவிலும் இதனை செய்கிறது. கடவுள் பெயரில் எதை சொன்னாலும் நம்புகிறார்கள் என்பதற்காக வர்த்தகத்துக்காக புதுப்புது பக்தி நாட்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி வந்தபின் பகுத்தறிவு என்பது இல்லாமல் போய்விடுகிறது…
Raja Rajpriyan