சிந்தித்துக் கொண்டே கண் அயர்ந்த தோழர் கா. சின்னய்யா!
ஏப்ரல் 13, 1919 – வரலாற்றில் மறக்கமுடியாத நாள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாள். குழந்தைப் பருவ பகத்சிங் புரட்சிக்காரனாக உருவெடுத்த நாள்.
ஏப்ரல் 13, 2025 எனக்கு மறக்க முடியாத நாள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தென் சென்னை மாவட்டச் செயலாளராக எனக்கு அறிமுகமான தோழர் கா. சின்னய்யா மறைந்த நாள்.
கம்யூனிஸம் என்பது வாழ்வியல். கம்யூனிஸ குணாம்சங்களை புரிந்துக் கொள்ள வேண்டும். அதை வாழ்வியலாக்கிக் கொள்ள வேண்டும்.
இயக்கவியல் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டால் எத்தகையச் சவால் மிக்க சூழலையும் எதிர்கொள்ள இயலும். மக்களின் தேவைகளை கோட்பாட்டின் அடிப்படையில் கோரிக்கையாக உருவாக்கும் ஆற்றலே கம்யூனிஸ்ட்டாக ஒருவர் செயல்படுவதன் அடையாளம்.
இவை அனைத்தும் தத்துவத்தின் அடிப்படையிலான இயக்கத்தில் செயல்பட தேவையான அடிப்படை குணாம்சங்கள். இத்தகைய பண்புகளைக் கொண்ட ஊழியர்களக் கொண்டதே கம்யூனிஸ இயக்கம் என்பதை தோழர் கா. சின்னய்யா அவர்களின் அணுகுமுறை மூலம் நான் உணர்ந்துக் கொண்டவை.

ஒல்லியான உருவமாக இருந்தாலும், வலுவாக வாதத்தை வைக்கும், உறுதியுடன் செயலாற்றும் விறுவிறுப்பான தோழர் கா.சின்னய்யா அவர்களின் உருவமே எனது நெஞ்சில் பதிந்திருந்தது.
மிகவும் மெலிந்த உடலாய், தாங்க முடியாத வலியின் வேதனையில் தோழர் கா. சின்னய்யா அமர்ந்திருக்கும் படத்தை 13.04.2025 காலை தீக்கதிர் நாளிதழில் பார்த்து அதிர்ந்து போனேன்.
சற்று நேரத்தில், தோழர் பாலச்சந்தர் அவர்கள் தொலைபேசியில் தோழர் கா. சின்னய்யாவின் உடல் நலம் குறித்து தெரிவித்தார்.
காலையில் இரண்டு தவிர்க்க முடியாத வேலைகளை முடித்துக் கொண்டு, தோழர் கா. சின்னய்யா வீட்டிற்கு விரைந்தேன்.
தோழர் சிவஞானம் அவர்கள் குரோம்பேட்டையில் இருந்து என்னை அவர் வண்டியில் அழைத்துச் சென்றார்.
படுக்கையில் பாதி மயக்கத்தில் படுத்திருந்த தோழர் கா. சின்னய்யா அவர்களைப் பார்த்ததும், எனக்கு பேச்சே வரவில்லை.
பெயரைச் சொன்னேன், கையைப் பிடித்துக் கொண்டார், கண்களின் விரித்துப் பார்த்து புருவத்தை உயர்தினார். உங்களைப் பார்த்ததும் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் என்று அருகில் இருந்தவர் கூறினார்.
எனக்கு அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
கையை விலக்கிக் கொண்டு பக்கத்தில் அமர்ந்தேன்.
மீண்டும் மீண்டும் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்.
அவர் படும் துயரம் என்னால் தாங்க முடியவில்லை. எனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவரின் உறவினர்களிடம் பேச முயற்சி செய்தேன். முடியவில்லை. விடைபெற முயற்சித்தேன். அவரின் பார்வை, அவரின் சைகைகள் விடைத் தர மறுப்பதை எனக்கு உணர்த்தியது.
தமிழில் மா. சிந்தனா மொழிபெயர்ப்பு செய்து சிந்தன் புக்ஸ் வெளியிட்ட “பேசும் சதைப் பிண்டம்” என்ற டால்டன் ட்ரம்போவின் நாவலில் வரும் போர் வீரன், தனது கை கால்களை இழந்து, பேச முடியாத நிலையில், தனது சிந்தனையை வெளிப்படுத்த போராடுவான். அந்த கதாபாத்திரம் எனது நினைவில் வந்தது. அத்தகைய நிலையில் உள்ளவரின் வலியை உணர உணர எனக்கு அவர் அருகில் இருக்க இயலவில்லை. என்னை மீறி அழுத விடுவேனோ என்று அஞ்சினேன். நான் புறப்படுகிறேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்.
