மருத்துவர் ராமதாசு நடத்தியது தமிழைத் தேடி அல்ல; கூட்டணி வைக்கத் திமுகவைத் தேடி……..

0

கடந்த பிப்.21ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு “தமிழைத்தேடி” என்ற பயணத்தைத் தொடங்கினார். மயிலாடுதுறை, தஞ்சை வழியாக 7ஆம் நாள் பயணமாகத் திருச்சியை வந்தடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டமும் 27.02.2023ஆம் நாள் மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்குத் தொடங்குவதாக அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. விழாவில் உரையாற்றும் திருச்சி தமிழ் அமைப்புகள் சார்ந்த பேராசிரியர் கு.திருமாறன், திருக்குறள் முருகானந்தம், பத்திரிக்கையாளர் ஜவஹர் ஆறுமுகம் ஆகியோர் 5.00 மணிக்கே வந்து காத்திருந்தனர். சங்கம் ஓட்டலில் தங்கியிருந்த மருத்துவர் இராமதாசு மேடைக்கு வருவதற்கே இரவு 7.30 மணி ஆனது. காரணம் கூட்டமில்லை. இரவு 7.00 மணியளவில் சுமார் 50 பெண்கள் ஆண்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அமர்ந்தவுடன்தான் கொஞ்சம் கூட்டம் இருப்பதுபோல் தெரிந்தது. ஊடகங்களின் சார்பில் தொலைக்காட்சியினர், பத்திரிக்கையாளர்கள் என நிறைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

மருத்துவர் ராமதாசு நடத்தியது தமிழைத் தேடி
மருத்துவர் ராமதாசு நடத்தியது தமிழைத் தேடி

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சட்டமன்ற உறுப்பினர் கோ.க.மணி தமிழைத்தேடி என்ற பயணத்தின் நோக்கத்தை விவரித்தார். “தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. ஆலயத்தில் இல்லை. வழக்கு மன்றத்தில் இல்லை, கல்வியில் இல்லை என்று இல்லாத இடங்களைப் பட்டியலிட்டார். மருத்துவர் ராமதாசு நல்ல தமிழ் உருவாகவேண்டும் என்று தமிழோசை நடத்தினார். நல்ல தமிழ் பேச மக்கள் தொலைக்காட்சியை நடத்தி வருகிறார் என்று புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்பதை நினைத்து மருத்துவர் ஐயா மட்டுமே கவலைப்படுகிறார். அதனால் தான் இந்தப் பயணம் என்ற வகையில் முடித்துக்கொண்டார்.

- Advertisement -

தொடர்ந்து, பேராசிரியர் கு.திருமாறன் பேச அழைக்கப்பட்டார். அவர் ஒலி வாங்கியின் (மைக்) முன்பு நின்றபோது, தலைமை தாங்கிய கோ.க.மணி அவர் அருகே சென்று 3 நிமிடத்தில் உரையை முடித்துக்கொள்ளக் கேட்டுக்கொண்டார். பேராசிரியர் திருமாறன் பேசும்போது அதையும் குறிப்பிட்டுக் கோ.க.மணிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். மிகசுருக்கமாகவே பேசி முடித்தார்.

அடுத்துப் பத்திரிக்கையாளர் சங்கம் சார்ந்த ஜவஹர் ஆறுமுகம் என்று குறிப்பிட்டுவிட்டு, திருக்குறள் முருகானந்தம் உரையாற்றுவார் என்று கோ.க.மணி அறிவித்தார். அவரும் இரத்தினச் சுருக்கமாகவே முடித்துக்கொண்டார். அடுத்து அழைப்பிதழில் உள்ளவாறு அழைக்கப்பட வேண்டிய ஜவஹர் ஆறுமுகம் உரையாற்ற அழைக்கப்படாமல், மருத்துவர் ஐயா தற்போது நிறைவுரையாற்றுவார் என்று கோ.க.மணி சொன்னவுடன் திருச்சி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஜவஹர் ஆறுமுகம் அழைக்கப்படாதது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

மருத்துவர் ராமதாசு பேசும்போது,“வீட்டில் தமிழ் இல்லை, பள்ளியில் தமிழ் இல்லை, குழந்தைகள் மம்மி என்றே அழைக்கவேண்டும் என்று அம்மாக்கள் விரும்புகிறார்கள்“ என்று குற்றம் சாட்டினார். மேலும்,“இன்று திருச்சி வரும்போது நல்ல செய்தியைத் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டிருந்தது. வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கவேண்டும் என்ற அறிவிப்பைப் பாராட்டுகிறேன். இது என் பயணத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

மருத்துவர் ராமதாசு நடத்தியது தமிழைத் தேடி
மருத்துவர் ராமதாசு நடத்தியது தமிழைத் தேடி
4 bismi svs

வணிகர்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழை இடம் பெறச் செய்யுங்கள். இல்லையென்றால் நாங்கள் கருப்பு மை வாளியோடும் ஏணியோடும் வந்துவிடுவோம். தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் முடித்து 2இலட்சம்பேர் உள்ளனர். இவர்களைக் கொண்டு தமிழ் இல்லாத வணிக நிறுவனங்களின் பெயர்களை அழிக்கவைப்போம். தமிழைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதனால்தான் தஞ்சையில் எங்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைவேந்தர், பதிவாளர், முன்னாள் துணைவேந்தரும் கலந்துகொண்டார்கள் என்று திமுகவுக்கும் தனக்கும் தற்போது ஏற்பட்டுள்ள புரிதலை வெளியிட்டு” மருத்துவர் இராமதாசு மகிழ்ச்சியடைந்து கொண்டார்.

கூட்டம் இரவு 8.10க்கு நிறைவு பெற்றது. சுமார் 40 நிமிடம் மட்டுமே நடைபெற்ற இந்தக் கூட்டம் மருத்துவர் இராமதாசின் புகழ்பாடுவதாகவே அமைந்திருந்தது. திமுக அரசிற்குப் பாராட்டுகள் தெரிவித்தார். பேசும்போது,“இது அரசியலுக்காக நடத்தப்படுகின்ற பயணம் அல்ல” என்று அடித்துச் சொன்னாலும் இது அரசியல் பயணம் என்பதையே வெளிப்படுத்தியது. மேலும் தமிழ் அறிஞர்களைப் பேச அழைத்து 3 நிமிடங்களுள் முடித்துக்கொள்ளுங்கள் என்று காலவரையறை செய்தது பயணத்தின் நோக்கத்தை இழிவு செய்வதாகவே அமைந்திருந்தது. அழைப்பிதழில் பெயர் போட்டு, மேடைக்கு அழைக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் பேச அழைக்கப்படாமை கொடுமையின் உச்சமாக இருந்தது எனலாம்.

மேடைக்கு அழைக்கப்பட்டுப் பேச மறுக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஜவஹர் ஆறுமுகம் முகநூலில்.“நேற்று இரவு அவர் திருச்சி ‌வந்தார். ஏகப்பட்ட செலவில் மேடை விளம்பரங்கள் .‌ ஒரு மணி நேரத்தில் நிகழ்வு முடிந்தது. இந்தப் பரப்புரையை ஆதரித்துத் தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள் ‌பேசுவர் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், பேராசிரியர் கு.திருமாறன் 3 நிமிடங்கள் மட்டுமே பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். திருக்குறள் சு.முருகானந்தமும் சில நிமிடங்களே பேசினார். கடைசியாக வாழ்த்த இருந்த நான் பேச அழைக்கப்படவே இல்லை.  மேடையில் மருத்துவரிடம் எனது நூல் ஒன்றைக் கொடுத்தேன்.‌ அவர் எழுதிய எங்கே தமிழ் ? நூலை எனக்குத் தந்தார். நிகழ்வு எல்லாம் முடிந்த பிறகு கோ.க.‌மணி எங்களுக்குப் பொன்னாடை போர்த்தினார்.

தஞ்சை போன்ற இடங்களில் நடைபெற்ற நிகழ்விலும் தமிழ்ச் சான்றோர் சில நிமிடங்களே பேச அனுமதிக்கப்பட்டதாகச் செய்தி. மருத்துவர் இராமதாசின் தமிழைத் தேடிப் பரப்புரையைத் தமிழ் அமைப்புகள் வரவேற்றதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. சென்னை கவிஞர் ஜெயபாஸ்கரன் என்னோடு பலமுறை பேசிக் கேட்டுக் கொண்டதால் இந்த நிகழ்வில் பங்கேற்க இசைந்தேன். ‌தலைவர் கோ.க. மணியும் இரண்டு முறை என்னிடம் பேசி அழைத்தார். அரசியல் கட்சிகளின் நிகழ்வில் நான் பங்கேற்பது இல்லை. நண்பர் ஜெயபாஸ்கரனுக்காக இதனை ஏற்றேன்.  இதுவரை இந்த மாதிரி ஒரு அவமானம் எனக்கு நேர்ந்தது இல்லை. அரசியல்வாதிகளுக்கு எதையும் சரியாகச் செய்யத் தெரியாது. சுயபெருமை பேசிக் கொள்வதில் குறியாக இருப்பர் என்பதே வெளிப்பட்டது.

தமிழைத் தேடி
தமிழைத் தேடி

இந்த நிகழ்வில் மேடை நிர்வாகம் என்று எதுவும் இல்லை. நிகழ்வுகளை நெறிப்படுத்தவும் ‌நாதியில்லை. காமா சோமா என்று குழப்பமாக இருந்தது.  அதைவிட வேடிக்கை. வரவேற்புரை, நன்றியுரை எல்லாம் ஒரே வார்த்தையில் முடிந்தது. இந்த நிகழ்வுக்கு வருமாறு முகநூலில் நான் அழைப்பு விடுத்தேன். எனது நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். அதில் திருவரங்கம் கேசவன் மேடையில் ஏறி ஜவஹர் ஆறுமுகம் ஏன் பேசவில்லை என்று கோபப்பட்டார்.

நிகழ்வு முடிந்து நான் வீடு திரும்பிய பிறகு நண்பர் கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் திருமாறன் ஆகியோர் என்னை அழைத்துச் சமாதானப்படுத்தினர்.  அரசியல் தலைவர்கள் குறித்த எனது மதிப்பீடு சரியானதே என்பது மீண்டும் நிரூபணம் ஆனது.‌ தமிழ் அமைப்புகள், அறிஞர்கள்  கறிவேப்பிலைகள்.  நான் தவறுகளைச் சகித்துக் கொள்கிறவன் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியில் மருத்துவர் இராமதாசின் தமிழைத்தேடிப் பயணம் என்பது ஒரு விளம்பரம் என்பதைத்தாண்டி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள, தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்களின் ஆதரவு எனக்கிருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ளவே நடத்தப்படுகின்ற பயணமாகவே வெளிப்பட்டது என்பதுதான் சோகம். தமிழ் வாழவேண்டும் என்று பரப்புரை செய்து தாங்கள் வளமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பட்டியலில் பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவனர் ராமதாசும் இணைந்திருப்பது வியப்பான செய்தி இல்லை. வழக்கமான நடைமுறைகள் என்பதே கூட்டத்தில் வெளிப்பட்டது.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.