இந்திய மெய்யியலில் வேதங்கள் மையப் பொருளா? அர்த்தமுள்ள ஆன்மீகம் – பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்
இந்திய சிந்தனை மரபு என்பது இருவகைப்பட்டதாக உள்ளது. ஒன்று கடவுளை ஏற்போர், மற்றொன்று கடவுளை மறுப்போர் என்பதாகும். வேதத்திற்கு அதிகாரம் உண்டு என்றவர்கள் அஸ்தி – இருக்கிறது என்றவர்கள் ஆத்திகர்கள். வேதத்திற்கு அதிகாரம் இல்லை என்றவர் நஸ்தி – இல்லை என்றவர்கள் நாஸ்திகர்கள். வேதம் என்மீது அதிகாரம் செலுத்தலாம் என்றால் நீங்கள் கடவுளை மறுத்தாலும் ஆஸ்திகர்.

வேதம் எங்கள் மீது அதிகாரம் செலுத்தலாம் என்பதை ஏதோ ஒரு புள்ளியில் ஏற்கும், கடவுள் நம்பிக்கையற்ற சாங்கியர்கள் ஆஸ்திகர் வரிசையில் உள்ளனர். வேதம் அதிகாரம் செலுத்துவதை ஏற்க மறுத்த அருகனையும் புத்தனையும் வணங்குகிற சமணமும் பௌத்தமும் நாத்திக மரபில் நிற்கும். எனவே கடவுள் உண்டா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை. வேதத்தை ஏற்கின்றாயா? இல்லையா? என்பதுதான் முதன்மையானது.
வேதம் எப்போதும் மையத்தில் இருந்ததில்லை. அவர்கள் மையமாதலை நோக்கிச் செல்கிறார்கள். நாம் மைய மோதலை நோக்கி செல்கிறோம். வேதத்திற்குள் இருப்பது எல்லாம் சடங்குகள்தான். அதற்கென்று மெய்யியல் – தத்துவம் என்று ஒன்றில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
8ஆம் நூற்றாண்டு வரை வேதம் மையத்தில் இல்லை. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வேதம் மையத்திற்கு வருகின்றது. இந்திய மெய்யியல் வரலாற்றில் வேதத்திற்கு இடமில்லை. மணிமேகலையில், நீலகேசியில் வேதத்தை ஏற்கின்றாயா? மறுக்கின்றாயா? என்ற சிந்தனை வகுப்பு நடைபெறவில்லை.

இந்திய மெய்யியலைப் பற்றி 1. சாங்கியம் 2. மீமாம்சை 3. நியாயம், 4. வைசேடிகம் 5. சமணம் 6. பௌத்தம் ஆகிய 6 பேர் மட்டுமே பேசியிருக்கிறார்கள். நீலகேசியில் குறிப்பிடும்போது வேதத்தை மீமாம்சை என்று குறிப்பிடுகின்றனர். சாங்கியம், வேதவாதம் என்கிற மீமாம்சை நியாயம் என்கிற லோகயுதம் என்று பேசப்படுகின்றது. இதில் வேதம் எங்கே இருக்கின்றது. இதில் எங்கே உள்ளது நீ ஆஸ்திகனா? நாத்திகனா? என்பது.

8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆதி சங்கரச்சாரியார் பெயரில் ஒரு நூல் வருகின்றது. எல்லா சிந்தாந்தகளையும் தொகுத்து கூறும் நூல் என்று சொல்கிறது. இந்த நூலில்தான் வேத ஏற்பும் மறுப்பும் சொல்லப்படுகின்றது. வேதம் இப்போதுதான் மையத்திற்கு வருகின்றது. பின்னர் 14ஆம் நூற்றாண்டில் மாதவச்சாரியார் எழுதிய நூலிலும் வேதத்தை மையப்படுத்தி ஏற்போர், மறுப்போர் என இருப்பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர்.

பின்னர் மாக்ஸ்முல்லர் தொடங்கிய பல ஆய்வாளர்கள் இந்திய மெய்யியலின் மையம் வேதம்தான் என்று சொல்கிறார்கள். உபநிடதங்கள் வழியாக இந்த முடிவுக்கு வந்தார். சமஸ்கிருதத்தில் உள்ள உபநிடதங்களை ஓளரங்கசீப் அவர்களின் அண்ணனின் முயற்சியால் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்னர் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் பின்னர் மாக்ஸ்முல்லர் அதையெல்லாம் படித்துவிட்டு, வேதம்தான் மையம் என்கிறார். வேதம் மையமானது இப்படித்தான்.
— ஆக்கம் : பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்.