தோழர் கா. சின்னய்யா அவர்களின் மகனின் நண்பர்கள் தேனீர் பருகிவிட்டு செல்லுங்கள் என்று கூறி அமரச் செய்தனர்.
அவரின் மருமகள் தேனீர் தந்தார். அவர்களுடன் தோழர் கா. சின்னையா அவர்களின் இயக்கப் பணிகள் குறித்து பேசிக் கொண்டே தேனீர் குடித்துவிட்டு விடைப் பெற்றேன்.
கால்கள் நடக்க மறுத்தன. எனக்குள் ஏதோ ஒரு போராட்டம். என்ன என்று புரியாமல் தோழர் சிவஞானம் அவர்களின் உதவியுடன் இரயில் நிலையம் வந்தேன்.
தியாகராயர் நகரில் தோழர் வி. பா. கணேசன் அவர்களிடம் நடந்ததைச் சொல்ல முற்பட்டேன், அவர் இறந்துவிட்டாரே என்றார். அதிர்ந்து போனேன்.
சற்று நேரத்தில் தோழர் பாலச்சந்தர் தொலைபேசியில் அழைத்தார், நீங்கள் சென்ற நேரம், அவர் உயிர் பிரிந்த நேரம் இரண்டையும் கணக்கிட்டால், நீங்கள் வீட்டைவிட்டு வீதிக்கு வருவதற்குள் இறந்திருக்க வேண்டும் என்றார்.
எனக்குள் குற்றவுணர்வு அதிகரிக்க தொடங்கியது. ஏதோ சொல்ல அவர் துடித்துக் கொண்டு இருந்த போது, இன்னும் சற்று நேரம் அருகில் இருந்திருந்தால் சொல்ல வந்ததைச் சொல்லி இருப்பாரோ?
எனக்கு அவர் விடைத் தராமல் நானாக வெளியேறியது, நான் மனித குணாம்சத்துடன் இல்லாமல் இருந்திருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. இயந்திரம் போல் அவரைப் பார்த்துவிட்டு வந்துள்ளேன். என்னுள் மனிதம் மரித்துப் போய்யுள்ளதை உணர்கிறேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு கம்யூனிஸ குணாம்சத்துடன் நான் உள்ளது உண்மை என்றால், ஒரு கம்யூனிஸ்டின் இறுதி நொடிகளின் உணர்வுகளை ஏன் என்னால் உணர முடியவில்லை? மனிதனாகவே இல்லாதபோது எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும்? மனிதம் மரித்துப் போய், இயந்திரமாக மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளேன் என்பதே உண்மை.
தோழர் கா. சின்னய்யா அவர்களின் இறுதி நொடிகளின் போராட்டம்தான் என்ன? அதை உணர முடியாததற்கு அவரிடம் நான் எவ்வாறு மன்னிப்புக் கோரப் போகிறேன்?
தோழர் கா. சின்னய்யா அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்வேன். தினம் தினம் ஆயிரம் ஆயிரம் உயிர்களை இழந்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனம், இழக்க இழக்க மன உறுதியுடன் போராடுகிறதே, அதே போல் என்னைப் போன்றவர்கள், மனிதத்தை இழந்திருந்தாலும், கம்யூனிசக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்க இலட்சோப இலட்ச மக்கள் மன உறுதியுடன் அணிதிரண்டுக் கொண்டே இருப்பார்கள்.
உங்களின் உழைப்பு நிச்சயம் வீண்போகாது. உங்களைப் போன்றவர்கள் தங்களின் இளமையைக் கட்சிப் பணிக்காக அர்பணித்ததால் மட்டுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உயிர்ப்புடன் இருக்கிறது.
உங்கள் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்!
மக்கள் தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள்வார்கள்!
சமதர்மம் மலரும்!
புரட்சி வெல்லும்!
செவ் வணக்கம் தோழர் கா. சின்னய்யா!
செங்கொடி உங்கள் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்!
என்றும் உங்களது தோழமை நினைவில்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு