இளம் பெண்ணிடம் செயின் பறித்தவனுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி
இளம்பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனுக்கு பொது மக்கள் தர்ம அடி .
திருச்சி மாவட்டம் . மணப்பாறை தெற்கு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் வினோஜ் . ரயில்வேயில் டெலகாம் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமளா தேவி(22) இவர்களது 4 வயது மகன் சிரஞ்சீவி என்பவர் மணப்பாறை விராலிமலை ரோட்டிலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.
வழக்கம் போல இன்று மாலை பள்ளி முடிந்ததும் கோமலா தேவி தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். விராலிமலை ரோட்டில் வரும் போது அவரை பின் தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இருவர், அவரை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறிக்க முயன்றனர்.
அப்போது செயினை விடாமல் கோமளா தேவி கெட்டியாக பிடித்துக் கொண்டு கொள்ளையர்களிடம் போராடினார். இதில் அந்த தாலிச் செயின் அறுந்தது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே,பின்னால் வந்து கொண்டிருந்த ஆட்டோகாரர் ஒருவர் கண நேரத்தில் செயல்பட்டு செயின் பறிப்பு நடப்பதை உணர்ந்தார்.
கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓட முடியாதபடி அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் குறுக்கே திடீரென ஆட்டோவை நிறுத்தியதில் இருவரும் தடுமாறிக் கீழே விழுந்துள்ளனர். இதில், ஒரு கொள்ளையன் தப்பி ஓட, மற்றொரு கொள்ளையன் பிடிபட்டான். அவனுக்கு பொது மக்கள் சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.மேலும், கயிற்றால் கையை கட்டினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார், பிடிபட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தியதில், நாகை மாவட்டம் . காடம்பாடி பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்த விஜய் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்த நவீன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
பிடிபட்ட கொள்ளையன் விஜய் என்பவனை பொது மக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் நெற்றி மற்றும் இரு கால்களில் காயம் ஏற்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
கோமளா தேவிக்கு கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொள்ளையனிடமிருந்து பறிக்கப்பட்ட 5 பவுன் தாலிச்செயின் மீட்கப்பட்டது. இளம்பெண்ணிடம் சாலையில் கொள்ளையர்கள் இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.